Friday, March 26, 2010

வெட்கம்ன்னா.....

ஏன் எழுத ஆரம்பிச்சேன்னு தெரியல.. ஆனா அது நடந்துச்சு.. கிட்டத்தட்ட நாலஞ்சு வருஷமிருக்கும் எழுதணும்னு தோணி.. ஏகத்துக்கும் ப்ளாக்கும் கதைகளும் படிச்ச விளைவு. திடீர்னு போன வருஷம் இனி எழுதறத நிறுத்தினேன். அப்புறம் இப்போ ப்ளாக் ஆரம்பிச்சதுக்கு அப்புறம் பழைய டச் விட்டுப் போச்சு. அதான் மொக்கையா முயற்சி பண்ணிகிட்டு இருக்கேன்..

அதாகப்பட்டது இப்போ எத பத்தி எழுதப்போறேன்னா... வெட்கம். அந்தக் காலத்திலேர்ந்து ஒரு நாலு மேட்டர பத்தி சொல்லுவாங்க. குறிப்பா பொண்ணுங்களுக்கு.. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு. மத்தத பத்தி இப்போ கவலையில்ல. ஆனா அந்த மூணாவது மேட்டர்.. நாணம்.. வேற பேரு தான் வெட்கம். என்னமோ அத பொண்ணுங்களுக்கு மட்டும் சொந்தம்ங்கற மாதிரி பேசறாங்க... ஆனா வெட்கப்பட்ட பல ஆண்களைப் பார்த்திருக்கேன்.. மச்சான்.. மேரேஜ் ஃபிக்ஸ் ஆயிடுச்சுன்னு வழிவாங்கல்ல.. அது வ்ழிசல் இல்லீங்க.. வெட்கம். அதே மாதிரி கடலை.. ஜொள்ளு..இப்படி பல பேர்ல பொண்ணுங்ககிட்ட பேசும் போது அவங்க கண்ணு மின்னுமே..அது ஜொள்ளு இல்லே வெட்கம். வாயில வழிஞ்சா தான் ஜொள்ளு..

மேட்டருக்கு வருவோம். சினிமால நிறைய தமிழ் பொண்ணுங்க வெட்கப்பட்டு பார்த்திருக்கேன். ஆனா நேரில என் அதிர்ஷடமோ என்னமோ தெரியல.. இதுவரை ஒரே ஒரு பொண்ணு தான் வெட்கப்பட்டு பாத்திருக்கேன்....ஹ்ம்ம்... சரி..விடுங்க. மத்தபடி சரியாவே ஞாபகம் இல்லே... அதுவும் பெங்களூருக்கு வந்தப்புறம் வெட்கமா என்ன?னு கேக்கற அளவுக்கு எல்லோரும் இருக்காங்க.. ஆண்கள் வெட்கப்படுற அளவு கூட பெண்கள் வெட்கப்படுற மாதிரி தெரியல..

வெட்கப்படுறதும் வெட்கப்படுறதைப்பாக்கறதும் ஒரு சுகம். மனசுக்குள் பட்டாம்பூச்சி பறக்கறது கண்ணுல தெரியும்.. கால் பூமியில இல்லாம ஆகாயத்துல அடியெடுத்து வைக்கும்... அப்போ இருக்கும் பாருங்க ஒரு லவ் ஃபீல்... ச்சே.. இது எதுவும் இன்னும் எனக்கு குடுத்து வைக்கல... எனக்கு நானே ஆறுதல் சொல்லிக்கறேன்..

இப்படி இருக்கற சூழ்நிலையில சமீபத்துல நான் பார்த்த ஒரு வெட்கப்படுற சீன் ரொம்பவே ஆச்சர்யப்படுத்திடுச்சு.. கோவா படத்துல மெலன் மேரியின் வெட்கம். என்ன ஆச்சர்யம்னா... வெட்கப்படறதுன்னா என்னன்னு எப்படி சொல்லி புரிய வச்சிருப்பாங்கன்னு. ஆனா சும்மா சொல்லக்கூடாது பொண்ணு பிச்சி உதறிடுச்சு... வெட்கத்துல. அங்க ப்ரேம்ஜிக்கு பதிலா என்னைத் தான் பார்த்தேன்.. ஹிஹி. அவ்ளோ அழகா வெட்கப்பட்டது... அதுவும் தலையாட்டிக்கிட்டே.. சீரான பல்வரிசை தெரிய... அடடா... சரி... தொடச்சுக்கிட்டேன்.. நான் பார்த்தத நீங்களும் பாருங்க.. உங்களுக்கும் வெட்கம் வரும்... வர்ட்டா....

