Friday, February 26, 2010

விண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்



ஆரம்பமே அழகாய் கேரளாவின் நீர்நிலையில் வெள்ளை வண்ண எழுத்துக்கள். Young Super Star சிலம்பரசன் என்று ஆரம்பம். ஏ.ஆர்.ரஹ்மான் பேர் வரும் போது ஆராவாரமான கைத்தட்டல். படம் சர்ச்சில் ஆரம்பிக்கிறது. த்ரிஷாவின் கல்யாணம். மன்னிக்க ஜெஸ்ஸியின் கல்யாணம். சிம்பு.. அவ்வ்வ்.. கார்த்திக் இருக்கிறான். அவன் பார்வையில் படம்.

“உலகத்தில இத்தனை பொண்ணுங்க இருக்க நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்?”
இதே வசனம் நாலு முறை படத்தில் வருது. வேறு ஆட்கள். ஏன் ஜெஸ்ஸியே ஒரு முறை கேட்கிறாள். ப்ளாஷ்பேக்கில் படம் செல்ல ஜெஸ்ஸி வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் குடும்ப வாரிசு கார்த்திக். பார்த்தவுடனே பத்திக்கிச்சு ஜெஸ்ஸியின் மேல் காதல். எதிர்பாராமல் சட்டென காதலை சொல்ல ஜெஸ்ஸி முறைக்கிறாள். அவள் பாட்டியின் வீட்டுக்கு கேரளா செல்ல அங்கும் தொடரும் கார்த்திக். கஷ்டப்பட்டு அவளை கண்டுபிடிக்க அவனை தன்னை மறக்க சொல்ல நண்பர்களாய் இருக்கலாம் என்கிறான். இப்படியாக பல நிகழ்வுகள் ஒவ்வொரு முறையும் அவன் காதலை அவள் மறுக்க.. முக்கிய விஷயம் கார்த்திக்கை விட ஜெஸ்ஸி ஒரு வயது பெரியவள். கிறிஸ்தவ குடும்பத்தைத் சேர்ந்ததால் தன் தந்தை ஒரு ஹிந்துவிற்கு கல்யாணம் செய்து கொடுக்க மாட்டார் என்று மனம் குழம்பும் ஜெஸ்ஸி.. ஒரு பக்கம் கார்த்திக்கை பிடிச்சிருக்கு ஆனால் காதலில்லைன்னு.. குழம்ப.. படம் இப்படியே செல்ல.. ஒரு பிரச்சனையில் ஜெஸ்ஸியின் அண்ணனை கார்த்திக் அடிக்க அவசர அவசரமாய் ஜெஸ்ஸிக்கு கல்யாணம் நிச்சயிக்கிறார்கள். மனம் கேட்காமல் அவள் திருமணத்திற்கு கார்த்திக் செல்ல அங்கே… படத்தின் இடைவேளை…
அதன்பின் அழகாய் கோர்க்கப்பட்ட நிகழ்வுகள், சோகம், சில சந்தோஷம் என பொறுமையாய் படம் நகர்ந்து இறுதியில் என் பார்வையில் சிறப்பான முடிவு..

படத்தில் மிகப்பெரிய பலம் ஏ.ஆர்.ஆர். உறுத்தாத பாடல்கள் படத்தின் சரியான இடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பிண்ணனி இசை கேட்கத் தேவையில்லை. அவ்வளவு அழகாய் கையாளப்பட்டிருக்கிறது. அதிலேயும் காதலை மறுத்து ஜெஸ்ஸி செல்ல முகத்தில் சோகம் அப்பி கார்த்திக் இருக்க எதிர்பாராதவிதமாய் சோகவயலின் இல்லாமல் பேஸ்கிதாரில் வெஸ்டர்ன்.. பின்னிட்டாரு.. ப்ரண்டாஸ் இருக்கலாம்னு கார்த்திக் சொல்லும் இடத்தில் முஸ்தபா பி.ஜிஎம். சூப்பரோ சூப்பர்.

