Friday, April 30, 2010

வலி

இருக்கும் ஒரு இருபத்தி அஞ்சு வருஷத்துக்கும் மேல இந்த கோயிலுக்குள்ள நுழைஞ்சு. வானுயர நிற்கும் கோபுரத்தையும் மாடவாசலையும் தாண்டிப் போனா நிறைய பிரகாரங்களா வரும். சின்ன வயசுல கோயில சுத்தறது தான் பொழுதுபோக்கே. இந்த அம்பத்தி எட்டு வருஷமா இந்த ஊர விட்டு எங்கேயும் போனதில்லை. தினமும் கோயில் கோபுரத்தை பார்ப்பேன். சின்ன வயசிலேர்ந்தே அப்பா புத்தியோட பக்தியும் சேர்த்து தான் சொல்லித் தந்தார். கடவுள சேவிச்சா அன்னிக்கு நாள் நல்லாயிருக்கும்னு. தினமும் கோபுரதரிசனம் முடிச்சதுக்கு அப்புறம் தான் மத்த வேலைகளே ஆரம்பிக்கும். எல்லாம் நல்லா தான் போயிட்டு இருந்துச்சு அந்த சம்பவத்துக்கு முன்னாடி வரை.
பையனுக்கு கல்யாண வயசாச்சுன்னு பொண்ணு தேட ஆரம்பிச்ச அப்பா அதே ஊர்லேயே பொண்ணு பாத்து கல்யாணம் பண்ணி வச்சுட்டார். கல்யாணம் முடிச்ச கையோட தன் வேலை முடிஞ்சுடுச்சுனு தோணுச்சோ என்னவோ எண்ணி பத்து மாசத்துலேயே போய் சேர்ந்துட்டார். அப்போ கல்யாணி நிறைமாச கர்ப்பிணி. அப்பா காரியமெல்லாம் முடிஞ்சு அடுத்த ஒரு வாரத்துலேயே வரது பொறந்தான். அப்பாவே வந்து பொறந்திருக்கான்னு எல்லோருக்கும் சந்தோஷம்.
சோகத்திலேயும் அம்மாக்கு ஒரு சந்தோஷம். சந்ததி தழைச்சுடுச்சே.. ஆத்துக்காரரே வந்து பேரனா பொறந்த மாதிரி. வரதுக்குட்டியை கொஞ்ச ஆரம்பிச்சா. நல்லதும் கெட்டதும் மாறி மாறி வரும்னு சொல்லுவாங்க. அப்பா கல்யாணம் பண்ணிக்கிட்டதுலேர்ந்து எங்கேயும் தனியா போனதில்லையாம். அது தான் முத வருஷ திதி வர்றதுக்குள்ளேயே தனியா இருக்க பயந்து அம்மாவையும் கூட்டிக்கிட்டார். பேரனைக் கொஞ்சிக்கிட்டு இருக்கறப்பவே நெஞ்சு வலின்னு படுத்தவ தான். கண்ணை அப்புறம் தொறக்கவே இல்ல.
அப்புறம் வாழ்க்கை போயிட்டு இருந்துச்சு. அதே ஊர்லேயே தாசில்தார் ஆபிஸ்ல வேலை. வாழ்க்கைக்கேற்ற வருமானம். கல்யாணியும் ரொம்ப ரொம்ப நல்லவ. புருஷங்காரன் கொண்டு வர்ற சம்பளத்துல கச்சிதமா குடும்பம் நடத்த தெரிஞ்சவ. வரதுக்கு அப்புறம் லக்ஷ்மி பொறந்தா. எல்லாம் நல்லபடியா தான் இருந்துச்சு அந்த நாள் வரைக்கும்.
வீட்ல ஒரே பையங்கறதால எப்பவுமே வரதுக்கு செல்லம் அதிகம். எப்பவுமே அவன் செட்டு பசங்களோட சுத்திக்கிட்டே இருப்பான். ஆனா ஒழுக்கந்தவறாதவன். சில சமயம் திட்டுனா மட்டும் அப்படி மொறச்சு பார்ப்பான். யாராச்சும் கொஞ்ச உதவி பண்ணுடான்னு சொன்னா மொத ஆளா போய் நிப்பான். அப்படியே அப்பா குணம்.
அன்னிக்கு ஆடிப் பெருக்கு. ஆத்துல தண்ணி நல்லா வந்துட்டு இருந்துச்சு. பசங்களோட சேர்ந்து குளிச்சுட்டு வர்றேன் கிளம்பிப் போனவன் தான். பையன ஆத்துத் தண்ணி அடிச்சுட்டு போச்சுனு தகவல் மட்டும் தான் வந்து சேந்துச்சு. அடிச்சுபுடிச்சு ஆத்துக்கு ஓடினா அவன மாதிரி இன்னும் ரெண்டு மூணு பேரும் போயிட்டாங்களாம். கண்டுபுடிக்க முடியலேன்னு சொன்னாங்க. கல்யாணி அழுது அரற்ற கோயிலுக்கு ஓடினேன்.
‘எப்பவுமே நல்லது கெட்டதுக்கெல்லாம் நீ தான் காரணம்னு அப்பா சொல்லுவார். இப்போ நடக்கறதுக்கும் நீ தானே காரணம். காரணமே இல்லாம அப்பாவ கொண்டு போய் வரதுவா பொறக்க வச்ச. இப்போ பத்து வயசு புள்ளைக்கு ஏன் இந்த கண்டம். கடவுளே..! நல்லபடியா என் புள்ளைய மட்டும் என்கிட்ட சேத்துடு. நான் காலம் முழுக்க உனக்கு கடமைப்பட்டிருப்பேன்…”
அடுத்த நாள் அஞ்சு கிலோமீட்டர் தள்ளி ஒரு புதர்ல வரது கிடைச்சான். அன்னிக்கு கடைசியா அந்த ஆத்துல முழுகினது தான். அப்புறம் அந்த கோயில் பக்கமும் போனதில்ல. ஆத்துக்கும் போனதில்ல. கல்யாணியும் லக்ஷ்மியும் எவ்ளோ கூப்பிட்டாலும் கோயிலுக்குள்ள போகக்கூடாதுங்கற வைராக்கியம் தான் ஜெயிச்சுக்கிட்டு இருந்துச்சு.
இதோ.. ரிட்டையர் ஆயாச்சு. லக்ஷ்மியும் நல்ல இடத்துல வாக்கப்பட்டு போயிட்டா. நேத்து தான் வேலைக்கு சேர்ந்த மாதிரி இருந்துச்சு. அதுக்குள்ள ரிட்டையர்மெண்ட் வயசாயிடுச்சு. கல்யாணிக்குத் தான் கவலை. ‘இனி எப்படி நான் இருக்கப் போறேன்’னு. ‘அடிப் பைத்தியமே. இவ்ளோ நாள் எனக்காக நம்ம குடும்பத்துக்காக இவ்ளோ தூரம் உழைச்சிருக்க. கொஞ்சம் ரெஸ்ட் எடு’. காலங்கார்த்தாலேயே எந்திரிச்சு பால் வாங்கிட்டு வந்து அவளை எழுப்பாம காபி போட்டு.. அட அவ எப்படிப்பட்ட காபி குடிப்பா.. சக்கர தூக்கலாவா கம்மியா வா.. தெரியலியே.. இதுகூட தெரியாத முட்டாளா நான். என்னைப்பத்தி எல்லா விஷயமும் அவளுக்குத் தெரியும்.. எனக்கு? என்னை நானே நொந்துக்கிட்டேன்.
அவளை எழுப்பிவிட்டதும் ஆச்சர்யமா மலங்க மலங்க முழிச்சா. பாக்கறதுக்கே சிரிப்பா இருந்துச்சு. என் கல்யாணி இவ்ளோ அழகா என்ன? கலைஞ்சு போன தலையில அங்கங்க நரைமுடி. கன்னத்துலேயும் நெத்தியிலேயும் சுருக்கங்கள். ம்ம். வயசாயிடுச்சு. ஆனாலும் கொள்ள அழகு. எனக்கும் தான் நரைவிழுந்து பாதி முடி காணாம போயிடுச்சு. இதுநாள் வரை சமையக்கட்டுக்குள்ளேயே வராத மனுஷன் காபி போட்டு எடுத்துட்டு வந்துட்டானேன்னு அவளுக்கு தலைகால் புரியல. மகளுக்கு போன போட்டு அப்படியே ஒப்பிக்க ஆரம்பிச்சுட்டா. சிரிப்பா தான் வந்துச்சு. அடியே இனி இருக்கற நாளெல்லாம் உன்கூடத் தான் உனக்காகத் தான்.