Monday, March 22, 2010

மௌனராகங்கள்...!

போன வாரம் ஐ.பி.எல் பிரச்சனையால நீயா நானா பார்க்க முடியாமல் போச்சு. அதைப் பார்க்கணும்னு நண்பன் ஆசைப்பட்டான். கொஞ்சம் பொறு… ரெண்டு நாள்ல எப்படியும் நெட்ல வந்துடும்னு சொல்லி.. ஐ.பி.எல்லும் பார்த்தாச்சு.அடுத்து செவ்வாய்..உகாதி விடுமுறை. என்ன பண்றதுனு தெரியாம ரெட்ல உலாவிக்கிட்டு இருந்தபோது நீயா நானா பார்க்கலாம்னு தோணுச்சு. சரின்னு நெட்ல் தேடி கண்டுபுடிச்சு பார்க்க ஆரம்பிச்சோம். பசங்கல பொண்ணுங்களும் பொண்ணுங்களை பசங்களும் புரிந்து கொள்ளும் முயற்சின்னு குறிப்பிட்டாங்க.

ஒவ்வொருத்தர் பேசும் போது சுவாரஸ்யமா இருந்துச்சு. அடுத்தவங்க கதை கேட்கறதுன்னா நமக்கு என்ன சுவாரஸ்யத்துக்கு குறைச்சல்..? இப்படி தான் பலரும் தான் வாழ்க்கைல நடந்தத வச்சு பொண்ணுங்க இப்படி தான், பசங்க இப்படித்தானு ஏகத்தும் பேசினாங்க. கேட்கற வரைக்கும் சந்தோஷம்.

Coming to the point…! இந்த விஷயத்தை பத்தி யோசிச்சா தேவையில்லாம ஆணா இருந்தாலும் சரி.. பெண்ணா இருந்தாலும் சரி… அநாவசியமா மூளைய குழப்பிக்குவோம். ஏகத்துக்கும் குழம்பினப்புறம் தெரிஞ்ச விஷயம் இது. இன்னார் இந்த சமயத்தில் இப்படித் தான் இருப்பார்கள் என்று சொல்ல முடிந்துவிட்டால் வாழ்க்கையில எந்த சுவாரஸ்யமுமே இருக்காதே. நூறு சதவிகிதம் ஒருத்தரைப் பத்தி கணிக்க முடிந்துவிட்டால் அவரை விட்டு விலகிவிட வேண்டும். அப்புறம் அவருடனான வாழ்க்கை ஆபத்தானது..உண்மையிலேயே. சீக்கிரமே போரடித்துவிடும்.

இதே தான் ஆண்பெண் புரிதலுக்கும். முழுமையாக புரிஞ்சுக்கிட்டோம்னு யாரும் சொல்ல முடியாது. ஆனா வாழ்நாள் முழுக்க அந்த புரிதலைத் தேடிப் போற பயணம் சுவாரஸ்யமானது. அதுலேயும் பெண்கள் இப்படித் தான்னு பொதுவா பொத்தம்பொதுவா சொல்ல முடியாது. அந்த நிகழ்ச்சியிலேயே ஒரு ஆணோட கேள்விக்கு பல பதில்கள் வந்தது.. இப்படியா இருக்கலாம்.. அப்படியா இருக்கலாம்னு.. சந்தோஷம். ஆக. இது தான்னு ஒரு பதில் எந்த குழப்பமான புரிதல் சம்பந்தப்பட்ட கேள்விக்கும் கிடையாது.