நடிப்பு: இதுவரை பார்த்திராத சிலம்பரசன். அடக்கி வாசித்திருக்கிறார். அவ்வளவு அழகாய் இருக்கிறார். காதலை சொல்லும் இடத்திலும் குறும்பு கொப்பளிக்கும் இடத்திலும் அட்டகாசம். நன்றாக வேலை வாங்கியிருக்கிறார் கௌதம் மேனன். பாத்திரமறிந்து நடித்திருக்கிறார் சிம்பு. சிம்புவை பார்க்காமல் கார்த்திகை பார்ப்பது மிகப் பெரிய ப்ளச். ஜெஸ்ஸியாய் த்ரிஷா.. இவ்வளவு அழகா த்ரிஷாவை பார்த்தில்லை. கண்களுக்கு நிறைவாய் பாந்தமாய் ஜொலிக்கிறார். அழகோ அழகு. நடிப்பிலும் குறையில்லாமல் பாத்திரமறிந்து நடித்திருக்கிறார். குறிப்பாய் சொல்ல வேண்டிய நபர், கணேஷ். இவர் படத்தின் தயாரிப்பாளராம். சீரியஸான முகத்தில் பேசினாலும் அவரின் டயலாக் டெலிவரி கிச்சுகிச்சு மூட்டுகிறது. காமெடிக்கான விஷயத்தை அவர் வரும் காட்சிகள் நிறைவு செய்கிறது. இரண்டு காட்சியில் வந்தாலும் கலக்கும் கே.எஸ்.ரவிக்குமார். 

கேமரா: மனோஜ் கையாண்டிருக்கிறார். கேரளா காட்சிகளும், மால்டா மற்றும் நியூயார்க் காட்சிகளும் அழகழகாய் படமாக்கியிருக்கிறார். உறுத்தாத வண்ணங்கள் காதலுக்கே உரிய நீலம் படம் முழுக்க அழகாய் பயன்படுத்தப்பட்டுள்ளது. சபாஷ். திரையில் சிம்புவும் த்ரிஷாவும் அவ்வளவு அழகாய் தெரிகிறார்கள். Made for each other மாதிரி.
அப்புறமாய் ஆர்ட்.. பாடல்கள். நிறைவாய் செய்திருக்கிறார்கள். படத்தின் ஒலிப்பதிவும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும். காதைப்பொத்திக் கொள்ளும்படி நாராசமாய் சத்தங்கள் இல்லாததற்கு.

எழுத்தும் இயக்கமும்: கௌதம் வாசுதேவ் மேனன். வாரணம் ஆயிரம் மாதிரி இப்படமும் வர்ணனையாக வருவது தான். ஆயினும் சிக்கல் இல்லாமல் பொறுமையாய் சம்பவங்கள் கையாளப்பட்டிருக்கிறது. காதல் பிறப்பதை சொல்வதிலும் அடுத்தடுத்த சிக்கலை சொல்வதிலும் அவசரமே இல்லாமல் பொறுமையாய் சொல்லும் திரைக்கதை. அதனால் சில இடங்களில் நம் பொறுமை சோதிப்பது போல் தோன்றினாலும் தோன்றலாம். ஆனால் ஆரம்பத்திலிருந்தே படத்தில் ஒன்றிவிட்டதால் எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. தேவைக்கேற்ப தான் விஷயங்கள் இருக்கிறது. ஒவ்வொரு பாத்திர குணாதிசயங்களும் விரிவடைய நம்முன்னே எல்லாம் நடப்பது போல் அழகாய் இருக்கிறது. கார்த்திக்கின் தீவிர காதலும் ஜெஸ்ஸியின் காதலுக்கும் பெற்றோருக்கும் இடையியேயான மனக்குழப்பமும் தெளிவாய் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. திரைக்கதையில் ஆங்காங்கே தன்னைத் தானே கேலி செய்திருப்பது அழகான உத்தி. குறிப்பாக, சிம்பு உதவி இயக்குநராய் சேர “கௌதம்” பேரை சொல்ல.. ‘இந்த மூணு மணிநேரத்தில இரண்டு மணி நேரம் இங்கிலீஷ்லேயே படம் இருக்குமேப்பா’, ‘அவர் ஒரு படமே ரெண்டு வருஷம் எடுப்பாரே..’.. கிச்சுகிச்சு. மேலும் அவரின் பழைய படமும் வசனத்தில் வருகிறது..”அவனவன் பொண்ணத் தேடி அமெரிக்காவுக்கே போறான். நான் கேரளாவுக்கு போக மாட்டேனா என்ன?”
நம்மை படத்தில் கட்டிப் போடும் இன்னொரு விஷயம் வசனம். சுருக்கமான அழகான வசனங்கள்…

முதலில் சொன்ன..
“எவ்வளவோ பொண்ணுங்க இருக்கும் போது நான் ஏன் ஜெஸ்ஸிய லவ் பண்ணினேன்?”