காலையிலே சாப்பிட்டு வெளியே வந்ததும் கோயில் கோபுரம் கண்ணுக்குத் தெரிஞ்சது. இத்தனை நாள் போகாதவன் இன்னிக்கு போய் தான் பார்ப்போமே எனத் தோண உள்ளே நுழைஞ்சேன். ரொம்பவே மாறிப்போச்சு. அதிசயமா இருந்துச்சு. பிரகாரங்கள தாண்டி அந்த ஆயிரங்கால் மண்டத்துல வந்து உட்காந்த போது மனசுக்கு இதமா இருந்துச்சு. நினைச்சுப் பாத்தே சிரிச்சுக்கிட்டேன். கடவுள்கிட்ட சண்ட போட்டத நெனச்சு. அப்போ தான் அந்த ஜோடி என்னைக் கடந்து போனாங்க. புதுசா கல்யாணம் ஆன ஜோடி போல. பையன் முகத்துல அப்படி ஒரு சந்தோஷம். வரது இருந்தா இந்நேரம் இவன மாதிரி தான் இருப்பான். கொஞ்ச நேரம் அப்படியே கண்ணசந்துட்டேன்.
யாரோ அழற சத்தம் கேட்டு திடுக்கிட்டு எந்திருச்சேன். நானிருப்பது தெரியாமல் ரெண்டு தூண் தள்ளி ஒருத்தன் அழுதுட்டு இருந்தான். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பாத்த பையன் தான்.
‘தம்பி.. ஏன்ப்பா அழற..?’
நிமிர்ந்து பாத்த அவன் அவசர அவசரமாய் கண்ணை துடைச்சுக்கிட்டான். ‘ஒன்னுமில்லீங்க’.
‘சரிப்பா.. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் ஒரு பொண்ணோட சாமி கும்பிடப்போன. இப்போ தனியா அழறியே? என்னாச்சு?’ அவன் முகம் வாட்டத்துக்கு போச்சு.
‘ஒன்னுமில்லீங்க. அவ என் பொண்டாட்டி தான்.’
‘மங்களகரமான லட்சணமான பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டு ஏன்ம்பா அழற?’
‘அது ஒன்னு தான் கொறச்சல். அத நம்பி தான் ஏமாந்தேன்.’
‘கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுப்பா’
 ‘போன வாரம் தான் சார் எனக்கு கல்யாணமாச்சு. நான் பெங்களூரில இஞ்சினியரா இருக்கேன்.’
‘ம்’
‘கல்யாணத்துக்கு முன்னாடி போன் பண்ணுறபோதெல்லாம் நல்லா தான் பேசிட்டு இருந்தா. கல்யாணம் முடிஞ்ச அன்னிக்கு என்ன தொடக்கூடாதுன்னுட்டா.. சரி. கூச்சப்படறா. சரியாயிடும்னு இருந்துட்டேன். இன்னிக்கு திடீர்னு கோவிலுக்குப் போலாம்னு சொன்னா. சரியாயிட்டா போலனு இங்க வந்து பாத்தா..’
‘ம்..ம்’
‘யாரோ ஒருத்தன காமிச்சு இவன தான் லவ் பண்றேன்னு சொல்றா. தலகால் புரியல. என்ன சொல்றேன்னு கேட்டா.. ரொம்ப நாளா ரெண்டு பேரும் லவ் பண்றோம். வீட்டுலேயும் தெரியும். இவர் வேலை விஷயமா வெளிநாடு போயிருந்தார். அப்போன்னு பாத்து கல்யாணத்துக்கு நிச்சயம் பண்ணிட்டாங்க. என்ன பண்றதுன்னு புரியல. இவருக்கும் வர முடியல. உங்ககிட்ட சொன்னா இவரை கொன்னுடுவோம்னு வீட்ல மிரட்டினாங்க.. எங்களுக்கும் என்ன பண்றதுனு புரியலன்னு சொன்னா சார்..’
‘என்ன தம்பி இவ்ளோ சாதாரணமா சொல்ற. அதுக்காக உன்னைய கல்யாணம் பண்ணி கழுத்தறுக்கறது எந்த விதத்துல நியாயம்?’
‘அதே தான். சார். நான் பாட்டுட்டு என் வேலைய பாத்துட்டு இருந்தேன். இதான் பொண்ணு புடிச்சிருக்கான்னு கேட்டுட்டு கல்யாணமும் பண்ணிவச்சுட்டு இப்போ அவ வேற ஒருத்தன காமிச்சு அவன் கூடத் தான் வாழப்போறேன்னு சொல்றா. நான் என்ன சார் தப்பு பண்ணினேன்? இவங்க காதலிச்சா கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே.. என் லைஃப்ல ஏன் சார் விளையாடறாங்க…?’
‘புரியுது தம்பி. உன் கோவம் புரியுது. இப்போ அந்த பொண்ணு எங்க…?’
‘எல்லாத்தையும் பேசிட்டு இன்னிக்கு தான் இவர் வந்தார். இதுக்கு மேலயும் உங்கள நாங்க தொந்தரவு பண்ணல. மன்னிச்சுக்கோங்கனு கழுத்தில இருந்த தாலிய கழட்டி கையில குடுத்துட்டு அவன்கூட போயிட்டா சார்…’ சொல்லிட்டு இருக்கும்போதே அழ ஆரம்பிச்சான். என்ன சொல்றதுன்னே தெரியல. ஏன் எல்லோருக்கும் இப்படி கஷ்டம் வருது. இந்தப்பையன் என்ன பாவம் பண்ணினான். இந்த உலகத்துல கடவுளே இல்லியா.. இவ்ளோ பெரிசு பெரிசா கோவில்லாம் கட்டி வச்சிருக்காங்க. அப்ப கூட மக்களுக்கு நல்லது பண்ணணும்னு ஏன் கடவுளுக்கு தோண மாட்டேங்குது. அந்த பையனுக்காக மனசு கஷ்டப்பட்டது.
‘கவலைப்படாதப்பா. எல்லாம் நல்லபடியா நடக்கும். தைரியமா வீட்டுக்குப் போ. நடந்தத சொல்லு. எல்லா பிரச்சனைக்கும் தீர்வு உண்டு. மனசு வலிக்கத் தான் செய்யும். புரியுது. கொஞ்ச காலம் போனா குழம்பின குட்டை மாறி இருக்கிற மனசு தெளிவாயிடும்.’
அவன் முகம் மாறியது. தெளிவு கொஞ்சம் கண்ணில் தெரிஞ்சது.
‘சரி தான். என் பிரச்சனை.. என்னோட போகட்டும்.. வீட்ல போய் என்ன சொல்லப்போறேன்னே தெரியல..’
‘கவலையவிடுப்பா.. எல்லாம் நல்லதுக்கு தான். இப்போவே உண்மை தெரிஞ்சுதே.. தைரியமா போ.’ சலிச்சுக்கிட்டே கிளம்பினான். மனசு அவனுக்காக பரிதாபப்பட்டது. ‘இவனுக்கு என்ன குறை? இந்த வயசுலேயே ஏன் இந்த வலி??’
அடுத்தநாள் காலையில எந்திரிச்சதும் முகத்துல சந்தோஷமா என் கல்யாணி காபி குடுத்துட்டு பேப்பர எடுத்துட்டு வந்தா. காபிய குடிச்சுக்கிட்டே பேப்பர திறந்தா கொட்ட எழுத்தில ‘கள்ளக் காதலனுடன் புதுமனைவி ஓட்டம். கணவன் தற்கொலை’னு போட்டிருந்தான். வரது செத்ததுக்கு அப்புறம் மொத மொறயா என் கண்ணுல தாரை தாரையா கண்ணீர் வந்தது. மனசு வலித்தது.