என்னைப் பொறுத்த வரை ஒரு ஆணா.. பெண்ணின் மனநிலையை அறிந்து கொள்ள முயற்சிப்பது சுவாரஸ்யமான விஷயமே. எந்த வகைப் பெண்ணா இருந்தாலும்… என் அம்மாவுக்கு என்ன பிடிக்கும்னு முழுமையா அறிய முடியவிட்டாலும் ஓரளவுக்குத் தான் கணிக்க முடியுது. இத்தனை வருஷம் குடும்பம் நடத்தின என் அப்பாக்கே தெரியும்னு சொல்ல முடியாது. பேசுவது ஒன்றாயிருந்தாலும் குறிப்பிடுவது வேறொன்றா இருக்கும். அந்த குறிப்பை நாம புரிஞ்சுக்கணும். இப்படித் தான் வாழ்க்கையே…

அடுத்ததா பெண்ணுக்கு என்ன புடிக்கும். ஒரு பெண்ணை கவரணும்னா.. என்னென்ன பண்ணனும்னு இன்னும் சரியா யாருக்குமே தெரியாது.. இப்படிப்பட்ட காலக்கட்டதுல ஏன் நான் இதைப்பத்தியெல்லாம் பேசிக்கிட்டு இருக்கேன்..

இன்னிக்கு பார்த்த படம்… கே.டி.வியில்.. மௌனராகம்..

உண்மையிலேயே ஃபீல் அண்ட் ஃபீல் ஒன்லி படம். படத்தில் வர்ற கார்த்திக் கேரக்டராகட்டும், மோகன் கேரக்டராகட்டும்.. ரேவதியாகட்டும் அழகாக செதுக்கி இருப்பார் மணிரத்னம். இளையராஜாவின் ஒத்துழைப்போடு அந்த உணர்வு படம் முழுக்க நம்மை ஆக்ரமிச்சிருக்கும். படத்தில் ரேவதியின் கதாபாத்திரம் அந்த குழப்பமான பெண்ணின் மனநிலை அவ்ளோ அழகா பதிவு செய்யப்பட்டிருக்கும். படம் வந்து நாளானாலும் இன்றைக்கும் இளம்பெண்களின் விருப்பப்படமாக அது இருக்கும். குறிப்பாக கார்த்திக்கின் துறுதுறுப்பும் மோகனின் பொறுமையான குணமும்… ‘வாவ்…சான்ஸ்லெஸ்னு..’ பொண்ணுங்க சொல்லக் கேள்வி.. படத்தோட ஒன்றி பாத்தப்புறம் (எத்தனையாவது முறைன்னு தெரியல)… சட்டென்று மனதுல பட்ட விஷயம் இது… சரியா தப்பான்னு நீங்க தான் சொல்லணும்.

பெண்களுக்கு… குறிப்பா இன்றைய இளம்பெண்களுக்கு கார்த்திக் மாதிரி காதலனும் மோகன் மாதிரி கணவனும் தான் எதிர்பார்க்கிறார்கள்.. சரியா தப்பான்னு நீங்க தான் சொல்லணும்.. கல்யாணத்துக்கு முன்னாடியோ காதலிக்கும் போதோ துறுதுறுவென்று சத்யா படத்தில் வரும் ‘வளையோசை’ பாடலில் கமல் செய்யும் குறும்புத்தனங்களை எதிர்ப்பார்க்கும் இளம்பெண்கள் கல்யாணத்துக்கு பின் கணவன் மோகன் மாதிரி அன்பாகவும் தன்னை புரிஞ்சு தனக்காக விட்டுக்கொடுக்கும் நல்லவனாகவும் எதிர்பார்க்கிறார்களா??? ஒருவரே இருபாத்திரங்கள் ஏற்பது சாத்தியமா…??

உலகம் முடியும் வரை இந்தக்கேள்விக்கு விடை கிடைக்குமென்று எனக்குத் தோன்றவில்லை.