அப்புறம் கார்த்திக்-ஜெஸ்ஸி இடையேயான வசனம்..
“நீ அழகா இருக்கே. நிறைய பசங்க உன்னை சுத்தி வந்திருப்பாங்களே.. சுமாரான ஃபிகருங்களுக்கே தலைகீழா நிக்கறாங்க.. உன்னை..”
“ஒருவேளை அவங்க உன் கண்ணால என்னைப் பாக்கலியோ என்னவோ”… முடிஞ்சே போச்சு…. கௌதம் டச்… 

வழக்கமாய் நாயகன் பேசும் வசனம்..இங்கே ஜெஸ்ஸி வாயிலிருந்து..

“நீ எங்க போனாலும் உன்னைத் தேடி வருவேன்..”
இறுதியாய் உண்மைக்கும் சினிமாக்கும் உள்ள வித்தியாசம் சினிமாவிலேயே காண்பித்திருப்பது சிறப்பு. ஆனால் இது எத்தனை பேருக்குப் புரியும் என்று தெரியவில்லை.

முக்கியமான ஒரு விஷயம்.. உடைகள். த்ரிஷா தேவதை மாதிரி தெரிகிறார். ஆர்ப்பாட்டமில்லாத உடையமைப்புகள். குறிப்பாய் கார்த்திக் முதலில் பார்க்கும் போது வரும் நீல நிற புடவையாகட்டும், கேரளாவில் பட்டுடையில் இரவில் கார்த்திக்குடன் பேசும் போதாகட்டும்… அமெரிக்காவில் கல்யாணக் காட்சியில் வரும் பட்டுப்புடவையாகட்டும். உண்மையிலேயே விண்ணிலிருந்து வந்திறங்கிய தேவதை மாதிரி… அவ்ளோ அழகு.

இறுதியாக… ஆரம்பம் முதலே படத்தில் மூழ்கிவிட்டேன். இறுதிவரை அவ்வளவு ரசிச்சுப் பார்த்தேன். விண்ணைத் தேடி ஒரு தேவதை இந்த மதிக்காக கண்டிப்பாய் வருவாள் என்ற நம்பிக்கை உள்ளது… 

என்னவள்… விண்ணைத் தேடி வருவாளா??

உருகும்…!!
மதி

Thursday, February 25, 2010

பிறந்தநாள் வாழ்த்துகள் சகோதரா...!!!

இதோ... இன்னும் சற்று நேரத்துல 12 மணியாகப் போகுது. என் இனிய சகோதரன் பாலக்குமாரின் பிறந்தநாள்.. ம்ம்.. 26 வயதாகப்போகுது. இப்போவே சொல்லிக்கறேன்..

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சகோதரனே...!!!!

நானும் பாலாவும்... எங்க உறவை எப்படி சொல்றதுன்னே தெரியல. இரு வருடம் தான் வித்தியாசம் என்றாலும் சின்ன வயசிலிருந்தே அந்த அளவுக்கு சேர்ந்து விளையாடியதில்லை. இன்னமும் பசுமையாய் நினைவிருக்கும் சம்பவம். அப்போ நிறைய போட்டி பொறாமை. அப்படி ஒருமுறை திருவாரூரில் குடியிருந்த சமயம் சின்னதாய் சண்டையிட்டு படுத்திருந்த என்மேல் ஏறிவிட்டான். சண்டைப்போட்டுக் கொண்டே அவனைத் தள்ளிவிட சரியாய் கதவின் விளிம்பில் அவன் தலை மோதி ரத்தம் கொட்ட.. வீட்டில் ஒரே அமளி. அவசர அவசரமாய் டாக்டர் வீட்டுக்கு கொண்டு செல்ல எனக்கு அழுகை அழுகையாய் வந்தது. அதற்கப்புறம் நினைவில் இருக்கும் படி சொல்லிக்கொள்ள பெரிதாய் எந்த சம்பவமும் நினைவில் இல்லை. நான் என் நண்பர் பட்டாளங்களுடன் சுற்றுவேன். அவன் தன் நண்பர்களுடன்.

கல்லூரியில் சேர்ந்த பிறகு தான் எங்கள் உறவு பலப்பட ஆரம்பித்தது. முதலில் அவனுக்கு மொபைல் வாங்கித் தந்ததிலிருந்து. அப்போது முதல் முறையாக பெங்களூருக்கு வந்திருந்தான். நான் வேலைக்குச் சேர்ந்து கொஞ்ச நாள் ஆகியிருந்தது. தம்பி வருகிறான் என்றதும் தலைகால் புரியவில்லை. அண்ணனா நல்ல புள்ளையா மொபைல் அதுவும் கலர் டிஸ்ப்ளே வைத்தது, வாங்கித் தந்தேன். அப்போது ஆரம்பித்தது எங்கள் நட்பு..ஹிஹி. பல காரியங்களை என் மூலம் சாதிக்க ஆரம்பித்தான். படிக்கும் போதே யுனிகார்ன் வாங்கியதிலிருந்து வேலைக்கு சேர்ந்தபிறகும் லேப்டாப் வாங்கியது வரை. அவ்ளோ நல்ல அண்ணனா என்னைக் காட்டிக் கொள்ள வைத்தான். பிறகு ரெண்டு பேரும் சேர்ந்து கூத்தடிக்க ஆரம்பித்தோம். எனக்குத் தேவையானதை அவனும் அவனுக்குத் தேவையானதை நானும் வாங்கித் தர ஆரம்பித்தோம்.