Tuesday, April 27, 2010

உன்னை தற்கொலை செய்யவா?! - பகுதி 2


புது டெல்லி. இன்னமும் விடியாத காலைப்பொழுது. குளிருக்கு இதமாய் ஸ்வெட்டர் போட்டுக் கொண்டு சாலையோரமாய் நடக்கும் மக்கள். எங்கும் அமைதியாக இருக்க சைரன் வைத்திருந்த வாகனங்கள் வெளிச்சதைக் கக்கியபடி சர் சர்ரென்று அந்த கட்டத்தின் முன்வாசலில் நின்றன. செக்யூரிட்டி கதவை திறந்துவிட அவர்கள் அடித்த சல்யூட்டை வாங்கிக் கொண்டே பைஜாமா குர்தாக்களில் இருந்த கேபினட் அமைச்சர்கள் இறங்கினர். வந்திறங்கிய இடம் நம்பர் 7, ரேஸ் கோர்ஸ் சாலை, டெல்லி. பிரதம மந்திரி இல்லம்.
அதிகாலையிலேயே தொலைப்பேசியில் தகவல் வந்ததை அடுத்து அனைவரும் ஏன் எதற்கென்று புரியாமல் வந்திருந்தனர். மெல்லியதாக கொட்டாவி விட்டபடி வேளாண்மை அமைச்சரும் ஜவுளித்துறை அமைச்சரும் பேசிக்கொண்டே உள்ளே நுழைந்தனர்.
“என்னய்யா.. காலங்கார்த்தால தூங்கக் கூட விடாம.. அப்படி என்ன தலை போற அவசரம்னு கூப்பிட்டு இருக்காங்க..” இது ஜவுளி.
“தெரியலேப்பா.. எவனாவது யாரையாவது சுட்டிருப்பான். அதுக்காக ஆலோசனைங்கற பேர்ல எல்லோரையும் கூப்பிட்டு இருப்பாங்க.. அவசரத்துல வீட்ல கூட சொல்லாம வந்துட்டேன்…” வேளாண்மை முணுமுணுக்க அனைவரும் வந்தவுடன் வீட்டின் கதவு சாத்தப்பட்டது. நீண்டு போடப்பட்டிருந்த மேஜையில் நடுநாயகமாய் உட்கார்ந்திருந்தார் இந்திய நாட்டின் பிரதம மந்திரி. வழக்கமாக மந்தகாசப்புன்னகையுடன் குழப்பம் நிறைந்திருந்த மந்திரிகளின் முகத்தைப்பார்த்துக் கொண்டே பேச்சை ஹிந்தியில் ஆரம்பித்தார்.
“அனைவருக்கும் வணக்கம். ஒரு முக்கிய விஷயமாக பேசுவதற்காக உங்க எல்லோரையும் கூப்பிட்டிருக்கோம். நாட்டின் பாதுகாப்பிற்கு ஒரு சின்ன பிரச்சனை ஏற்படலாம் என்று தெரிகிறது. இது எல்லாவற்றையும் பற்றி சொல்வதற்கு முன்னால இந்த கூட்டத்திற்கு சம்பந்தப்பட்ட தேசிய விஞ்ஞானக்குழு ஆலோசகர் திரு. சுந்தரராமனை அறிமுகப்படுத்துகிறேன். மேலும் விவரங்களை அவர் விவரிப்பார்.”
மூலையில் உட்கார்ந்திருந்த சுந்தரராமன் தொண்டையை கனைத்துக் கொண்டே எழுந்தார்.
“எல்லோருக்கும் காலை வணக்கம். நான் சுந்தரராமன். தேசிய விஞ்ஞானக்குழு ஆலோசகர். இஸ்ரோ இரண்டு வருடங்களுக்கு முன்பு சந்திராயன் – I ஐ நிலவுக்கு அனுப்பியது உங்கள் எல்லோருக்கும் தெரியும். சில தொழில்நுட்பப்பிரச்சனைகளால் எதிர்பார்த்திருந்த காலத்தைவிட முன்னதாகவே தொடர்பு அறுந்துவிட்டது.. இப்போ ஏற்பட்டிருக்கும் சில சூழ்நிலைகளால் நாம ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி அடுத்த மிஷனை முன்னதாகவே அனுப்ப வேண்டிய கட்டாயம். அதைப் பற்றி தெரிவிக்கத் தான் இந்த கூட்டம்..”
அமைச்சர்கள் கூட்டம் அமைதியாக இருந்தது. இப்போது தலையை திருப்பி பிரதம மந்திரியை பார்த்தனர். அவர் இப்போது ஆரம்பித்தார்.
“உண்மை தான். சிலர் நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் நமது விஞ்ஞானிகளுக்கு கிடைத்த சில அரிய தகவல்களைக் கொண்டு இந்த முடிவு எடுத்திருக்கிறோம். இன்னும் இரண்டு மாதத்தில் இந்தியாவின் புது விண்கலம் சந்திரோதயன் நிலவை நோக்கி கிளம்பும் “
இன்னும் ஒன்னும் புரியாமல் எல்லோரும் விழித்திருக்க தகவல் தொலைத் தொடர்பு துறை அமைச்சர் பேச ஆரம்பித்தார்.
“அப்போ இது புதுத் திட்டம். எப்போ நிதி ஒதுக்கப்பட்டது. எப்போ விண்ணில் செலுத்தும் எண்ணம்? இதைப் பற்றி ஏன் யாருக்கும் சொல்லவில்லை?”
“போன வருடம் தேசிய பாதுகாப்பு குழுவில் எடுக்கப்பட்ட முடிவு. பொதுவில் விவாதிக்க முடியாத சில விஷயங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு ஜனாதிபதியிடமும் ஒப்புதல் வாங்கியாகிவிட்டது. நாட்டில் எல்லா இடத்திலேயும் ஓட்டை. இப்போ இங்கே பேசும் அத்தனை விஷயங்களும் இன்னும் பத்து நிமிஷத்தில் வெளியே இருக்கும் பத்திரிக்கையாளர்களிடம் போய்விடும். அந்த லட்சணத்தில் முக்கிய பாதுகாப்பு விஷயங்களுக்காக பரிட்சை செய்ய விரும்பவில்லை. இப்போ கூட பொதுவில் மக்களுக்கு அறிவிக்க வேண்டிய கட்டாயம் வந்துள்ளதால் தான் இந்த கூட்டமே.”
“ஏதோ பாதுகாப்பு பிரச்சனைனு சொன்னீங்க. என்ன அது?”
“நமக்கு வேண்டாத சிலர் தீவிரவாதிகளால் நம் விண் ஆராய்ச்சிக்கு முட்டுக்கட்டை போடப்போறதா தகவல். அவங்க யார்.. எங்கிருந்து வர்றாங்கன்னு இன்வெஸ்டிகேஷன் நடக்குது. உள்துறை அமைச்சரின் நேரடி மேற்பார்வையில். மேற்கொண்டு விவரங்களை இப்போ பேச முடியாது. அதே சமயம் நாம் எதிர்பார்த்ததுக்கு முன்னாடியே கிடைச்ச சில தகவல்கள். அதனால நிலவுக்கு விண்கலம் அனுப்பலாம்னு ஆராய்ச்சித் துறை சிக்னல் கொடுத்திருக்காங்க. இந்த தகவல்கள் போதுமா.. இல்லை இன்னும் ஏதாச்சும்..?”
எல்லோரும் மௌனித்திருக்க
“சரி.. இன்னும் சற்று நேரத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும். வழக்கம் போல எதிர்கட்சியின் பிரச்சாரத்துக்கு பிரதம மந்திரி அலுவலகம் பதில் சொல்லும். நீங்கள் யாரும் கருத்து தெரிவிக்க வேண்டாம். இத்துடன் கூட்டத்தை முடிச்சுக்கலாம்”
சொல்லிய பிரதமர் எழ இன்னமும் தூக்கம் கலையாமல் கொட்டாவி விட்டபடி ‘இந்த விஷயத்துக்காகவா தூக்கத்திலிருந்து எழுப்பி வரசொன்னாங்க’ன்னு முணுமுணுத்துக் கொண்டே அமைச்சர்கள் கிளம்பி சென்றனர். அடுத்ததாய் பிரதமர் சில முக்கிய பிரமுகர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார். முடிவில் அவர் முகத்தில் தெளிவு பிறந்தது.
“சபாஷ்.. சுந்தரராமன், நீங்க சொல்ற மாதிரி மட்டும் நடந்துடுச்சுன்னா.. உலக அளவில இந்தியா முன்னணி நாடா வந்துடும். ஆனா இந்த பாதுகாப்பு விஷயம் மட்டும் உறுத்துது. அதைப் பத்தி சரியா தகவல் தெரிஞ்சதும் மேற்கொண்டி விவாதிக்கலாம். முப்படைத் தளபதிகளும் அப்போது நம்முடன் இருப்பார்கள்..”
புன்னகைத்துக் கொண்டே சுந்தரராமன் எழுந்தார்.
இரண்டு மணிநேரம் கழித்து அறிவிப்பு வெளியானவுடன் தலைநகரமே அமளிதுமளிப்பட்டது. எல்லா செய்திகளிலும் இதைப் பற்றியே பேச்சு.
பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவர் கொடுத்திருந்த பேட்டியில்,