எனிஹௌ… நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த அங்காடி தெரு வரப்போகிறது.. கூடிய சீக்கிரமே பார்த்திடுவேன். ‘நெசமா தான் சொல்றியா’ அஞ்சலியை ட்ரெயிலரில் பார்த்த போதே முடிவு செய்துவிட்டேன்..ஹிஹி

Tuesday, March 9, 2010

முகமறியா முகங்கள்

(மு.கு: இந்தக்கதையை எப்போதோ ஏதோ ஒரு கதைப்போட்டிக்காக எழுதியது. போட்டிக்கு அனுப்புவதென்றால் கொஞ்சம் சீரியஸா... தெரியாத புரியாத விஷயமா இருக்கணும்னு ஒரு வரைமுறைக்கு உட்பட்டு எழுதினேன். வழக்கம் போல பரிசு ஏதும் கிடைக்கல..ஹிஹி.. படிச்சுட்டு கொல்லுங்...அவ்வ்வ்...சொல்லுங்க)


இன்றைய நாள் ஏனோ விசேஷமாய் தோன்றியது. மனதுக்குள் சின்ன குறுகுறுப்பு, கொஞ்சம் படபடப்பு. வாழ்வின் முக்கியமான நபரை சந்திக்கப் போகிறேன். அவர் ஆணா பெண்ணா. தெரியாது. ஆனால் இது வாழ்க்கையின் மிக முக்கியமான சந்திப்பு என்பது மட்டும் புரிந்தது.

இணையத்தில் உலவ ஆரம்பித்திருந்த புதிது அது. இணையத்தின் வழி உலக விஷயங்கள் அனைத்தும் தெரிந்து கொள்ளலாம் என்று கேள்விப்பட்டதிலிருந்து மனம் அதை ஒரு திரையாகவும் அதில் படங்கள் ஓடுவது போலவும் கற்பனை செய்து பார்த்தது. ஒருவழியாக நண்பன் ஒருவன் மூலம் இணையம் என்பது படங்கள் மட்டுமல்ல தளங்களும் கொண்டது என்று கொஞ்சம் கொஞ்சமாக புரிபட ஆரம்பித்தது. கல்லூரியில் படிக்கையில் அப்பா ஆசையாக கணினி வாங்கி கொடுத்த போது உலகத்தையே வென்றது போன்றதொரு உணர்வு. ஏனையோருக்கும் அப்படி தான் இருந்திருக்கும். அவ்வளவு பெருமிதம். இணைய இணைப்பு கொடுத்து அதில் உலாவ ஆரம்பித்த பிறகு மற்ற வேலைகள் மறந்தே போயின. காலை எழுந்ததும் இணையம். பின்பு மாலை கல்லூரி முடிந்தபின்பும் இணையம். வாழ்க்கை நண்பர்களுடன் அளவளாவுவது குறைந்து இணையத்தோடு உலாவது ஆனது. சரியாக சொல்ல வேண்டுமானால் இணைய அடிமை.

இப்படித் தான் ஒரு நாள் அரட்டை தளங்களுள் நுழைந்து உலாவிக் கொண்டிருந்த போது அந்த பெயர் கண்ணில் பட்டது. Inpersuit. வித்தியாசமாய் தெரியவே தனிச்செய்தி அனுப்பினேன்.

“வணக்கம். எதைத் தேடி தங்கள் பயணம்?”

பதில் உடனே வந்தது.

“வணக்கம். எதைத் தேடலாமென்று தான்…”

வழக்கமாக சரியான முறையில் பதில் வராது. தெளிவான பதில் வரவே உரையாடல் தொடர்ந்தது.

“எதைத் தேடலாமென்று தேடிக் கொண்டிருக்கிறீர்கள்..? அப்படி ஏதேனும் தொலைத்து விட்டீர்களா என்ன?”

“தொலைத்தால் மட்டும் தான் தேடுவார்களா? தொலைப்பதற்கும் ஏதாவது வேண்டுமல்லவா? அதனால் தொலைப்பதற்காக தேடிக் கொண்டிருக்கிறேன்…”

சுத்தம்.. என்ன எதைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம் என்று புரியவில்லை. ஆனாலும் ஏதோ ஒன்று மட்டும் பேசச் சொல்லி வற்புறுத்துகிறது. மேலும் தொடர்ந்தேன்.

“தொலைக்கப் போகிறோம் என்று தெரிந்தபின்னும் எதற்காக தொலைந்து போய் தேடுகிறீர்கள்? தொலையாமலே தொலைக்காததை வைத்து நிம்மதியா இருக்கலாமே… தொலைந்துவிடும் என்று தெரிந்தும் தேடுவது அறியாமையல்லவா?”

“ஆம்.. ஆனாலும் தேட வேண்டுவது கட்டாயமாகுதே…!”