என் பணத்தில எனக்காக விலையுயர்ந்த பொருள் வாங்கினா என்ன சுயநலக்காரன்னு ஊர் திட்டும். அதே பொருளை தம்பிக்கு வாங்கித் தந்தா என்ன ஒரு ஒற்றுமையான அண்ணன் தம்பின்னு பாராட்டும்.

எவ்ளோ சிம்பிள் லாஜிக்.. நீங்களும் கடைபிடிச்சுப் பாருங்க.
 மறுபடியும்...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் பாலக்குமாரா...!!!

Wednesday, February 24, 2010

மதிய உலா


முன்குறிப்பு: நான் செம மொக்கையான ஆளுங்க. (தீராத விளையாட்டுப் பிள்ளையில் புரட்சித் தளபதி சொல்ற மாதிரி கற்பனை பண்ணிக்கோங்க..ஹிஹி) அப்படி தான் நிறைய பேருக்குத் தெரியும். கதையாவும் கட்டுரையாவும் இல்லாமல் ஒருவிதமான நடையில் செய்த முதல் முயற்சி. எதிர்பாராமல் இதில் உள்ள கரு பல விவாதங்களுக்கு வழிவிட்டது. மிகப்பெரிய சந்தோஷமே வயதுவித்தியாசமில்லாமல் பல விமர்சனங்களை தந்தது. (நல்லாருக்கு.. என்ன கண்றாவிடா..இது..) இப்படி பல. முக்கியமான விஷயம்... இதைப்படித்து பலர் என் வயது 45க்கும் மேல் என்று நினைத்தது தான்.. :(. மேலும் என்னுடன் வேலைப்பார்க்கும் நண்பனின் தாய் இதைப்படித்து எனக்கு போன் செய்து..இந்தகால பசங்கல்லாம் வெட்டியா ஊர் சுத்தறவங்கன்னு நினைச்சிட்டு இருந்தேன்.. ஆனா நீ இப்படியெல்லாம் கூட எழுதுவியானு பாராட்டிட்டாங்க.. இன்னமும் அவங்கள பாதிச்ச விஷயம் என்னன்னு தேடிக்கிட்டு இருக்கேன். எனக்குத் தெரியல.. உங்களுக்காவது தெரியுதான்னு சொல்லுங்க...

ஏனோ சுரீரென்று கோபம் தலைக்கேறியது. ஞாயிற்றுக்கிழமை காலை உணவருந்தி உடல்நிலை சற்று சரியில்லாதது போல தோன்றியதால்(?!) விஜய் டி.வியில் தமிழாக்கப்பட்ட ஆங்கிலப்படம் பார்த்துக் கொண்டே தூங்கியவன் மேல் திடீரென்று ஏதோ சுமை உடல் மீது இறங்குவதாய் தோன்றியது. தலை பாரமாய் இருந்த போது கண்ணை பாதி விழித்துப் பார்க்கையில் நண்பன் ஒரு மார்க்கமாய் என்மீது சாய்ந்து உட்கார்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தான். உடலுக்குள் ஏதேதோ மாற்றங்கள். எங்கே வலிக்கிறது என்றே தெரியவில்லை. அவன் உட்கார்ந்த போது முதுகில் ஏதோ கடமுடவென்று சத்தம். அடிவயிற்றில் கடுமையான வலி. ‘என்னாயிற்று எனக்கு? மறுபடியும் ஏதேனும் பிரச்சனையா? உடம்பு தான் சரியில்லை என்று தெரியுமே, அப்புறம் ஏன் இப்படி மடார்னு உட்கார்ந்தான். கொஞ்சம் கூட விவஸ்தையே கிடையாதா?’