“நாடே வறுமையில இருக்கு. கிட்டத்தட்ட 37 சதவித மக்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்காங்க. இதுல சந்திரனுக்கு விண்கலம் அனுப்பணும்னு இப்போ என்ன அவசரம். அதற்கு செலவிடப்படும் பணத்துல நாட்டு மக்களுக்கு பல நலத்திட்டங்கள செய்யலாம். கேட்க ஆளில்லாம ஆளும்கட்சி நாட்டின் கஜானாவை காலிப்பண்ணிக்கொண்டிருக்கிறது.”
இதைப்பற்றி பல செய்தி தொலைக்காட்சிகளிலும் விருந்தினர்கள் வரவழைக்கப்பட்டு விவாதங்கள் நடத்தப்பட்டது. நாட்டின் சராசரி குடிமக்களோ எதைப்பற்றியும் யோசிக்காமல் அடுத்த நாள் நடக்கும் ஐ.பி.எல் இறுதியில் சென்னை ஜெயிக்குமா தோற்குமா என கவலைப்பட்டுக் கொண்டிருந்தனர்.
அதே நாள்..
ஹைதராபாத் மாநகரத்தை எல்லையை தாண்டி சில பத்து கி.மீக்கு அப்பால் பெங்களூர் நெடுஞ்சாலையில் போனால் வலப்பக்கம் அந்த சாலை பிரியும். அதில் பயணித்து பதினைந்து கி.மீ சென்றால் “கெத்திரெட்டிப்பள்ளி” என்று தெலுகிலும் ஆங்கிலத்திலும் எழுதப்பட்ட பலகை உங்களை வரவேற்கும். எண்ணி ஊரில் இருநூறு வீடு இருந்தால் அதிகம். முக்கால்வாசி மக்கள் நெசவுத் தொழில் தான். அதனால் ஊரில் எங்கும் சாயமாக இருக்கும். ஆங்காங்கே தென்படும் டிஷ் ஆண்டெனாக்கள் நகரத்தோடு எந்தவிதத்திலும் தாங்கள் சளைத்தவரில்லை என பறைசாற்றியது.
சூரியன் மங்கும் மஞ்சள் வெளிச்சத்தில் ஊரே ஜொலிக்க அந்த கிராமத்தைக் கடந்த அம்பாசிடர் கார் பழங்கால கட்டிடமாய் இருந்த அந்த ரைஸ்மில்லின் முன் நின்றது. சரியான பராமரிப்பு இல்லாமல் ஆங்காங்கே காரை பெயர்ந்து இருந்தது.
காரிலிருந்து ஒரு ஐம்பது வயதுக்கும் மேல் மதிக்கத்தக்க அந்த மனிதர் இறங்கினார். பாதி நரைத்தும் நரைக்காமலும் இருந்த தலைமுடி, கண்ணில் வயதுக்கேற்ற கண்ணாடி, முழுக்கை சட்டை. நெற்றியில் எப்போதும் நிரந்தரமாய் கோடுகள். அவர்  இந்திய தேசிய விஞ்ஞானக்குழுத் தலைவர் நாராயணரெட்டி.
மில்லுக்குள் நுழைந்ததும் கவனமாய் கதவை சாத்தினார். அரவை இயந்திரங்களைத் தாண்டி… சுவரோரமாய் உமி குமிக்கும் இடத்துக்கு அருகில் சென்றார். கீழிருந்த பலகையை நகர்த்தி மெல்லியதாய் தெரிந்த கைப்பிடியைத் திருக கீழே படிக்கட்டுகள் தெரிந்தன. பொறுமையாய் அதனுள் இறங்கியதும் அந்த இடத்திற்கும் அதற்கும் சம்பந்தமில்லாத மாதிரி நவீன மயமாய் இருந்தது. வெளிச்ச ஒளிக்கற்றைகள் அறையெங்கும் பரவ நவீன ரக தடுப்புச்சுவர். நிற்க வேண்டிய இடத்தில் நின்றதும் கண்ணுக்குத் தெரியாத குறைந்த அழுத்த மின்காந்த அலைகள் அவருள் பரவி அவரின் அடையாளங்களையும் ரத்த அழுத்தத்தையும் சரிபார்த்து அவர் இன்னார் தான் என உறுதி செய்தவுடன் அந்தக் கதவு திறந்தது.
உள்ளே ஆங்காங்கே மேஜைகளும் அதன் மேல் வைக்கப்பட்டிருந்த பலவிதமான கருவிகளும் கம்ப்யூட்டர் சமாச்சாரங்களும் ஏதோ தீவிர சோதனை நடைபெறுவதற்கான அறிகுறிகளைக் காட்டியது. அந்த இடம் இந்திய அரசாங்கத்தால் ரகசியமானவர் பெயரில் சில ஆண்டுகளுக்கு முன் கையகப்படுத்தப்பட்டது. அந்த கிராமத்தில் இருக்கும் மக்கள் அரசாங்க உளவாளிகளும் பாதுகாப்பு வீரர்களும். பாதுகாப்பு வீரர்கள் ஆடு மேய்க்கும் இடையர் வேடத்தில் அந்நிய நபர்களின் நடமாட்டத்தை கவனித்து வருகிறார்கள். கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு முன் யாருக்கும் சந்தேகம் வராத மாதிரி அந்த கிராமம் உருவாக்கப்பட்டது. அதைப்பற்றிய குறிப்புகளும் அரசாங்க பதிவேட்டில் ஏற்றப்பட்டது. ஏதோ ஒரு முக்கிய சோதனைக்காக கிட்டத்தட்ட பத்து கி.மீ சதுரத்தில் உள்ள அனைத்து நடவடிக்கைகளும் காமிரா மூலம் கவனிக்கப்பட்டு வருகிறது யாருக்கும் தெரியாமல். ஊர் உலகிற்கு அது ஒரு வழக்கமான இந்திய கிராமம். அவ்வளவு தான்.
அவர் உள்ளே நுழைந்ததும் அவருக்காகவே காத்திருந்த மாதிரி மூவரும் நிமிர்ந்தனர். சோதனைக்கான கோட்டில் இருந்தவர்களில் நடுத்தர வயதுடைய நபர் தான் அந்த சோதனைக்கு சொந்தக்காரர். ராஜசேகரன். நாற்பதுகளில் இருக்கும் அவர் வேதியியல் பாடத்தில் முனைவர் பட்டம் பெற்ற கையோடு அரசாங்க வேலையில் சேர்ந்தார். அவரின் மூளையில் உருவான திட்டத்திற்கான சோதனை தான் அது. அவருக்கு உதவியாளர்களாக மிருதுளாவும் ப்ரணவும். மிருதுளா. இளம் வயது. அறிவியலில் ஆர்வம் அதிகம். ஐஐஎஸ்ஸியில் மேற்படிப்பை முடித்தவுடன் ராஜசேகரனால் கண்டுபிடிக்கப்பட்டவள். பேருக்கேற்ற மாதிரி மிருதுவான உருவம். கூர்மையான நாசி. சிரித்தால் தெரியும் தெற்றுப்பல். அலையலையாய் சுருண்டிருக்கும் நெடிய கூந்தல். கண்ணில் ஆர்வம் கொப்பளிக்க ரெட்டியையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் பக்கத்தில் ப்ரணவ். அவள் காதலன். ஆறடி உயரம். சற்றே மாநிறம். சற்றே சுருட்டையாய் முடி. கச்சிதமாய் நறுக்கப்பட்ட மீசை. இரண்டு நாள் தாடி. காது மடல் வரை விடப்பட்ட கிருதா. அவளுடன் ஒன்றாய் படித்தவன். அவளுடன் சேர்ந்து ஆராய்ச்சி செய்ய ராஜசேகரனிடம் போராடி சேர்ந்தவன். சேர்ந்த நாள் முதல் கண்ணும் கருத்துமாய் வேலையில் ஈடுபட்டு நல்ல பேர் எடுத்தவன். கிடைக்கும் ஓய்வு நேரத்தில் மட்டும் மிருதுளாவுடன் காதல் புரிந்தான். அவனும் ரெட்டியையே பார்க்க அவர் வாயைத் திறந்தார். ஆங்கிலத்தில்..
“நண்பர்களே.. நாம் நினைத்தது நடந்துவிட்டது. இன்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டுவிட்டார்கள். இன்னும் இரு மாதத்தில் சந்திரோதயன் புறப்பட போகுது. நமது சோதனையில் வெற்றியில் தான் இந்தத் திட்டமே உருவானது. கூடிய சீக்கிரமே நாம் இதைக் கொண்டாடக்கூடிய நாள் வரும். உங்க சோதனைகள் எல்லாம் எப்படி போய்க்கிட்டு இருக்கு?”
சந்தோஷத்தில் முகம் மலர்ந்திருந்த ராஜசேகர் ஆரம்பித்தார்.
“ரொம்ப ரொம்ப சந்தோஷமான விஷயம். சோதனைகள் எல்லாம் இதுவரை வெற்றிகரமாகத் தான் போய்க்கிட்டு இருக்கு. இதுவரை சக்ஸஸ் ரேட் நூறு சதவிகிதம். இன்னும் சில டெஸ்ட் தான் இருக்கு. அதையும் முடிச்சுட்டா போதும். ஜெயம் தான்…”
“கேட்கவே ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. எங்கே நமது ஆராய்ச்சியின் பலன்?”
ராஜசேகரன் காட்டிய திசையில் ஆர்வமாய் பார்த்தார். அங்கே பல சாதனைகள் புரிய போகும் அந்த இயந்திரம் ஏதும் அறியாத குழந்தை போல் அமைதியாய் அந்த மேஜையின் மேல் வீற்றிருந்தது.

