Friday, May 21, 2010

உன்னை தற்கொலை செய்யவா ??!! - பகுதி 5

பெங்களூர்..


தன்னிடம் வாசிக்கப்பட்ட லிஸ்டில் அந்த மொபைல் போன் இல்லாததைப் பார்த்து வியர்த்தான் வைபவ். கன்னடத்தில் அந்த லேப்பில் இருந்த நபரிடம்,

“நல்லா பாருங்க.. இன்னிக்கு அந்த தற்கொலை நடந்த இடத்திலேர்ந்து ஒரு மொபைல் போன் கொண்டு வந்திருப்பாங்க..”

“இல்ல.. சார். நல்லா பாத்துட்டேன். எல்லா பொருளையும் இங்க எண்ட்ரி போட்டு தான் வாங்குவோம். மிஸ் ஆயிருக்க சான்ஸே இல்ல..”

குழம்பிய வைபவ் யூனிபார்மை எடுத்து மாட்டிக் கொண்டு அம்மா சொன்னதைக் கூட காதில் வாங்காமல் தன் ப்ரத்யேக ஹீரோ ஹோண்டாவில் கிளம்பினான். ‘எப்படி மிஸ் ஆயிருக்கும். நான் ஸ்பாட்டுக்கு போன போது கூட பக்கத்தில கிடந்ததே. ஒரு வேளை அவங்க எடுக்கவே இல்லியா..’ அவுட்டர் ரிங் ரோட்டில அந்த ராத்திரி வேளையில் பயணித்துக் கொண்டிருக்கும் போதே ரொம்பவும் குழம்பி வண்டியை ஓரமாய் நிறுத்தினான்.

மொபைல் போனை எடுத்து ஸ்டேஷனுக்கு கால் பண்ணினான். மூன்றாவது ரிங்கில் கான்ஸ்டபிள் போனை எடுத்தார்.

“நான் இன்ஸ்பெக்டர் பேசறேன். இன்னிக்கு காலைல அந்த தற்கொலை கேஸ் நடந்த எடத்துக்கு போனோமே.. பாரன்ஸிக் லேப்லேர்ந்து யார் வந்தா?”

“சார்.. வணக்கம் சார். எப்பவும் வழக்கமா வர்ற முனிரெட்டி தான் வந்தான். ஏன் சார்? ஏதாச்சும் பிரச்சனையா? இந்த நேரத்துல அவன பத்தி கேக்கறீங்க?”

“அதெல்லாம் ஒன்னுமில்ல. காலைல அங்கிருந்து என்னெல்லாம் எடுத்துட்டு வந்தான்னு கேக்கணும். ஒரு மொபைல் போன் எங்க போச்சுன்னு தெரியல”

“ஓ.. அவன நம்பர் வேணா தரட்டுமா சார். இந்நேரம் நல்லா மப்பு போட்டுட்டு இருப்பான்னு நெனைக்கிறேன்..”

“குடு..குடு”

கான்ஸ்டபிள் நம்பர் தர அங்கிருந்த மொபைலில் டைப் செய்தான். லோடு ஏற்றிய லாரி ஒன்று விர்ரென்று அவனை கடந்து சென்றது. அடுத்து முனிரெட்டிக்கு டயல் செய்தான்.

ரிங் போய் போன் எடுக்கப்பட்டு சொன்ன ‘ஹலோ’விலேயே அவன் தள்ளாட்டம் தெரிந்தது.

“முனிரெட்டி. நான் இன்ஸ்பெக்டர் வைபவ் பேசறேன். எங்க இருக்க..?”

“வணக்கம் சார். இங்க சும்மா சகாக்களோட…மடிவாலால இருக்கற பார்ல.. ஹி.. என்ன மேட்டர் சார்?”

“காலைல நீ தானே அந்த அபார்ட்மெண்டுக்கு வந்து பொருளெல்லாம் கொண்டுட்டு போன.. அதுல ஒன்னு மிஸ்ஸாவுது”

“என்னாது…. மிஸ்ஸாவுதா..?” ஏற்றியிருந்த போதை பாதிக்கும் மேல் இறங்கியது.

“ஆமா… அந்த மொபைல் போன காணல. உனக்கு தான் தெரிஞ்சிருக்கணும்..”

“மொபைல் போனா… நல்லா ஞாபகம் இருக்கு சார். அந்த பொண்ணு பக்கத்துல சுக்குநூறா கெடந்துதே. நான் தான் சார் எல்லா பார்ட்டையும் ஒன்னு விடாம எடுத்தாந்தேன்.”