மறுபடி தூங்க முயற்சி. முடியவில்லை. எழுந்து போய் மடமடவென்று தண்ணீர் குடித்ததும் சற்று வயிற்றுவலி குறைந்தாற்போல் தோன்றிற்று. உடலில் ஏதேதோ உணர்வுகள். வலிக்கிறதா? இல்லை எங்கோ ஏதோ குடைவது போலுள்ளதே.. என்ன தான் ஆயிற்று எனக்கு? இன்னும் நண்பன் மேல் கோவம் தீரவில்லை. அறைக்குள் சென்று படுக்க முயற்சிக்கையில்.. ம்ஹும். வலியுடன் சேர்ந்து கோவமும் தலைக்கேறியிருந்ததால் தூக்கம் சுத்தமாக வரவில்லை.

வேகவேகமாக எழுந்து முகம் கழுவி பேண்ட் போட்டு கிளம்பியாயிற்று. எல்லோரும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தது தெரிந்தும் யாரிடமும் பேசவில்லை. மொபைல் போன் கூட எடுத்துக் கொள்ளவில்லை. பர்ஸை மட்டும் எடுத்து செருப்பை மாட்டி கொண்டி வெளிநடப்பு செய்தாகியது. ‘எங்கே போவது? தெரியவில்லை. எங்கேயாவது போகணும். வீட்டுக்கு வெளியில் வந்தால் வெயில் சுரீரென்று உறைந்தது. இதில் இந்த வெயிலில் போய் தான் ஆக வேண்டுமா? எவ்வளவு தூரம் தான் நடப்பது?’

‘எங்கேயாவது போகணும், நடந்து போகணும், இங்கிருந்து போகணும்.அவ்வளவு தான்’ மனம் பலவாறு அசைபோட ஊற்றாய் கோபம் கொப்பளிக்க கால் பயணப்பட ஆரம்பித்தாயிற்று. மெதுவாக, மிக மெதுவாக. அப்படி ஒன்றும் எங்கேயும் போய் வெட்டி முறிக்கிற காரியம் ஏதுமில்லை. தளர்ந்த நடையுடன் மாருதிநகர் மெயின் ரோட்டில் நடைபயணம் ஆரம்பமாகியது. மணி மதியம் இரண்டரை. வழியில் ஜூஸ் கடை. ‘குடிப்போமா? மதியம் தான் இன்னும் சாப்பிடலையே! சரி. ஜூஸ் குடிக்கவாவது பணம் இருக்கிறதா?’ துலாவிப்பார்த்ததில் சட்டைப்பையில் நாற்பது ரூபாய் இருந்தது. பர்ஸில் சுத்தமாய் பணமில்லை. கடையில் நுழைகையில் மனம் கதறியது ‘அவசியமாய் இப்போது குடித்து தான் ஆகணுமா?’. மனம் மாறியது. ‘பணம் இல்லை. போய் ஏ.டி.எம் மில் பணம் எடுத்து வந்தால் என்ன?’ நல்ல யோசனை. அதே வழியில் நடக்க ஆரம்பித்தாயிற்று. ‘முதலில் ஏ.டி.எம் போய் பணமெடுத்து வந்து பெட்ரோல் பங்க் எதிரில் இருக்கும் பூங்காவில் போய் உட்கார்ந்திருக்கலாம்’.

அங்கிருந்த முக்கிய சர்க்கிள் தாண்டி வலப்பக்கம் திரும்பி நடக்க ‘அட, மனுசன் திரும்புவதற்குள் ஏன் தான் வண்டியை இடிக்கற மாதிரி ஓட்டுறாங்களோ?’ உரசினாற் போல் சென்ற மெட்டடார் வேனை திட்டியது மனது. அதற்குள்.. அட இது என்ன, இப்போ தான் குளித்து முடித்து பளிச்சென்று புன்னகையுடன் வருகிற பெண். மொபைலில் யாருடனோ சிரித்து பேசிக்கொண்டே என்னைக் கடந்தாள். ‘ஆஹா. என்ன பர்ப்ஃயூம் யூஸ் பண்ணுகிறாள். ரொம்ப நல்லாருக்கே’. தெரு முனைதாண்டி இடது பக்கம் திரும்பி நடை தொடர்ந்தது. ‘இது என்ன வீட்டின் முன் நின்று கும்மாளம் அடிக்கின்றனர். ஏதோ விசேஷமாயிருக்கும்’. வாசலில் தோரணம் கட்டியிருத்த வீட்டினை கடந்து பூங்கா பக்கம் கால்கள் திரும்பியது. ‘உள்ளே போய் உட்காராமல் இவன் ஏன் வெளியே உட்கார்ந்திருக்கிறான். இவனுக்கு என்ன சோகமோ?’. காதலில் தோல்வியுற்றவனாய் தெரியவில்லை. ‘ஒருவேளை என்னை மாதிரி காதலியே கிடைக்காதவனோ.. அப்போ இத்தனை சோகம் இருப்பதில் தப்பில்லை’. பூங்கா வாசலில் நாலு பெரியவர்கள் உட்கார்ந்திருந்தனர். வாசல் பூட்டியிருந்தது. கன்னடம் படிக்கத் தெரியாது. ஆனாலும் அங்கிருந்த தட்டியில் எழுதியிருந்ததை பார்க்கையில் நாலு மணிக்கு தான் திறக்கப்படும் என்று புரிந்தது. ‘சரி. போய் பணமாவது எடுத்து வரலாம்.’