Friday, April 23, 2010

வினை விதைத்தவன்...

மு.கு: சத்தியமா இதில் வரும் சம்பவங்கள் உண்மையே. மேலும் இதற்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

கல்யாணம் ஆகாம இருந்தாலும் தான் இருக்கோம். எங்க பாத்தாலும் கல்யாணத்தை பத்தி மட்டும் பேசறதே காதுல விழறது. அடிக்கடி மாப்ளே கல்யாணம் நிச்சயமாயிடுச்சுடா.. மச்சான். குழந்தை பொறந்திருக்குடான்னு வரிசையா போன் வரும். நமக்கு தான் ஒன்னும் நடக்கல. அடுத்தவனுக்காவது நல்லது நடக்கட்டுமேன்னு போய் நல்லபடியா இருங்கன்னு வாழ்த்திட்டு வர்றது வழக்கம்.

இப்படி தான் அலுவலகத்துல சும்மா மொக்கை போட்டுட்டு இருந்த நேரம் பயலுவ ஒரு விஷயத்தை சொன்னாங்க. எங்க ஜீனியர் பையன் ஒருத்தன் கிட்டத்தட்ட ரெண்டு மூணு நாளா ஆள காணல. எங்கடா ஆளக்காணோமேன்னு விசாரிச்சா. பயபுள்ள பொண்ணு பார்க்க ஊருக்கு போயிருக்கான்னு சொன்னாங்க. அட்றா..அட்றா.. வந்தவுடனே ட்ரீட்டுக்கு ஆட்டைய போட்டுட வேண்டியது தான்னு கங்கணம் கட்டிக்கிட்டு காத்திருந்தோம்.

போன வாரம் ஊருக்கு போன பய முந்தாநேத்து தான் வந்தான். அன்னிக்கு அதிசயமா வேலை கொஞ்சம் அதிகமா இருந்ததால் பாத்து பேச முடியல. சரி.. அப்புறமா பேசிக்கலாம்னு பாத்தா ஆள் அஞ்சு மணிக்கெல்லாம் எஸ்ஸாயிட்டான். முகம் வேற சரியில்லை. சரி.. ஊருக்கு போய்ட்டு வந்த களைப்பு நாளைக்கு பாத்துக்கலாம்னு விட்டுட்டேன். ஆறு மணிவாக்கில் எல்லோரும் டீத்தண்ணீ குடிக்க காஃபிட்டேரியா போன போது 'என்னடா ஆச்சி.. ஆள் மூஞ்சியே சரியில்ல.. பொண்ணு புடிக்கலேன்னு சொல்லிடுச்சா என்ன' னு ஆரம்பிச்சேன்.

அப்போ பசங்க சொன்ன கதைய கேட்டு கொஞ்சம் அசந்துட்டேன். சரித்திரத்தை பன்னிரண்டு வருஷம் புரட்டிப்பார்த்தா அந்த புள்ளையாண்டான் ஸ்கூல்ல படிச்சிட்டு இருந்திருக்கான். இப்ப போல அப்பவும் வாலு. எவனையும் விடறதில்லை. பசங்க படத்துல வர்ற வில்லன் கேரக்டர் போல. சும்மா இல்லாம ஒரு நாள் கூட படிக்கற பையன் குடுமிய புடிச்சு இழுத்து வம்பிழுத்திருக்கான். அந்த பையன் அழ பெரிய கலாட்டாவாயிடுச்சு. அதுக்கப்புறம் அந்தப்பையனும் இவனும் பேசிக்கறதில்லை. வீட்டிலே இவனுக்கு செம அடி.. திட்டு. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா எப்படியோ படிச்சி ஒருவழியா கரை சேர்ந்து எங்க கம்பெனியில சேர்ந்துட்டான். இப்போ அப்படியே நேர் மாறா இருப்பான். அவ்ளோ சாது.

அப்படியாப்பட்டவன் பொண்ணு பாக்க வாடான்னு வீட்ல கூப்பிட்டது ஆச ஆசையா போயிருக்கான். போனது சனிக்கிழமை காலை. அன்னிக்கு பொண்ணு பார்க்க கூடாது அடுத்த நாள் தான் பாக்கணும்னு சொல்லிட்டாங்க. அப்போனு பார்த்து பையன் ஜாதகத்தை பார்க்கலாம்னு ஒரு ஜோசியக்காரன்கிட்ட குடுத்திருக்காங்க. அந்த நல்லவன் ஜாதகத்தைப் பார்த்துட்டு இப்போ பொண்ணு பார்த்தா அமையாது. பையனுக்கும் நல்லதில்ல. இன்னும் நாலு மாசம் கழிச்சு தான் பொண்ணு பாக்கணும். அதனால கொஞ்சம் தள்ளிப் போடுங்கன்னு சொல்லிட்டாப்ல..

பயந்து போன இவன் அப்பா அம்மா பொண்ணு வீட்டு சொல்லி அனுப்பிட்டாங்க. 'இப்போதைக்கு நேரம் சரியில்ல. நாலு மாசம் கழிச்சு பாத்துக்கலாம். அதுக்குள்ள உங்களுக்கு வரன் அமைஞ்சா பாத்துக்குங்கன்னு'. அதான் பையன் மூட் அவுட். அவ்ளோ தூரம் போய் பொண்ண கண்ணுலேயே காட்டலேன்னு..

நண்பன் முடிக்க...

'ஓ. அதான் காரணமா.. ஆமா இதுக்கும் அந்த பன்னிரண்டு வருஷ ப்ளாஷ்பேக்குக்கும் என்ன சம்பந்தம்?'

'இருக்கே... அன்னிக்கு இவன் குடுமிய புடிச்சு வம்பிழுத்த அந்த பையன் தான் இப்போ இவனுக்கு ஜோசியம் பாத்த ஜோசியக்காரர்.. பயபுள்ள சரியான நேரம் பார்த்து கால வாரிவிட்டுட்டான்... ஹாஹா..'

அடங்கொப்புறானே.....

நீதி: வினை விதைத்தவன்... எப்போதும் யார்கிட்டேயும் தேவையில்லாம வம்பிழுக்க வேணாம். விதியும் வினையும் எப்போ வேணும்னாலும் சுத்தி சுத்தி அடிக்கும்.

Sunday, April 18, 2010

உன்னை தற்கொலை செய்யவா?! - பகுதி 1

வழக்கம் போல மு.கு: நீண்ட நாள் கழித்து எழுதுகிறேன். எழுதவே வரவில்லை. அதனால் கதையோட்டப்பிழைகளை பொறுத்தருளவும். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தவறாக பயன்படுத்தப்பட்ட வார்த்தை தான் தலைப்பாகியுள்ளது. தலைப்பை வைத்துவிட்டு கதையை தேடிக்கொண்டிருக்கிறேன்.


