Saturday, July 17, 2010

மதராஸப்பட்டினம்

மதராஸப்பட்டினம்.. கொஞ்ச நாளாகவே இந்தப்படத்தை தொடர்ந்துக்கிட்டு இருக்கேன். படத்தில் வெள்ளைக்கார அம்மிணி நடிக்குதுன்னு கேள்விப்பட்டு இணையத்துல தேடி கண்டுபுடிச்சு, ப்ளாகெல்லாம் படிச்சு, ரொம்பவே புடிச்சுப் போச்சு. அழகுப் பதுமையா தான் இருக்குனு படம் வெளியானப்புறம் பாக்கலாம்னு முடிவுபண்ணியாச்சு. இன்னிக்கு போயாச்சு. நிற்க.

படத்தின் கதையென்று பார்த்தால் டைட்டானிக் கொஞ்சம், லகான் கொஞ்சம், வெள்ளைக்கார பெண்-இந்திய பையன் காதல் கொஞ்சம் - எல்லாம் சேர்ந்த கலவையே படம். பெரிதாய் சொல்லிக் கொள்ளும்படி வேறெதுவும் இல்லாததால் அடுத்த விஷயத்திற்குப் போவோம்.

திரைக்கதை.. படம் 1945-ல் நடப்பதாய் வருகிறது. அதற்கேற்றாற் போல் திரைக்கதை. அந்த கால கட்டத்தில் நடந்த சுதந்திரப்போராட்டத்தை மேலோட்டமாக காண்பித்தது ஆறுதல். ஆயினும் ஆர்யாவிற்கும் ஏமிக்கும் வந்த காதல் அப்படியே போகுது பெரிதாய் ஏதும் சம்பவங்களில்லாமல். அதனால் ஆங்காங்கே தொய்வு ஏற்படுவது போல் தோன்றுகிறது. ஆனாலும் நம்மை முழுமையாக படத்தோட ஒன்றவைக்குது அந்த காதல். அவ்வளவு ரசனையோடு எடுக்கப்பட்டிருக்கிறது. சரளமாக காமெடி தூவப்பட்டிருக்கிறது...நம்மை படத்தோடு ஒன்ற வைக்க.

இசை.. ஜி.வி.ப்ரகாஷ். பாடல்களில்..எம்ம துரையம்மா மற்றும் ததநாதீன டூயட் நல்லாருக்கு. பிண்ணனி இசைசேர்ப்பு நல்லா இருக்கு.

படத்தின் முக்கிய பலமே கலை மற்றும் ஒளிப்பதிவு. ஒளிப்பதிவு தெளிவாய் இருந்தது, நீரவ் ஷா, இந்த காலத்தையும் அந்த காலத்தையும் மாறுபட்ட கலரில் உறுத்தாமல் காண்பித்தது சிறப்பு. அதிலும் அந்த கால மதராஸப்பட்டினத்தின் காட்சிகள் அழகு. கலை மிக அற்புதம். அப்படியே அந்த கால சென்னை நம் கண்முன் தெரிகிறது. ஆங்காங்கே கோர்க்கப்பட்ட க்ராஃபிக்ஸ் எதுவும் உறுத்தலாய் தெரியவில்லை.ஒவ்வொரு விஷயத்துக்கும் நிறையாஅராய்ச்சி செய்திருக்கிறார்கள். அந்த கால கட்டிட அமைப்பு, சென்னையின் தேம்ஸ் நதி, வண்ணான் பேட்டை - இப்படி பல இடங்களும் அழகாக இருக்கிறது. கதாநாயகி வந்திறங்கும் போது அந்தப் பெட்டியில் டாடா ஏர் சர்வீஸ் என்ற அட்டை தொங்குவதும், தியேட்டரில் கண்ணம்மா திரைப்படம் ஓடுவதும் என.. கவனித்து செய்திருக்கிறார்கள்.

ஆர்யா - உடல் ஏற்றி லகான் அமீர்கானை நினைவுபடுத்துகிறார். உடையும் அதே மாதிரி இருந்தது சற்றே அலுப்பு தட்டியது. தன் வேலை அழகாக செய்திருக்கிறார் ஹீரோத்தனங்கள் இல்லாமல். ஹனீபா, நாசர், அவரவர் வேலைகளை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். ஹனீஃபா வரும் காட்சிகளில் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆனால் இவ்வளவையும் தூக்கி சாப்பிட்டது ஏமி ஜாக்ஸனும், இன்றைய கால ஏமியாய் வரும் அந்த பாட்டியும். படம் முழுக்க இவர்களே வியாபித்திருக்கிறார்கள். ஏமி இன்னும் டீன் ஏஜ் தாண்டவில்லை. ஆயினும் அபார நடிப்பு. முழு திரைக்கதையையும் தன் தோளில் ஏற்றி பயணித்திருக்கிறார். அந்தப்பேசும் கண்களாகட்டும், சிரிப்பாகட்டும்..உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறார். என் ஓட்டு இந்த அம்மிணிக்குங்கோ.. அழகு மட்டுமில்லை.. தமிழில் பாடவும் லிப் சிங்க் செய்தது அருமை. ஹிஹி.. ஜொள்ளு தானுங்கோ.. ஆனாலும் ஒர்த் இட். இதையெல்லாம் பார்க்கும் போது ஏன் நம்மூர் நடிகைகளுக்கெல்லாம் நடிக்க வரலேன்னு தோணுது. முதல்படத்திலேயே ஏகப்பட்ட க்ளோஸப் காட்சிகளில் அநாயசமாக வெளுத்து வாங்கியிருக்கிறார். ஒவ்வொரு உடையிலும் தேவதை வலம் வருவது மாதிரி... சோகக் காட்சியிலேயும் அருமை. அதே மாதிரி அந்த பாட்டி, நிலைக்குத்திய கண்கள், பரிதவிக்கும் கண்கள் என கண்களிலேயே நடித்திருக்கிறார். இவர்களிடம் கதை சொல்லி இத்தனை தேர்ந்த நடிப்பை வாங்கிய விஜயை எத்தனைப் பாராட்டினாலும் தகும்.

படத்தின் திரைக்கதையில் இருக்கும் சின்ன சின்ன குறைகளையும் இந்த இருவர் சரிகட்டி விடுகிறார்கள். மொத்தத்தில் ஏற்கனவே பழக்கப்பட்ட கதையை அந்தகால படமாக தந்திருக்கிறார்கள்.. ஏமிக்காக கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.

எல்லாவற்றையும் தன் திறம்பட கோர்த்த இயக்குநர் விஜய்க்கு ஒரு சபாஷ்.

(பெங்களூரில் ஏமிக்கு ரசிகர் மன்ற அமைக்கலாம் என்றிருக்கிறேன். நான் தான் தலைவர். செயலாளர் பொறுப்பாளர் பதவி காலியாக இருக்கிறது. விண்ணப்பிப்போர் விண்ணப்பிக்கலாம்).

0 comments:


Blogger Templates by Isnaini Dot Com. Powered by Blogger and Supported by ArchiThings.Com - Modern Architecture Design