எப்பவுமே பரபரப்பாக இருக்கும் சிக்னலையும் கடந்தாயிற்று. ‘ஆமாம் ஞாயிற்றுக்கிழமை அதுவும், மக்கள் கூட்டம் கூட்டமாய் எங்கே தான் போகிறார்கள்.’ ஆங்காங்கே தென்பட்ட ஜீன்ஸ் அணிந்த மகளிர் கூட்டத்தை பார்த்து மனம் அசைபோட்டது. ரெஸ்டாரண்ட் தாண்டியதும் ‘அட வழக்கம் போல் கொய்யா வியாபாரி இருக்கிறானே’. வயிறும் சற்று பசியால் துடிக்க ஆரம்பித்திருந்தது. அவனிடம் சென்று ஒரு கொய்யா (அநியாய விலை) வாங்கி நடக்க ஆரம்பிதாகிவிட்டது. ‘அடுத்து எங்கு செல்வது? நேராக ஏ.டி.எம் போகலாமா? இல்லை. வேறு எங்கேனும்’ வெட்டிய கொய்யா துண்டினை சுவைத்தபடி மறுபடி சிந்தனை. ‘எங்கியாவது போகலாம்’. வலப்புறம் திரும்பாமல் நேராக கால் நடந்தது.

எதிரில் ஒரு ஜோடி. நன்றாக இருந்தனர்.. உச்சி வெயில் மண்டையை பிளப்பதைக் கூட கவனியாமல்..சரி..சரி.. ‘இதென்ன இவர்கள் நண்பர்களா.. காதலர்களா.. இல்லை தம்பதியா?’. பையன் நல்ல உயரம். கருப்பாய் இருந்தான். பெண் மாநிறமாயிருந்தாலும் ஏக லட்சணமாய் இருந்தாள். அவனுடன் பேசுகையில் கண்ணில் வெட்கம் முகத்தில் ததும்பி வழிந்தது. ‘காதலுக்கும் கலருக்கும் சம்பந்தமே இல்லை தான். அப்போ எனக்கு மட்டும் என்ன பிரச்சினை’ பேசிக்கொண்டே அவர்கள் கடக்கையில் தமிழர் என்று புரிந்தது. ‘இந்நேரம் எங்கே போகிறார்கள். சாப்பிட இருக்கலாம்’. மற்றுமொரு கொய்யா துண்டை வாய்க்கு கை கொண்டு போனது. ‘இதென்ன கொய்யா பழமாவும் இல்லாமல் காயாகவும் இல்லாமல்’. சுற்றி நடக்கும் மக்கள் வேகமாக மிக வேகமாய் இயங்குவதாய் தோன்றிற்று. ‘எனக்கென்ன வேலை. கோபப்பட்டு வீட்டை விட்டு வந்தவன் தானே’ பொறுமையாய் கொய்யாவின் ஒவ்வொரு விதையாய் நாவில் துழாவி பற்களுக்கிடையில் கொடுத்து கடிப்பதில் சுகமாய் இருந்தது. கால்கள் நடந்தாலும் கண்கள் பாதையைப் பார்த்தாலும் மனம் கொய்யாவின் விதைகளில் இருந்தது. ‘அட.. கொய்யாவின் விதை இப்படியா சுவைக்கும். இதுவரை தனியே பிரித்து கடித்ததில்லையே.’ பொறுமையாக அந்தத் துண்டு கொய்யாவை முடித்திருக்கையில் நின்றிருந்த ஒரு பேருந்து அருகே வந்திருந்தேன்.