செப்டம்பர் மாத பெங்களூர் காலை. இரவு முழுவதும் பெய்த மழைக்கு சாட்சியாக சாலையெல்லாம் கழுவிவிட்டது போலிருந்தது. சாலையெங்கும் லாரி தடங்கள். மழை இன்னும் சரியாக விட்டபாடில்லை. சாறலாய் தூறிக் கொண்டிருந்தது. இதமானதொரு தென்றற்காற்று முகத்தை வருடி சொர்க்கம் இன்னும் இருக்கிறது என கங்கணம் கட்டியது. ஆசுவாசமாய் நடந்து செல்லும் வயதானவர்களும் தொப்பையைக் குறைக்க வேகவேகமாய் நடைபயிலும் இளம்வயது மென்பொருள் வல்லுநர்களும் சாலையெங்கும் நிறைந்திருக்க, மரங்களும் செடிகளும் நிறைந்த பச்சைப்பசேல் என்று கண்ணுக்கு குளிர்ச்சி காட்டிய அந்த பூங்கா வெளியே தன் பல்ஸர் பைக்கை நிறுத்திவிட்டு அவன் நுழைந்த போது காலை சரியாக மணி ஆறைத் தாண்டியிருந்தது.
அவன். மாதவன். இளநிலை பட்டதாரி. லட்சத்திற்கும் மேல் பணியாளர்களைக் கொண்ட அந்த மாபெரும் மென்பொருள் நிறுவனத்தில் என்னவோ செய்து குப்பை கொட்டுபவன். வயது இருபத்தியேழு. உயரம் ஐந்தடி பத்தங்குலம். சிறுவயதிலிருந்த உடற்பயிற்சி முறுக்கேறியிருந்த உடம்பு. களையான முகவெட்டு. யாருக்கும் அடங்க மாட்டேன் என்று அடம்பிடிக்கும் தலைமுடி அழகாய் சுருள் சுருளாய் அழகைக்கூட்டியது. வலது கண்ணோரத்தில் சின்னதாய் முகத்தில் வெட்டு பொருத்தமாயிருந்தது. ட்ராக் சூட்டில் இயற்கை காற்றில் முகம் மலர இருந்த அவன் பூங்கா உள்ளே நுழைந்தவுடன் வழக்கம் போல் நடை பயில ஆரம்பித்துவிட்டான். முடிக்க இன்னும் அரை மணிநேரமாவது ஆகும். அதுவரை….
அதே நேரத்தில் பூங்காவிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தள்ளியிருந்த அடுக்கு மாடி குடியிருப்பு. நகரத்தின் பரபரப்பான பகுதியிலிருந்து சற்றே ஒதுங்கியிருந்தது. குடியிருப்பின் அருகாமையிலேயே பெரிய ஏரி அழகுக்கு அழகு சேர்த்தது. ஏறக்குறைய நூறு வீடுகளுக்கும் மேலிருக்கும் அந்த குடியிருப்பில். பால் பாக்கெட் வாங்கவும் காய்கறி வாங்கவும் ஆண்களும் பெண்களும் நடமாட ஆரம்பித்திருந்தனர். வானம் இருட்டை தொலைத்து நீலத்தை அப்பத் தொடங்கியிருந்தது. பத்து மாடிகளைக் கொண்ட அந்த குடியிருப்பின் மூன்றாவது மாடியில் மூந்நூற்றிரண்டாம் இலக்க வீட்டின் உள்ளே சென்றால் விசாலமான அறை. வலது ஓரத்தில் தொலைக்காட்சிப் பெட்டி. இன்னும் சற்று உள்ளே சென்றால் வலப்பக்கம், இடப்பக்கம் என இரண்டு படுக்கை அறைகள். அவசர அவசரமாக வேலைக்கு கிளம்பி செல்லும் அந்தப் பெண்ணைக் கடந்து இடது படுக்கை அறைக்குள் சென்றால் முகத்தில் புன்னகையுடன் அவள் தூங்கிக் கொண்டிருந்த தோரணை அவள் கனவுலகில் சஞ்சாரம் செய்கிறாள் என பட்டவர்த்தனமாக காட்டியது. ‘போய்ட்டு வரேன் டீஈஈஈஈஈ..’ என தோழி கத்தியதில் கூட தூக்கம் கலையாமல் கனவு கண்டு கொண்டிருந்தாள். கடுப்பான தோழி வீட்டை வெளியே பூட்டிவிட்டு செல்ல அவள் கனவில் மாதவன். அவள் சரண்யா. ரம்மியமான தோற்றம். கடல் போல அலை அலையாய் தவழும் கருங்கூந்தல். லட்சணமான கலைபொருந்திய முகம். கனவில் மாதவன் செய்த சில்மிஷங்கள் அவள் முகத்தில் அப்பட்டமாய் வெட்கப்புன்னகையாய் தெரிந்தது. வயது இருப்பத்தியைந்து. எல்லோருக்கும் அடைக்கலம் தரும் பெங்களூர் அவளுக்கும் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை தந்திருந்தது. இன்னும் கலையாத தூக்கத்துடன் காலைத் குறுக்காக போட்டு நைட்டியுடன் அவள் படுத்திருந்த தோரணை… அவ்வ்.. இதுக்கு மேல விவரம் வேண்டாம்.
‘என் இதயம் உடைத்தாய் நொறுங்கவே…’ செல்போன் செல்லமாய் சிணுங்கியது. அதற்கு  குறையாமல் சிணுங்கியபடி செல்போன் எடுத்த சரண்யா உற்சாகமானாள்.
“ஹாய் டா.. குர்மார்னிங்… என்ன நடுராத்திரியிலே போன் பண்ணிருக்க..?”
“என்னது.. நடுராத்தியா… சுத்தம் போ.. மணி இப்போ ஆறரையாகறது. இந்த லட்சணத்துல இருந்தா கல்யாணம் பண்ணி குடித்தனம் நடத்துன மாதிரி தான்.. தூக்கம் கூட கலையல போல…”
“ம்ம்.. இன்னும் முழிக்கவே இல்லே.. ச்சே.. செம கனவு… கெடுத்துட்ட…கனவுல…நீ..”
“கனவுல….நான்..?”
“ச்சீ.. வேண்டாம். சுத்த மோசம்பா நீ.”
“கனவை நீ கண்டுட்டு என்னைய திட்டுற. நல்ல கதையால இருக்கு.”
“ஆமாம்.. அப்படித் தான்.. என்ன பண்ணுவ..”
“இப்போவே அலுத்துக்கற.. உன்னைய தான் எங்கம்மா பையன இந்த பொண்ணு நல்லா வச்சு காப்பாத்தும்னு மலை போல நம்பறாங்க..”
“நான் என்ன பண்ண.. எனக்கென்ன வேற ஆளா கிடைக்காது. என் மகனுக்கு நீ தான் ஏத்த பொண்ணுன்னு உங்கம்மா கெஞ்சுனாங்க.. போனா போதுன்னு ஒத்துக்கிட்டேன்”
“அட..அட.. பொண்ணுக்கு உங்க பையன புடிச்சிருக்குனு உங்கப்பா எங்க வீட்டுக்கு நாலஞ்சு தடவ நடையா நடந்தது மறந்துடுச்சா… என்ன?”
