Tuesday, July 6, 2010

உன்னை தற்கொலை செய்யவா?! - பகுதி 7

கி.பி. 1895.நியூயார்க் நகரம். இன்றைய கால நகரத்தைப் போல இல்லை. அது ஜூன் மாதத்தில் ஒரு நாள். தெருவில் குதிரை பூட்டிய சாரட் வண்டிகளும் ட்ராம் வண்டிகளுக்காக போடப்பட்டிருந்த இருப்புப் பாதைகளும் அமையப்பெற்ற அழகை பறைசாற்றின. கோட் சூட் அணிந்த கனவான்களும் அவர்களின் தரையைப் பெருக்கும் வகையில் நீளமான கவுன் அணிந்த இல்லத்தரசிகளும் குதிரைவண்டியில் ஏறி பயணிக்கும் காட்சி சர்வசாதாரணம். கப்பல் வணிகமும் இதர வணிகமும் அந்நகரை பேர் பெற்ற நகராக்கியிருந்தது. அவ்வப்போது கப்பலில் வந்திறங்கும் பொருட்களை வாங்க நாடெங்கிலும் இருந்து வரும் வியாபாரிகள் கூட்டம் அலைமோதும்.

(1895-ம் காலத்திய நியூயார்க்)

பிரபலமான ஹூஸ்டன் தெருவில் இருந்தது அந்த இரண்டு மாடி கட்டிடம். இரண்டாம் மாடியில் மங்கலான விளக்கு வெளிச்சத்தில் அந்த நபர் தீவிரமான வேலையிலிருந்தார். எவ்வளவு நேரம் அப்படி இருந்திருப்பாரென்று அவருக்குத் தெரியாது. சிறுவயதிலிருந்தே அப்படி தான். அவரது பயணம் நாடுகள் கடந்தது. 1856ல் செர்பியாவில் பிறந்து பின் ப்ரான்ஸ் சென்று படிப்படியாக முன்னேறி இப்போது அமெரிக்காவில். இதுவரையிலுமே அவர் செய்திருக்கும் சாதனைகள் ஏராளம். ஆயினும் அதைப்பற்றியெல்லாம் அக்கறைப்படாமல் அந்த கடின செய்முறையில் ஈடுபட்டிருந்தார். உண்மையிலேயே அவருக்கு அறிவியலில் இருந்த திறமை அதை பிரசுரிப்பதில் இல்லை. இதனாலேயே பல கண்டுபிடிப்புகளை அவர் விட்டுக் கொடுக்க வேண்டியதாயிருந்தது. அவர் நிக்கோலா டெஸ்லா. அவரின் எண்ணற்ற கண்டுபிடிப்புகளுள் குறிப்பிடத்தக்கது ரேடியோ. ஆம். அவர் தான் ரேடியோவிற்கான உரிமையை பெற்றவர்.

அவர் தான் அந்த நேரத்தில் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். இரவு மணி எட்டை தாண்டியிருந்தது. சாப்பிட்டிருக்கவில்லை. இன்னும் சற்று நேரத்தில் தெரு முனையிலுள்ள பேக்கரியை மூடிவிடுவார்கள். அவரின் ஆராய்ச்சிக் கூடமே அவரின் தங்குமிடமும். எப்போதும் உடல்நலத்திலும் சுத்தத்திலும் மிகவும் அக்கறை கொண்டவர். ஆயினும் அன்று மிகமுக்கிய வேலையில் ஈடுபட்டிருந்ததால் சாப்பிடவும் தோணாமல் இருந்தார்.


(டெஸ்லாவின் சோதனைக்கூடம்)

சற்று நேரத்தில் அவர் அறைக்கதவு தட்டப்பட்டது. கவனம் கலைந்து கதவைத் திறந்தால் நீண்ட அங்கி அணிந்த அந்த நபர் புன்சிரிப்புடன் நின்றிருந்தார். அதுவரை இருந்த களைப்பெல்லாம் நீங்கி அவரை வரவேற்றார் டெஸ்லா.

உள்நுழைந்த அந்த நபர் சுற்றும் முற்றும் பார்த்தார். சோதனைக்கூடம் சுத்தமாய் இருந்தது. அழுக்கைக் கண்டால் டெஸ்லாவிற்கு அலர்ஜி என்பது அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. டெஸ்லாவை இதற்கு முன் ஒரு முறை தான் சந்தித்திருக்கிறார். இரு வாரங்களுக்கு முன் நடந்த சந்திப்பு அது.