அடச்சே. இந்நேரம் பார்த்தா மின்சாரம் போய்த் தொலைய வேண்டும். சிறிது நேரம் மனதில் அந்த உரையாடல் அப்படியே இருந்தாலும் அடுத்தடுத்து வேற விஷயங்களில் கவனம் திரும்பியது. ஒரிரு மணிநேரத்திலேயே அந்த விஷயம் சுத்தமாய் மறந்துவிட்டிருந்தது.

கல்லூரிப் படிப்பெல்லாம் முடித்துவிட்டு வேலை கிடைத்து நகரத்திற்கு வந்து நண்பர்களுடன் தங்க ஆரம்பித்தாயிற்று. ஒரு காலத்தில் பிரமிப்பாய் தெரிந்த இணையம் பற்றி இப்போது கரைத்து குடித்திருந்தேன். இணையம் பற்றித் தெரியவில்லை என்று யார் சொன்னாலும் அவனை புழுவிற்கு சமானமாய் பார்க்கவும் ஆரம்பித்தாயிற்று. காலை எழுந்தவுடன் பல் கூட துலக்காமல் இணையத்தில் மேய வேண்டியது. ஏனோ இணையத்திற்கே ஆயுட்கால அடிமை போல.

மென்பொருள் தொழில் வேறு. தினமும் பதினாறிலிருந்து இருபது மணிநேரம் வேலை பார்க்க வேண்டியது. பணத்தை கத்தையாக கொடுத்தாலும் மனத்தை சக்கையாய் பிழிந்தனர். பல நாள் தலை பாரமாய் இருக்கும். ஏதோ இருண்டதொரு குகைக்குள் அடைப்பட்டுக் கொண்டு வெளிவர முடியாததை போல் மூச்சு முட்டும். ஆனாலும் வெளியில் பகட்டாய் உடை உடுத்தி பார்ப்போரிடம் சிரித்து சந்தோஷமாய் இருப்பது போல் நடித்து… ஆம். மிகச் சரியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். நல்லவன் போல். வல்லவன் போல்.

தொடர்ச்சியாக பல இரவு வேலை பார்த்ததில் மனத்தின் அழுத்தம் அதிகமாகி மருத்துவரை பார்க்க நேரிட்டது. ‘கவலைப்பட ஒன்றுமில்லை’யென்றும் வழக்கமாக மென்பொருள் வல்லுநர்களுக்கு நேரிடுவது தான்’ என்றும் மிகச் சாதாரணமாய் சொல்லிவிட்டார். இந்த நரகத்திலிருந்து விடுதலை கிடைக்குமா? விடுதலை என்பதற்கு வேலையே இல்லை. இது நானாய் தேடிக் கொண்ட நரகம். பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் இருந்து தான் ஆக வேண்டும்.

ஒருவாரம் போல விடுப்பு எடுத்து ஊருக்கு வந்தேன். காற்றை புதிதாய் உணர்ந்தேன். ஏ.சியின் குளுமை இல்லை. ஆனால் மனதிலும் வெறுமை இல்லை. அம்மாவின் சாப்பாடு. ஒரு வாரம் வயிறார சாப்பிட முடிந்தது. ஒரு நாள் மாலை வேளையில் பொழுது போகாமல் இணையத்தில் (இது என்றும் விடாத கருப்பு) உலாவும் போது அதே பெயர். அப்போது தான் ஞாபகம் வந்தது. கடந்த மூன்று வருடங்களாய் எந்த அரட்டைத் தளத்தினுள்ளும் நுழைந்ததில்லை. ஆர்வம் உந்த செய்தி அனுப்பினேன்.

“நலமா?”

“நலம். நீண்ட நாட்களாகிவிட்டது நாம் உரையாடி”

“ஒரு முறை தானே உரையாடி இருக்கிறோம். அன்று மின்சாரம் தடைபட்டுவிட்டது.”

“நினைத்தேன்..”

“சரி.. உங்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளலாமா?”

“என்னைப் பற்றி என்றால்..?”

