Tuesday, July 20, 2010

Inception

படம் வந்தவுடனே பார்த்துவிட வேண்டும் என்று முடிவு பண்ணியாயிற்று. மெமண்டோ, டார்க் நைட் எடுத்த கிரிஸ்டோபர் நோலன் இயக்கம். டி காப்ரியோ நடிப்பு. கேட்கவும் வேண்டுமா?




கதையைப் பற்றி இங்கே அலசமுடியாது. கண்டிப்பாக அனைவரும் படத்தை ஒருமுறையாவது பார்க்கவேண்டும். மீண்டும் ஒரு முறை பார்க்கத் தோன்றும். ஆரம்பத்திலிருந்து கடைசிவரை நம்மை சீட்டுடன் கட்டிப் போடுவது இயக்குநரின் சாமர்த்தியம்.

ஆரம்பத்திலேயே க்ளோஸப் காட்சியில் கடலலைகள் நம்மை ஈர்க்கின்றன. அப்படி என்ன தான் சொல்ல வர்றாங்கனு ஆர்வம் மேலிடுகிறது. கடற்கரையோரமாக விழுந்துகிடக்கும் காப் (டி காப்ரியோ)வை ஒரு துப்பாக்கி தொடுகிறது. அங்க ஆரம்பிக்கும் படம் சடசடவென விரிந்து நம்மை ஒரு பிரம்மாண்ட அனுபவத்திற்கு தயார் செய்கிறது. மற்றபடி படத்தை திரையில் காண்க.

கிரிஸ்டோபர் நோலனை ஒரு விஷயத்துக்காக பாராட்டியே தீர வேண்டும். கஷ்டமான திரைக்கதையை அழகாக விவரிக்கிறார். இரண்டு மணிநேரத்துக்கும் மேல் ஓடும் இப்படம் ஆரம்பத்திலிருந்து கனவு பற்றிய விவரணைகளுடன் எல்லோருக்கும் புரியும் படி தெளிவாக விரிகிறது. ஒவ்வொரு கட்டத்தையும் நமக்கு புரிய வைத்த பிறகே அடுத்த கட்டத்திற்கு போகின்றார். அதுவே அவரின் சிறந்த யுக்தி எனவும் கூறலாம். எல்லாம் எனக்குத் தெரியும் என்ற மனப்பான்மையை நமக்குள் ஏற்படுத்தி வரும் திரைக்கதையில் இறுதிக்காட்சி சம்மட்டியால் அடிப்பது போல மாயையை ஏற்படுத்துகிறார். எல்லாம் முடிந்தது என்று நினைத்திருக்க இல்லை என்று சொல்லாமல் சொல்கிறார். படம் முடிகையில் நிறைய பேர் ஆச்சர்யத்தாலும் குழப்பத்தாலும் ஆர்வத்தாலும் கத்திய காட்சியை பார்க்க முடிந்தது. இதற்கே அவருக்கு ஒரு சபாஷ். “புரிந்த மாதிரி இருந்துச்சு… கடைசியா புரியல..” போன்ற சம்பாஷணைகளை நிறைய திரையரங்கில் கேட்கலாம்.

மற்றபடி படத்தில் நடித்த அனைவரும் படத்தின் தன்மையை உணர்ந்து மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். டிகாப்ரியோ வழக்கம் போல குழம்பிய கதாபாத்திரத்தை திறமையாக கையாண்டுள்ளார். அவருக்கு இன்னுமோர் மகுடம் இந்த படம். அப்புறம் அவரின் குழுவில் வரும் அட்ரையனாகட்டும், யூசுப்பாகட்டும், சைட்டோவாகட்டும்..எல்லோரும் நன்றாக நடித்திருக்கின்றனர். மேலும் படத்தில் வரும் புவிஈர்ப்பை மிஞ்சிய சண்டைக்காட்சியில் சுழலும் அறையில் நடக்கும் சண்டைக்காட்சி காண அவ்வளவு அழகு. அதிகமாக கிராஃபிக்ஸ் உபயோகிக்காமல் நடிகர்களே அதை செய்திருப்பதும் சிறப்பு.

குறிப்பாக சொல்ல வேண்டியது ஒளிப்பதிவு மற்றும் கலை. கனவுகளை வடிவமைப்பது மிக கடினம். ஆனாலும் நம்பும் படி திறமையாக செய்கிறார்கள். அதிலும் பாரிஸ் நகரம் மடித்து வைக்கப்பட்டது போன்றதொரு காட்சி.. நம் கண்கள் விரிகிறது. இப்படி பார்த்து பார்த்து பூரிக்க நிறைய காட்சிகள்.

கண்டிப்பாக சயின்ஸ் பிக்ஷன் கதைகளை விரும்பி பார்ப்பவர்களுக்கு இந்தப்படம் மிகவும் பிடிக்கும். படம் பார்த்தபின் ஏறக்குறைய ஒரு மணிநேரம் படத்தின் காட்சிகள் நம் கண்முன்னே வருவது தவிர்க்க முடியாதது. அந்தளவுக்கு நம்மை படத்துள் ஒன்ற செய்து முடிந்தபின்னும் பல கேள்விகளை மனதில் ஏற்படுத்துவதில் ஜொலிக்கிறார் நோலன்.

முடிவுக்கு இரண்டு மூன்று காரணங்கள் எனக்குத் தோன்றுகின்றன. ஆங்காங்கே அதை கதையினூடே அவர் காண்பித்துள்ளார். ஆனாலும் இன்னமும் முடிவைப் பற்றிய விவாதங்கள் பல தளங்களிலும் நடந்து கொண்டிருக்கின்றன.

இன்செப்ஷன் – கண்டிப்பாக அனுபவிக்க வேண்டிய படம்.

0 comments:


Blogger Templates by Isnaini Dot Com. Powered by Blogger and Supported by ArchiThings.Com - Modern Architecture Design