சம்பிரதாயமாய் வரவேற்ற டெஸ்லா அவர் கையில் இருந்த ரொட்டி பாக்கெட்டைப் பார்த்து புன்னகைத்தார். அவர் வருவது கூட மறந்து போய் எதுவும் வாங்கி வைக்கவில்லை. செர்பிய வாடை அடிக்கும் ஆங்கிலத்தில் பேச்சைத் தொடங்கினார்.

“வாங்க. என் அழைப்பை ஏற்று வந்தமைக்கு மிக்க நன்றி.”

தலையில் இருந்த முண்டாசை சரி செய்து கொண்டே திட்சன்யமான பார்வையில் கனிவாய் அவரைப்பார்த்து புன்னகைத்தார் அவர்.

“நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். அன்று உங்களுடன் நடத்திய உரையாடல் தான் என்னை இந்தளவுக்கு கொண்டு வந்துள்ளது.”

“உண்மையில் நாம் இருவரும் சாராவிற்கு தான் நன்றி சொல்ல வேண்டும்”

மௌனமாய் தலையசைத்தார் அந்த நபர்.

அவர் நினைவில் கடந்த இரு வருடத்திய சம்பவங்கள் ஓடின. இருவருடங்களுக்கு முன் அமெரிக்கா நாடே விழாக் கோலம் பூண்டிருந்தது. உலகிலிருந்து பெரிய பெரிய தலைவர்கள் எல்லோரும் வந்திருந்தனர். எல்லோருடைய பேச்சும் மிகுந்த வரவேற்பை பெற்றது. அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அந்த நபரும் அழைக்கப்பட்டிருந்தார். இளையவராயிருந்த அவரைப்பார்த்து எல்லோரும் ஆச்சர்யப்பட்டனர். மாபெரும் கூட்டத்தைப்பார்த்து சிறிது கலக்கமிருந்தாலும் எதையும் காட்டிக் கொள்ளாமல் எழுந்த அவர், ‘அமெரிக்க சகோதரர்களே சகோதரிகளே’ என விளித்தது தான். அங்கு கூடியிருந்த மாபெரும் கூட்டமே எழுந்து நின்று கரகோஷம் எழுப்பியது. சத்தம் அடங்க இரண்டு நிமிடங்களுக்கும் மேலானது.

அவர் சுவாமி விவேகானந்தா.

இந்தியாவையும் இந்து பௌத்த மதங்களைப்பற்றியும் பேச வந்திருந்தார் அவர். அன்று அவர் ஆற்றிய உரையும் அதற்கு மேற்கோள் காட்டி அவர் பேசிய பகவத் கீதையும் பலரையும் ஈர்த்தது. அவரில் ஒருவர் சாரா பெர்ன்ஹார்ட். ப்ரெஞ்ச் நாடக நடிகை. சிறுவயதிலிருந்தே நாடகத்தில் பால் ஈர்ப்பு கொண்டவரான அவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் சிறந்த நாடக நடிகை என பெயர் பெற்றவர்.

இருமுறை விவாகரத்து பெற்றிருந்த நிலையில் தான் சுவாமி விவேகானந்தாவின் பேச்சினால் ஈர்க்கப்பட்டார் சாரா. அந்த பிரபலமான உரைக்குப் பின் பல இடங்களில் சொற்பொழிவாற்றினார் நரேந்திரநாத். 1895ம் வருடம் நியூயார்க் நகரில் இருமாதங்கள் வேதாந்தம் பற்றி வகுப்புகள் எடுத்த போது நரேந்திரநாத்திற்கு அறிமுகமானாள் சாரா. ஒரு நாள் சுவாமியிடம் சாரா,

“சுவாமிஜி, நாளை நான் நடிக்கும் நாடகம் நியூயார்க் செண்ட்ரல் திரையரங்கில் நடக்க இருக்கிறது. தாங்கள் அவசியம் கலந்து கொள்ள வேண்டும்.”

சற்று நேரம் யோசித்த அவர்,

“உறுதியாக சொல்ல இயலாது. கலந்து கொள்ள முயற்சிக்கிறேன். என்னை எதிர்பார்க்க வேண்டாம்.”