“சரி..சரி.. இன்னும் எந்திரிக்க கூட இல்ல.. அதுக்குள்ள எதுக்கு சண்டை. வழக்கமா ஆபிஸ் போனதும் தானே கூப்பிடுவே.. கேட்டா இத தான் இப்போதைக்கு வேலைன்னு சொல்லுவ.. இன்னிக்கு என்ன ஸ்பெஷலா?”
“ம்ம்.. அத மறந்துட்டு பேசிட்டு இருக்கேன் பாரு. இன்னிக்கு என்ன நாள்…?”
“என்ன நாள்.. உன் பொறந்தநாளா? இல்லியே இன்னும் ரெண்டு மாசமிருக்கே… என்னப்பா.. டென்ஷன் பண்ணாம சொல்லு… ஏற்கனவே தூக்கம் கலைஞ்சு போச்சுன்னு இருக்கேன்.. யோசிக்கற நிலைமையிலேயே இல்ல…”
“ம்ம்.. என்னைவிட தூக்கம் முக்கியமாடுச்சா…?”
“நிஜத்தைவிட நீ கனவுல தான் செம ரொமாண்டிக்கா இருக்க… சரி.. சரி.. கோபப்படாதே.. இன்னிக்கு என்ன நாள்… கொஞ்சமா இருக்கற மூளைய யூஸ் பண்ண வைக்காம சொல்லேன்..”
“இன்னிக்கு நாம் பாத்துக்கிட்டு ஐம்பதாவது நாள்.. ஹேப்பி பிஃப்டியத் டே…”
“ஹா.. எல்லா நாளையும் கணக்கு வச்சுப்பியாப்பா.. ஐம்பது நாளாச்சா.. நேத்து தான் வந்து என்ன பொண்ணு பாத்த மாதிரி இருக்கு..”
“ஆமா.. அதே ஜாலி மூட்ல இன்னிக்கு லீவ் போட்டுடு. நான் நிஜத்துலேயும் எவ்ளோ ரொமாண்டிக்கான ஆள்னு காட்டறேன். ஆமா உன் கூட இரண்டு லூசுங்க தங்கியிருக்குமே.. அதெல்லாம் ஆபிஸுக்கு போயாச்சா…?”
“ஏய்.. என் ப்ரண்டுங்கள லூசுங்காத. பிச்சுப்புடுவேன். காமினி ஒரு வாரம் லீவ். ஊருக்கு போயிருக்கா. தனுஜா காலையிலேயே ஆபிஸுக்கு போயிட்டா. பை த வே நெனச்ச நேரத்துக்கெல்லாம் லீவ் போட இது உங்க ஆபிஸ் மாதிரி இல்லே.. ஒரு வாரத்துக்கு முன்னாடியே சொல்லியாகணும் சார். ஸோ.. இன்னிக்கு ப்ளான் கேன்ஸல் பண்ணிடுங்க”
“ஆஹா.. கனவு அது இதுன்னு சொல்லி கிளப்பிவிட்டுட்டு இப்போ என்ன வாபஸ் வாங்கற. அதெல்லாம் முடியாது. இன்னிக்கு நீ லீவ் போட்டேயாகணும். நிறைய ப்ளான்ஸ் வச்சிருக்கேன். ப்ளீஸ்பா எல்லாத்தையும் கெடுத்துடாத…”
“செம ரொமாண்டிக் மூட்ல தான் ஐயா இருக்கார் போல. சரி போ.. வழக்கம் போல வயித்துவலின்னு சொல்லி சமாளிச்சுக்கறேன். இப்போ இருக்கற மேனேஜர் சரியான சிடுமூஞ்சி. தானும் வாழாது அடுத்தவனையும் வாழவிடாது. டைவர்ஸ் கேஸ்.. சரி..விடு. எப்படியோ சமாளிச்சுக்கறேன். எத்தனை மணிக்கு வரே..?”
“இப்போ மணி ஆறு நாப்பது. ஒன்பது மணிக்கு வழக்கமா நீ ஏறுற பஸ்ஸ்டாப் பக்கத்துல நிக்கறேன். வந்துடு..”
“சரிப்பா.. வந்துடறேன். ஆனாலும் ரொம்ப தான் படுத்தற.. இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கறேன்.. அப்புறம் உங்கம்மாகிட்ட சமைக்கறது எப்படினு ட்ரெயினிங் எடுக்கறல்ல… பை”
“ஏய்…ஏய்ய்…”
மாதவன் குரலை உயர்த்தியதும் கொஞ்சலுடன் செல்போனை அணைத்துவிட்டு கொஞ்ச நேரம் தூங்கப்போனாள் சரண்யா. மறுமுனையில் முகத்தில் வழக்கமான மந்தகாசப் புன்னகையுடன் போனை வைத்த மாதவன் ‘என்றென்றும் புன்னகை’யை சீட்டியடித்தபடி தன் பல்ஸரை விரட்டினான்.
எட்டரை மணிக்கெல்லாம் குளித்து முடித்து கிளம்பிய மாதவன் கூட்டமாய் ஊர்ந்து கொண்டிருந்த பெங்களூர் போக்குவரத்து ஜோதியில் கலந்து மெதுமெதுவாய் முன்னேறினான். வண்டியோட்ட எரிச்சலாய் வந்தாலும் ஒரு நாள் முழுக்க சரண்யாவுடன் செலவிடபோவதை நினைத்து மனம் குதூகலித்துக் கொண்டிருந்தது. ஒருவாறாய் போராடி சரண்யாவிடம் சொன்னபடி பேருந்து நிறுத்தத்திற்கு வந்து நின்றான். மணி சரியா ஒன்பதை காட்டியது.
‘வந்துவிடுவாள். எப்போதும் அவள் பத்து நிமிஷம் லேட்.. ம்ம்’ காத்திருக்கலானான். பத்து நிமிஷம் நரகமாய் கழிந்தது. செல்போனை எடுத்து சரண்யாவின் நம்பருக்கு கால் பண்ணினான். அவனுக்காகவே ப்ரத்யேகமாக சரண்யா வைத்திருந்த காலர் ட்யூன் ஒலித்தது. ‘கண்ணுக்குள் கண்ணை வைத்து இல்லை இல்லை..என்றாயே..’ பொறுமையாய் கேட்டு முடிக்கும் வரை போன் எடுக்கப்படவில்லை. மறுமுறை மறுமுறை என்று மூன்று முறையானதும் வெறுத்துப் போனது. இறுதியாக முயற்சித்த போது ‘தாங்கள் தொடர்பு கொண்ட எண் தற்சமயம் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது’ என கன்னட நங்கை காதில் ஓதினாள்.
‘அவள் வீட்டுக்கே போக வேண்டியது தான்’ என முடிவு செய்தவனாய் வண்டியை கிளப்பி கோபத்தை ஆக்ஸிலேட்டரில் காட்டினான். சரண்யாவின் அபார்ட்மெண்ட்டை அடைந்தது வண்டியை நிறுத்திவிட்டு உள்நுழைந்த போது மக்கள் கூட்டமாய் நின்றிருந்தனர். ஆவல் உந்த உள்ளே நுழைந்து பார்த்தவன் அதிர்ந்தான். போட்டிருந்த நைட்டியுடன் குப்புற விழுந்து சுடசுட இரத்தம் கொப்பளிக்க சற்று முன் தான் சரண்யா இறந்திருந்தாள். பக்கத்தில் சுக்கு நூறாய் தெறித்தப்படி அவள் செல்போனும் அவளுடன் உயிரைவிட்டிருந்தது.