“எடுத்த எல்லாத்தையும் கணக்கு பண்ணி கரெக்டா லேப்ல கொடுத்த தானே..?”

“லேப் வரைக்கும் வந்தேன் சார். திடீர்னு போன் வந்துச்சு. அதான் பேசிக்கிட்டிருந்ததால வெளிய வந்த லேப் இன்சார்ஜ் கிட்ட கொடுத்தேன். அவர் தான் எண்ட்ரி போட்டிருப்பார்..”

சுத்தமாய் குழம்பியது வைபவ்விற்கு. ‘எங்க தான் தொலஞ்சு போயிருக்கும். இல்ல யார் தான் எடுத்திருப்பாங்க..’ அந்த இரவிலும் வியர்த்தது. அடுத்து எங்கிருந்து ஆரம்பிப்பது?

“சரி.. ரெட்டி. நீங்க திரும்பி போன வழியில ஏதாச்சும் நடந்துச்சா? “

“அப்படி எல்லாம் ஒன்னும் நடக்கலியே…” யோசித்தவன். “ஆமா சார். திரும்புற வழியில போலீஸ் நின்னு எல்லா வண்டியும் செக் பண்ணிட்டு இருந்தாங்க. ஏதோ குண்டு வெடிக்கப் போகுதுன்னு புரளி வந்துச்சாம். நம்ம வண்டிய கூட திறந்து பாத்தாங்க. லேப் வண்டின்னதும் விட்டுட்டாங்க. ஏன் சார்.. ஏதாச்சும் பெரிய ப்ரச்சனையா?”

“தெரியல… அதான் விசாரிக்கணும். சரி நீ உன் கச்சேரிய நடத்து. நாளைக்கு ஸ்டேஷன் பக்கமா வந்துட்டு போ”

அடுத்த பக்கம் சரின்னதும் போனை வைத்தான். கொஞ்சம் தெளியற மாதிரி தெரிந்தது. ‘எடுத்தா வண்டிய செக் பண்ணும் போது எடுத்திருக்கணும்.’

கண்ட்ரோல் ரூமுக்கு போன் பண்ணினான்.

“ஹலோ கண்ட்ரோல் ரூம்.”

“நான் பெங்களூர் தெற்கு இன்ஸ்பெக்டர் வைபவ் பேசறேன். இன்னிக்கு ஏதாச்சும் பாம் ஸ்கேர் போன் வந்துச்சா?”

“ஒரு நிமிஷம்…. அப்படியெல்லாம் ஒன்னுமில்லையே சார். எவ்ரிதிங் ஓக்கே”

“ஓக்கே.. தாங்க்ஸ்.”

அவன் போனை வைக்கும் போது மணி பதினொன்னரையைத் தாண்டியிருந்தது. வண்டி சாவியைப் போட்டு கிக்கரை உதைக்கவும் எதிர் திசையில் போய்க்கிட்டு இருந்த அந்த மாருதி வேன் யூ டர்ன் போட்டு அவனருகில் நிற்கவும் சரியாயிருந்தது.

அப்போது

ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்தில் இரவு மணி பத்தைத் தாண்டியிருந்தது. ஊரே அமைதியாயிருந்தது. பனிப் பொழிவு ஆரம்பிக்க இன்னும் கொஞ்ச காலம் தான் இருந்தது. செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் பழம்பெரும் நகரம். ரஷ்யாவின் மேற்கே பால்டிக் கடலை ஒட்டி அமைந்திருந்தது. நேவா நதி ஊரின் ஊடாக ஓடி பால்டிக் கடலில் கலந்தது. அதனாலேயே அந்த ஊருக்கு மேற்கத்திய வெனிஸ் என்றொரு பேரும் உண்டு. இரவு நேரத்தில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட டிரினிட்டி பாலத்தில் நின்று ஆற்றோட்டத்தைப் பார்ப்பதற்கு கண்கோடி வேண்டும்.