பக்கத்தில் ஒரு மைதானம். கூட்டமாய் விளையாடிக் கொண்டிருந்தனர். பேருந்தினுள் பார்த்தேன். அது தான் கிளம்பும் இடம் போலும். கிளம்பும் நேரமாகாததால் யாருமில்லை. நடத்துனர் மட்டும் தனியே உட்கார்ந்திருந்தார். பலத்த சிந்தனை போலும். சரி. திரும்பலாம் என்று எண்ணிய மனம் கால்களுக்கு கட்டளையிட்டது. சோர்வைடைய ஆரம்பித்திருந்த கால் திரும்ப எத்தனிக்க கண்கள் வழி நோக்கி அருகில் வாகனம் வந்து கொண்டிருப்பதை தெரிவிக்க கால்களை துரிதப்படுத்த மூளை கட்டளையிட சாலையை கடந்தாயிற்று. ‘வந்த வழி வேண்டாம். வேறு வழி போகலாம்.’ அடுத்த தெருவின் வழியாக பயணம். இதற்குள் கொய்யா முழுவதுமாய் முடிந்திருந்தது. இடப்பக்கத்தில் குப்பைக்கூளம் குவிந்திருந்தது. துர்நாற்றம். பக்கதிலேயே பத்தடி தூரத்தில் குடிசைகள். ‘இதிலேயும் மக்கள் வாழ்கிறார்களே. எனக்கு நிற்கவே முடியவில்லை. வயிற்றை புரட்டுகிறது. அட ஆமாம். வயிறு வலித்ததே. என்னாயிற்று?’. வயிற்று வலி சுத்தமாய் நின்றிருந்தது. ‘ஆமாம். முதுகும் இடுப்பும் வலிப்பது போலிருந்ததே’. கெண்டைக்காலில் நரம்பு இழுத்தது. காலில் குடைச்சலாய் இருந்தது. ‘ஓ..சரி. நமக்கு ஏதோ பிரச்சனை இருக்கிறது. மேலும் போவோம்.’

சின்ன தெரு அது. தெருவையே அடைத்து கார்கள் நின்றிருந்தது. ‘என்னமாய் வீடு கட்டுகிறார்கள். அழகழகாய், விதவிதமான வண்ணங்களில், வடிவமைப்பில். நாமும் கார் வாங்கணும். இப்போதைக்கு முடியுமா? இல்லை. வாங்கினால் சோற்றுக்கு லாட்டரி தான்.’

கால்கள் உடலைத் தாங்கி மெயின் ரோட்டை அடைந்திருந்தது. எதிரில் தனியார் வங்கி. அதனருகில் இளநீர் கடை. ‘அங்கே பார். ஒரு பெண் இளநீர் கொண்டு ரோட்டைக் கடக்கிறாள். கல்யாணமாயிற்று போலும். எவ்வளவு அழகாய் உயரமாய் லட்சணமாய் இருக்கிறாள். அவள் கட்டிருக்கும் புடவை பாந்தமாய் இருக்கிறதே’. மனமும் உடலும் அவளைக் கடந்தது. ‘எல்லாக் கடைகளிலும் இப்படி தானா? ஒரே கூட்டமாய் இருக்கிறது. அதிலும் எக்கச்சக்கமாய் பெண்கள். ஒன்று மட்டும் நிச்சயமாய் தெரிகிறது. பெண்கள் இருவராய் எங்கேயும் போவதில்லை. ஒன்று ஆண் துணையுடன் போகின்றனர். இல்லை மூன்று பெண்களாய் போகின்றனர்.’ மனம் வேகமாய் முடிவுக்கு வந்தது.

கடைகள் தாண்டி பழைய வீடு ஒன்று வந்தது. புதுப்பித்துக் கொண்டிருந்தனர். ‘ஞாயிற்றுக்கிழமை கூடவா வேலை செய்யணும். இவங்க இவ்ளோ கஷ்டப்படுறாங்க. நாம சொகுசா பிடிச்சா தான் வேலை செய்வோம். வருமானம் சரியில்ல. அது இதுன்னு சொல்லியே காலத்த ஓட்டுறோமே?’

வந்தாயிற்று ஏடிஎம். முன்னே இரண்டு பெண்கள். உள்ளே ஒருவன் பணம் எடுத்துக் கொண்டிருந்தான். பெண்கள் இருவரும் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தனர். ஆண் வெளியே வர ஒரு பெண் உள்ளே சென்றாள். சற்று பருமனானாலும் ஸ்கர்ட் அணிந்திருந்தாள். பார்வையை திருப்பி ரோட்டில் வாகனங்களை பார்த்திருந்தேன். ‘நேரமாயிற்று இந்த பெண் வந்த மாதிரி தெரியவில்லையே.’ பார்வையை உள் நோக்க ஏடிஎம் ஸ்லிப் எடுத்து கிழித்து கீழே போட்டாள். பார்வை கீழே சென்றது. ‘இதென்ன இந்த பெண் கால்கள் இவ்வளவு வெள்ளை நிறமாய்.. அங்கே பார் அவள் தோலினூடே செல்லும் பச்சை நரம்பு கூட தெரிகிறதே. அடேய்..இப்படி பார்ப்பது தப்புடா’. மனக்குரங்கு நல்லபிள்ளையாய் கட்டளையிட சட்டென்று பார்வை வேறுபக்கம் திரும்பியது.