“உங்கள் ஊர்..பேர்..முடிந்தால் சொல்லுங்கள். இல்லையேல் வேண்டாம்”

“தெரிந்து என்ன செய்ய போகிறீர்கள்”

“ஒன்றும் செய்யப் போவதில்லை. சும்மா தெரிந்து கொள்ளத் தான்”

“ஒன்றும் செய்யாததற்காக எதற்கு ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும்.”

இந்த நபர் அவரே தான். ஆனால் ஆணா பெண்ணா. கண்டுபிடிக்க வேண்டுமே.

“அனைத்தும் தெரிந்து கொள்வது நல்லது தானே. கற்றாரை கற்றார் காமுறுவர்”

“கற்றபின் நிற்க அதற்குத் தக என்றும் சொல்லியிருக்கிறார்களே. தெரிந்து கொள்ள வேண்டியது யாருக்கேனும் பயனாய் இருக்க வேண்டும். ஒன்றும் செய்யாமலிருப்பதற்காக தெரிந்து கொள்ளுதல் நேரம் கொல்லுதல் தானே?”

அடச்சே… என்ன இப்படி மாட்டிக்கிட்டு முழிக்கிறேன். ஆனாலும் ஏதோ ஒரு உந்து சக்தி பதிலனுப்பியது.

“உங்களைப் பற்றித் தெரிந்தால் இணையத்தோழமை என்று கதை எழுதுவேன்.”

“தோழமை என்றால்..”

“நட்பு”

“நாம் நண்பர்களா? என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? எதுவும் தெரியாமல் தோழமை என்றால்”

ம்ம்….. திரும்ப திரும்ப மாட்டிக் கொள்கிறேனே.

“அதற்குத் தான். உங்களைப் பற்றி சொல்லுங்கள் என்றேன்.”

பேச்சு இப்படியாகத் தொடர்ந்தது. மெல்ல மெல்ல என்னையுமறியாமல் அதில் லயிக்கலானேன்.

பெயர் வித்யா என்றும் நான் பணிபுரியும் அதே ஊரில் தான் வசிப்பதாவும் சொன்னாள். அடுத்தடுத்த நாட்களில் எங்கள் உரையாடல்கள் தொடர்ந்தது. பல்வேறு சம்பவங்களைப் பற்றி. நாகரிகமான முறையில் தெளிவான நடையில் சுருக்கமாக. மனதில் இருந்த குழப்பங்களுக்கு அவள் தத்துவங்கள் மிகவும் தேவைப்பட்டது.

மனிதர்கள் உரையாடுவதே தெரிந்ததை திரும்ப தெரிந்து கொள்ளத் தான் என்றாள். ஏனோ சில காரணங்களால் எதைத் தேடிக் கொண்டிருக்கிறாள் என்பதை மட்டும் சொல்லவே இல்லை. நாட்கள் ஆக ஆக எங்கள் உரையாடல்கள் தீவிரமடைந்தன. பணியில் சேர்ந்த பின்பு அந்த மாற்றத்தை நன்கு உணர்ந்தேன். என் குறை சொல்லி புலம்பகூட நல்ல நட்பு என்னருகில் இல்லாததே காரணம் என்று புரிந்தது.

எதனாலோ அவளுடம் உரையாடும் போது மட்டும் நான் நானாய் இருக்கிறேன். ‘என்ன வாழ்க்கை இது’ என்ற எண்ணம் போய் ‘இது வாழ்க்கை’ ஆனது. சில நேரங்களில் யோசித்துப் பார்க்கையில் என் தனிமை தவிர அவளிடம் உரையாடும் போது மட்டும் தான் நான் நானாய் இருந்திருக்கிறேன் என்று தோன்றியது. நான் என்ற நானே கூட பொய்யான ஒரு முகமூடியாய் தோன்றிற்று. விரும்பியோ விரும்பாமலோ இது தான் சரி என்று இந்த சமுதாயம் தீர்மானித்ததை ஏற்றுக் கொண்டு விதவிதமான முகமூடிகள் அணிந்து கொண்டு வெளியில் நடமாடுகிறேன். உள்ளுக்குள் மட்டும் எது நானென்று பெருங்குழப்பம். குழப்பம் மட்டுமே வாழ்வின் மிச்ச சொச்சமோ. இதற்கெல்லாம் தீர்வாக அவள் உரையாடல். எதையும் எடுத்தெறிந்தாய் போல் பேச்சு. மறைக்காமல் தெளிவாய் தன் பலம் பலவீனம் அணிந்த தோரணை.