எப்போதும் சல சலவென ஓடும் நேவா நதி அன்று ஏனோ அமைதி காத்தது. விளக்கு வெளிச்சங்களில் பளபளவென்று மின்னிக் கொண்டிருந்த வேளையில் ஆற்றின் ஓரத்தில் கட்டப்பட்டிருந்த சர்ச் அருகில் அமைதிகாத்த அந்த கட்டிடத்தின் இரண்டாம் மாடியில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. ரஷ்ய முறைப்படி கட்டப்பட்டிருந்த அந்த கட்டிடத்தில் அரசாங்க அலுவலகங்கள் இருந்தன. அந்த நேரத்தில் எல்லா அலுவலகங்களும் மூடப்பட்டிருக்க அந்த ஒரு அலுவலகம் மட்டும் இயங்கிக் கொண்டிருந்தது.

ஒன்றிரண்டு பேர் சுறுசுறுப்பாய் இயங்கி கொண்டிருக்க அந்த அலுவலகம் “விளையாட்டுத் துறை அலுவலகம்” என பெயர்ப் பலகையைத் தாங்கியிருந்தது. கொஞ்சம் தள்ளிப் போனால் தலைமை அதிகாரி என ரஷ்ய மொழியில் எழுதியிருந்தது. இன்னும் பூட்டப்பட்டிருக்க வில்லை.

உள்ளே பெரிய மேஜை. எதிரில் இருந்த பெரிய ரஷ்ய ஜன்னல் வழியாக நேவா நதி மின்னிக் கொண்டிருந்தது. மேஜையில் முன்னிருந்த நாற்காலியில் அமர்ந்து இருந்த அவர் ஆழ்ந்த சிந்தனையிலிருந்தார். ஐந்தடிக்கும் கொஞ்சம் அதிகமான உயரம். துடுக்கான தோற்றம். ரஷ்யக் களை முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது. சிந்தனைக் கோடுகள் முகத்தில் வரிகளாய் தெரிந்தது. தீர்க்கமான அந்தப் பார்வை ஆற்றின் மேலேயே நிலைக் குத்தி நின்றது. ஏறக்குறைய ஒரு மணி நேரமாய் அவர் அப்படி தான் அமர்ந்திருக்கிறார்.

அவர் இருந்த அறை பழங்கால அறை. ஒருபக்க முழுக்க புத்தங்களாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. பாதிக்கும் மேல் ரஷ்ய மொழிப் புத்தகங்கள். சுவரில் ஃப்ரேம் செய்து மாட்டப்பட்ட லெனின் புகைப்படம்.

உட்கார்ந்திருந்த அவர் தலையைத் திருப்பி லெனின் படத்தைப் பார்த்தார். ஒரு பெருமூச்சு விட்டு மறுபடியும் நதியைப் பார்க்கலானார். யாரையோ எதிர்பார்த்து காத்திருப்பது தெரிந்தது. அப்போது வரப்போகிறவர் மிக முக்கியமான நபராய் தான் இருக்க வேண்டும். உட்கார்ந்திருந்த நபர் ரஷ்யாவின் மிகப்பெரிய பதவியில் இருப்பவர். அவர் ரஷ்யாவின் வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்பான “Foreign Intelligence Service” தலைவர் மிகைல் ப்ராட்கோவ். திடமான மனதுடையவர். அவர் மனமே கலக்கத்திலிருப்பது முகத்தில் தெரிந்தது.

1991-ல் ரஷ்ய அதிபரை கவிழ்க்க சதி செய்ததாக புகழ்பெற்ற கேஜிபி ரகசிய உளவாளிகள் அமைப்பு கலைக்கப்பட்ட பின் உருவான அமைப்பு தான் FIS. உள்நாட்டு வெளிநாட்டு புலனாய்வுகளை மேற்கொண்ட அந்த அமைப்புக்கு கடந்த பத்தொன்பது ஆண்டுகளாக மிகப்பெரிய சிக்கல்கள் எதுவும் வரவில்லை. ஆனால் இப்போது வந்திருப்பது மிக முக்கியமானது. நாட்டின் பொருளாதாரத்தையே பாதிக்கக் கூடியது. அதைப் பற்றி விவாதிக்கத் தான் அந்த நபரை அழைத்திருந்தார்.

மணி சரியாக பத்தரை ஆகும் போது கதவு திறந்தது. ஒடிசலாய் உயரமாய் இருந்த அந்த நபர் நுழைவதற்கும் மேஜையிலிருந்த ரகசியம் தாங்கிய பேப்பர்கள் சலசலப்பதற்கும் சரியாய் இருந்தது.

0 comments:


Blogger Templates by Isnaini Dot Com. Powered by Blogger and Supported by ArchiThings.Com - Modern Architecture Design