அவள் வெளியே வந்து நான் உள் சென்று சென்று பணம் எடுத்தாயிற்று. ‘அடுத்து என்ன பண்ணலாம். வீட்டை விட்டு வந்து முக்கால் மணிநேரத்திற்கும் மேலிருக்கும். வீட்டிற்கு போகலாமா? இல்லை பார்க்கில் போய் உட்காரலாமா?’

‘தேடிகிட்டு இருக்க போறாங்க. ஒன்னும் சொல்லாம வந்துட்டோம். வீட்டுக்குப் போகலாம்’. வழியில் அந்த இளநீர் கடையில் நின்று தண்ணியாய் வாங்கி இளநீரை குடித்தேன். அவ்வளவாய் சுவைக்கவில்லை. ‘வீட்டுக்குப் போகலாம். சீக்கிரம் போகணும். தேடிக்கிட்டு இருக்கப் போறாங்க. சாப்பாடு வேற ஆர்டர் பண்ணியிருந்தாங்க.’

கால்கள் துரிதகதியில் நடந்தது. மனம் கால்கள் மேலே இருந்தது. பத்தே நிமிடங்கள். இதோ வீட்டுக்கு மிக அருகில். மனம் அமைதியாய் எந்தவித சலனமுமில்லாமல். எப்படி? சற்றே தெளிவானது போல் தோன்றியது. ‘சீக்கிரம் போகணும். காத்துட்டு இருக்கப்போறாங்க. ஆமாம். நடக்க ஆரம்பித்து ஒரு மணிநேரத்துக்கு மேலிருக்கும். ஆனாலும் முதுகிலோ இடுப்பிலோ இப்போ வலியில்லையே. ஆனா அந்த டாக்டர் ரொம்ப நேரம் நடக்கக்கூடாது. நடந்தா பிரச்சனை அப்படி இப்படின்னு சொன்னார். நாமளும் இவ்ளோ நாளா நடக்காம இருந்துட்டோம். கால்ல கூட வலியில்லையே. இந்த டாக்டருங்களே இப்படித் தான். சரியாவே ஒன்னும் சொல்ல மாட்டேங்கறாங்க. காச மட்டும் வாங்கிக்கறாங்க ’

அபார்ட்மெண்ட் படிகளில் ஏறும் போது அதிக தூரம் நடக்கவே கூடாது என்று சொன்ன டாக்டர் மேல் கோபம் கோபமாய் வந்தது.

Monday, February 22, 2010

வணக்கம்

அன்புடையீர்....

என்னடா.. திடீர்னு ப்ளாக் பக்கம் வந்துட்டானேன்னு பாக்காதீங்க. ரொம்ப நாளா மனத்தினுள் வெறுமை. ஏன்னே புரியாத குழப்பம். எதற்குன்னு தெரியாத தயக்கம். ஒன்னு மட்டும் தெளிவா புரிஞ்சது. ஏதோ பித்துப் பிடித்தாற் போல் ஆகிவிட்டேனென்று. சர்தான்.. இதுவும் கடந்து போகட்டும்னு ஆரம்பிச்சது தான் இந்த ப்ளாக். இவண் மதி.

இதற்கென்று தனியான பெயர்க் காரணம்னு ஏதுமில்லை. எப்பவும் போல மனசுல சட்டென தோணின பேர் இது. எனது வழக்கமான பேரான "மொக்கை மதி"யிலிருந்து வேறுபட்டு இருக்கட்டுமேனு வச்சாச்சு. இதுல என்ன எழுதப் போறேன்.. வழக்கம் போல மொக்கையான கதையா, கவிதையா... என்னன்னு இன்னும் ஏதும் தெரியாது.. போற போக்கில மனசுல தோணினதெல்லாம் எழுதலாம்னு இருக்கேன். வழக்கம் போல எல்லோரும் படிப்பாங்கன்னு ஒரு சின்ன நம்பிக்கை தான்... தோ..பாருங்க... எங்க போனாலும் இந்த மொக்கைத் தனம் போக மாட்டேங்குது.. புரியுது.. புரியுது.. கட்டுப்படுத்திக்கறேன்..

சரி.. அப்பால சந்திப்போம்... வர்ட்டா...!!! :):):)


Blogger Templates by Isnaini Dot Com. Powered by Blogger and Supported by ArchiThings.Com - Modern Architecture Design