Wednesday, April 14, 2010

பேச நல்ல டைம்..

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

ரொம்ப நாளா ப்ளாக் பக்கமே வரல.. அதான். வாழ்த்து தெரிவிக்க வந்துட்டேன். சில விளம்பரங்கள் ரொம்ப அழகா இருக்கும். எப்படி தான் யோசிச்சாங்கன்னு தெரியாது. அவ்ளோ அழகா எடுத்திருப்பாங்க. அதே மாதிரி அதுல நடிச்சிருக்கறவங்களும் அப்படி நடிச்சிருப்பாங்க. செம க்யூட்டா.. அதுல எனக்கு ரொம்ப புடிச்சது த்ரீ ரோஸஸ் விளம்பரம். திவ்யா பரமேஸ்வரனோட அழகான புன்னகையில் விளம்பரம் ஜொலிக்கும்.. அந்த நெருக்கமும் அவ்ளோ அழகா இருக்கும். பேச நல்ல டைம்...

நீங்களும் பாருங்க..
இதே மாதிரி இன்னொரு க்யூட்டான விளம்பரம் மாதவன் -வித்யாபாலன் நடித்த ஏர்டெல் விளம்பரம்.Blogger Templates by Isnaini Dot Com. Powered by Blogger and Supported by ArchiThings.Com - Modern Architecture Design