அமைதியாய் போய்க் கொண்டிருந்த உரையாடல்களில் சிகரம் வைத்தாற் போல ஒரு நாள் ‘நாம் சந்தித்தாலென்ன?’ என்றாள்.

இதுவரை ஒரே ஊரில் இருந்தாலும் என் மனம் அவளை சந்திக்க முற்பட்டதில்லை. ஏனோ தெரியவில்லை. சந்திப்பதற்கான தேவையும் ஏற்பட்டதில்லை. இப்போது அவளே கூப்பிடுகிறாள். போய் தான் பார்க்கலாமே.

இன்று தான் அவளை சந்திக்கப் போகிறேன். நீண்ட நாள் தோழமையை சந்திக்கப் போகிறோமென்று. பதட்டம்..படபடப்பு… இன்னதென்று என்று பிரிக்க முடியாத பலவகை உணர்ச்சிகள். ஒருவாறாய் கட்டுப் படுத்திக் கொண்டு குறிப்பிட்ட இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். நடையில் துள்ளலா தள்ளாட்டமா? தெரியவில்லை. பரவசத்துடன் கோவிலில் குடியிருக்கும் அம்மனை தரிசிக்கப் போகும் பக்தனைப் போல. அந்த இடத்தின் வாசலை அடையும் போது அவள் சொல்லியிருந்தது ஞாபகம் வந்தது.

‘இளநீல வண்ண சுடிதார் அணிந்திருப்பேன். அந்தக் கடையின் முன் நின்றிருப்பேன். குதிரை வால் கொண்டை.’ அவள் அலைபேசி எண்ணைத் தரவில்லை.

மனத்தினில் ஆயிரம் கற்பனைகள். எப்படியிருப்பாள் என்று. பெரிதாய் இறுமாந்து நின்றிருந்த அந்த வணிக வளாகத்தின் முன் நிற்கையில் ஏனோ சின்னதாய் தோன்றினேன். மெலிதாய் சீட்டி அடித்தப்படி படிகளில் ஏறுகையில் கால் தடுக்கி தடுமாறினேன். உண்மையிலேயே தடுமாற்றமோ?

பார்த்து வைத்திருந்த பல ஒத்திகைகள் கண்முன்னே வந்துப் போயின. முதலில் என்ன பேச ஆரம்பிக்கலாம்? என்ன பேசலாம்? எங்கு போய் சாப்பிடலாம்? என்ன மாதிரி உடை அணிந்தால் பார்க்க நன்றாய் இருக்கும். எவ்வளவு கற்பனைகள் மனதினில்.

ஆயிரம் கைகள் சேர்ந்து அறைந்தார் போல் ஒரு வலி. முகமூடி தொலைத்து தொடர்பு கொண்டவளைப் பார்க்க விதவிதமான முகமூடிகளை தேர்வு செய்கிறேன். இன்றோ பகட்டான உடை அணிந்து அவளைப் பார்க்க. உலகே என்னைச் சுற்றி நின்று கைக்கொட்டி சிரிப்பதாய் கூச்சமாயிருந்தது. குழப்பங்களிலிருந்து விடுபட்டு விட்டதாய் குழம்பிக் கொண்டிருக்கிறேன். எங்கேயோ தொலைந்து போன மனிதத்துள் நானும் ஒருவனாக…

நிமிர்ந்து பார்த்தேன். தூரத்தில் அவள் அடையாளம் சொன்ன கடை. கலங்கிய கண்களில் பிம்பமாய் பலர். எல்லோரும் நீல வண்ண ஆடை அணிந்தது போல் தோன்றியது. தெளிந்துவிட்டேனா குழம்புகிறேனா. தெரியவில்லை. எது தொலைத்தேன்? எதைத் தேடுகிறேன்? இன்னும் புரியவில்லை. தன்னிச்சையாக என் கால்கள் திரும்பி படியில் இறங்க ஆரம்பித்தது.


Blogger Templates by Isnaini Dot Com. Powered by Blogger and Supported by ArchiThings.Com - Modern Architecture Design