கேளிக்கைகளிலும் நாடகங்களிலும் சுவாமிக்கு ஈடுபாடு இருக்காது என்று தெரிந்திருந்ததால் பெரிதாய் ஏமாற்றம் கொள்ளவில்லை சாரா. வழக்கம் போல் நாடக ஒத்திகைக்கு சென்றாள்.

அடுத்த நாள் நாடகம் ஆரம்பமானது. ‘இஸிஎல்’ என்னும் ப்ரெஞ்ச் நாடகம் அது. இஸிஎல் என்ற கதாபாத்திரமாகவே நடித்தாள் சாரா. புத்தரின் வரலாறு சொல்லும் நாடகம். நாடகம் நடந்து கொண்டிருக்கையிலேயே பி வரிசையில் அமர்ந்திருந்த சுவாமிஜியை கண்டுகொண்டாள் சாரா. மனம் சொல்லாத களிப்புற்றது. சுவாமியின் மேலிருந்த மரியாதை இன்னும் அதிகமாகியது. இடைவேளையின் போது வேகவேகமாக ஓடி வந்த சாரா சுவாமியை வணங்கி,

“நீங்கள் வருவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை”

வழக்கமான புன்முறுவலை பதிலாய் அளித்தபடி

“புத்தரின் வாழ்க்கை பற்றிய நாடகமென்று அறிந்தேன். பார்க்கலாமென்று வந்தேன்”

“மிக்க மகிழ்ச்சி. நாடகம் முடிந்ததும் விருந்து நடக்க இருக்கிறது. கண்டிப்பாய் கலந்து கொள்ள வேண்டும். முக்கியமான ஒரு நபரை உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.”

மறுக்காமல் தலையாட்டினார் சுவாமிஜி.

இடைவேளைக்கு பின் நடந்த நாடகத்தில் சாராவின் நடிப்பு இன்னும் மெருகேறியிருந்தது. அவளின் குருநாதர் தன் நாடகத்தைப்பார்த்து கொண்டிருக்கிறார் என்ற பூரிப்பு அது.

நாடகம் முடிந்ததும் நடந்த கேளிக்கைகளில் ஈடுபடாமல் ஓரமாய் இருந்த மேஜையில் அந்த இருவரும் அமர்ந்திருந்தனர். சுவாமிஜி மற்றும் டெஸ்லா. டெஸ்லாவின் நீண்ட நாள் தோழி சாரா. அவரின் அறிவியல் அறிவை அறிவாள்.

நூறு வருடங்கள கழிந்து உலகையே உலுக்கப்போகும் சந்திப்பு அது என்பதை சாரா அறிந்திருக்கவில்லை. சுவாமி விவேகானந்தாவும் டெஸ்லாவும் அறிந்திருக்கவில்லை.

பார்த்தவுடனே சுவாமிஜி மேல் ஈர்ப்பு வந்தது டெஸ்லாவிற்கு. ‘என்ன பெரிதாய் பேசப்போகிறார்’ என்ற எண்ணம் மறைய ஆரம்பித்தது. சாராவின் வற்புறுத்தலுக்காக தான் இந்த சந்திப்புக்கு ஒத்துக் கொண்டிருந்தார் அவர். ஆனால் சுவாமிஜி பேசப்பேச அவர் மேல் மரியாதை கூடியது.

“உங்களை தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும். நீங்கள் சொல்லும் வேதாந்தங்களும் பகவத் கீதையும் இல்லாத ஒன்றை தானே சொல்கின்றன.”

“அப்படி இல்லை. இந்த உலகம் இருவேறு உந்து சக்திகளால் இயங்குகிறது. ப்ராணம் ஆகாஷம். இவற்றில் ஆரம்பிப்பது தான் எந்த ஜீவனுமே. இதை தான் எங்கள் வேதாந்தங்கள் சொல்கின்றன.”

மேலும் அவர் பேச அவரின் பால் ஈர்க்கப்பட்டார் டெஸ்லா. அவர் செய்து கொண்டிருந்த பல சோதனை முயற்சிகளுக்கான விடை வேதாங்களிலும் வேதாந்தங்களிலும் இருப்பதாய் தெரிந்தது.

‘உலகம் உந்து சக்தியினால் இயங்குகிறது’ என்பதை கணித ரீதியாக நிரூபிக்கமுயன்ற அவருக்கு ஆகாசம், ப்ராணம் ஆகியவற்றிற்கான அர்த்தங்கள் புதிய பாதையை கொடுத்தது.

“சுவாமிஜி. உங்களுடன் நிறைய பேச வேண்டும். எனக்குத் தேவையான பல விஷயங்கள் உங்கள் வேதாந்தங்களில் இருக்கிறது. இன்னும் இருவாரங்களில் என் வீட்டிற்கு வர முடியுமா?”

அழைப்பை ஏற்றார் விவேகானந்தர். அதன்விளைவே அவரின் வருகை. வருவதற்குமுன் தன் நண்பனுக்கு எழுதிய கடிதத்தில் தான் சந்திக்கப்போவதைப்பற்றியும் தான் எவ்வளவு ஆர்வமாய் இருக்கிறேன் என்பதையும் குறிப்பிட்டிருந்தார்.

நினைவில் ஓடிய நிகழ்வுகளை அசைபோட்ட விவேகானந்தர் நேரத்தை சற்றும் வீணாக்காமல் டெஸ்லாவுடன் விவாதத்தில் பங்குகொண்டார். டெஸ்லா சக்தி என்பதற்காக தான் செய்த ஆராய்ச்சிகளை விளக்க விவேகானந்தருக்கு ஆச்சர்யம். வேதாந்தங்களில் எழுதிய வைத்தவைகளை நிரூபிக்க முடியும் என்கிற நம்பிக்கை அவருக்குப் பிறந்தது. அதற்கு ஏற்றாற் போல் அது வரை தான் செய்திருந்த சோதனைகளை திருப்பி செய்து காண்பித்தார் டெஸ்லா. இறுதியாகடெஸ்லாவின் வேண்டுகோளின் படி அவருக்கு வேதாந்தங்களைப் பற்றி சொல்லித் தர ஒத்துக் கொண்டார்.

பின் இருவரும் மீண்டும் சந்திப்பதாய் முடிவு கொண்டு பிரிந்தனர். அடுத்த இருமாதங்கள் இருவருக்கும் பரபரப்பாய் கழிந்தது. ஏற்கனவே ஒத்துக் கொண்ட கூட்டங்களில் பங்கு கொண்டு சொற்பொழிவாற்றிய நிலையில் நான்கைந்து முறை டெஸ்லாவை சந்தித்து வேத சூத்திரங்களை விளக்கினார். அண்ட வெளியில் உயிர் சக்தி இருப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் அலைகள் மூலம் செய்தி பரிமாறும் முறைகளைப் பற்றியும் அலசினர். முடிவில் டெஸ்லாவிற்குள் அந்த அறிவியல் அற்புதம் நிகழ்ந்தது. சுவாமிஜியிடமிருந்து கற்றுக் கொண்ட விஷயங்களை மேலும் ஆராய்ந்து மின்காந்த அலைகள் மூலமாக செய்திகள் பரிமாறும் அதிசயம் கண்டார். மேலும் மேலும் பல ஆராய்ச்சிகள் செய்த அவர் 1930-களில் செய்த ஆராய்ச்சி அவரை நிலைகுலையச் செய்தது.

தனது கண்டுபிடிப்பு எவருக்கும் தெரியக்கூடாது என்று நினைத்த அவர் தன் நண்பர் மூலமாக ஐரோப்பாவில் அதை பாதுகாப்பாக பதுக்கி வைக்க சொன்னார். கிட்டத்தட்ட பத்தாண்டுக்கும் மேலாக மிகுந்த ரகசியமாக அது இருந்தவரை பிரச்சனைகள் ஏதும் வராமலிருந்தது. சரியாக டெஸ்லா இறந்து 10 வருடம் கழித்து அந்த ரகசியங்கள் அடங்கிய ஆராய்ச்சிக் குறிப்புகள் ரஷ்யரிடம் சிக்கியது.

கி.பி. 2010

செயிண்ட் பீட்டர்ஸ்பர்க். அழகாக வர்ணனைகளால் எழுதப்பட்ட அந்தக் குறிப்புகளைப் படித்த அவர், நியான் விளக்கு வெளிச்சத்தில் சிந்தனையோடு எதிரில் அமர்ந்து நேவா நதியை வெறித்துக் கொண்டிருந்த மிகைல் ப்ராட்கோவை பார்த்தார். பின் தொண்டையை கனைத்து கொண்டு பேச ஆரம்பித்தார்.

0 comments:


Blogger Templates by Isnaini Dot Com. Powered by Blogger and Supported by ArchiThings.Com - Modern Architecture Design