Saturday, May 15, 2010

உன்னை தற்கொலை செய்யவா??!! - பகுதி 4

‘பயணிகளுக்கு அன்பான வணக்கங்கள். இது சென்னை நோக்கி செல்லும் LH-758 லுஃப்தான்ஸா விமானத்தில் ஏறுவதற்கான அறிவிப்பு. சிறுகுழந்தைகளுடன் வந்துள்ள பயணிகளையும் சிறப்பு உதவி தேவைப்படும் பயணிகளையும் விமானத்தில் ஏறுமாறு அழைக்கிறோம். உங்களின் விமானச்சீட்டுக்களை வைத்திருங்கள். இதர பயணிகள் இன்னும் பத்து நிமிடங்களில் ஏறலாம். நன்றி.’

ஒலிப்பெருக்கியில் லுஃப்தான்ஸா நிறுவன ஊழியை குழைவாய் ஆங்கிலத்தில் கசிந்துருக ஜெர்மனியின் ப்ராங்க்பர்ட் விமான நிலையத்தில் டெர்மினல் ஒன்றில் இருந்த மக்கள் தங்கள் பைகளை பொறுக்கிக் கொண்டு விமானத்தின் உள்புக வரிசையில் காத்திருந்தனர். அது எப்போதும் பரபரப்பாய் இயங்கும் விமான நிலையம். கிழக்கிலிருந்து மேற்கு செல்பவரும் மேற்கிலிருந்து கிழக்கு செல்பவரும் என அனைத்து நிற மக்களும் பாகுபாடில்லாமல் தத்தம் விமானத்தை பிடிக்க காத்திருந்தனர்.

அங்கே ஓரமாய் இருந்த ரெஸ்டாரண்டில் அமைதியாய் காபி குடித்துக் கொண்டிருந்த அவன் பெயர் ப்ராங்க். அமெரிக்கன். ஆறரை அடி உயரம். ஆஜானுபாகுவாய் முறுக்கேறியிருந்த உடம்பு. கண்கூசும் அளவுக்கு கச்சிதமாய் அடித்திருந்த மொட்டை. காதில் சின்ன வளையம். அவன் போட்டிருந்த கோட்டும் சூட்டும் வில்லன் கேரக்டருக்கு இவன் பொருத்தமாய் இருப்பான் எனக்கூறியது. தன் காபிக் கோப்பையை முடித்திருந்த ப்ராங்க் குப்பைக் கூடையில் கோப்பையை எறிந்துவிட்டு பக்கத்திலிருந்த சின்ன சூட்கேஸை எடுத்துக் கொண்டு சென்னை விமானம் நிற்கும் கேட்டை நோக்கி சென்றான்.

டிக்கட்டையும் பாஸ்போர்டையும் சரிபார்த்ததும் அமைதியாய் நின்றிருந்த அந்த ஏர்பஸ் A340 ரக விமானத்தில் ஏறினான். விமான பணிப்பெண் கூறிய வணக்கத்தை புன்னகையுடன் ஏற்றுக் கொண்டு தன் சீட்டை நோக்கிப் போனான். இன்னும் ஒன்பது மணிநேரம் பயணம் மிச்சமிருக்கிறது. பயணிகள் அவரவர் இருக்கையில் அமர சற்று நேரத்தில் விமானம் நிரம்பியதும் அது கிளம்புவதாக விமானி ஒலிபெருக்கியில் சொன்னார். பயணிகளை வரவேற்றவுடன் அவர்கள் பயணம் இனிதே அமைய வாழ்த்தினார். பின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள் திரையில் ஓட விமான பணிப்பெண்கள் செய்முறை விளக்கம் கொடுத்தனர். எத்தனையோ முறை பயணம் செய்திருந்ததால் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஜன்னல் வழியே பார்த்தான். தூரத்தில் மேகங்கள் ஒன்றுக்கொன்று முட்டி மோதிக் கொண்டிருந்தன.

அன்று காலை ப்ராங்க்பர்ட்டில் ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் தூங்கிக் கொண்டிருந்த அவனை எழுப்பி அவசர அவசரமாய் சென்னை செல்லுமாறு உத்தரவு வந்திருந்தது. ஏன் எதற்கு என்று கேள்வி கேட்கும் முறை அவன் தொழிலில் கிடையாது. அப்படி கேட்பவர்கள் உயிருடன் இருந்தார்களா என்றும் தெரியாது. மேற்கொண்டு தகவல்கள் அவ்வப்போது வந்து சேரும். ப்ராங்க் என்பது கூட அவன் உண்மையான பெயரா என அவனுக்கே மறந்து விட்டது. இப்போதைக்கு நம் எல்லோருக்கும் அவன் ப்ராங்க். அவசரமாய் ஓட்டலை காலி செய்து விட்டு காத்திருக்க அந்த வழியே சென்ற ஒருவன் மூலம் அவனிடமிருந்த பெட்டி அவனுக்கு ஒப்படைக்கப்பட்டிருந்தது. ப்ராங்க் என்ற பெயரில் பாஸ்போர்ட்டும் இந்தியவிசாவும் இதர விஷயங்களும் இருந்தன.

விமான ஓடுதளத்தில் பொறுமையாக பயணிக்க ஆரம்பித்த அந்த உலோகப்பறவை ஜிவ்வென பறக்க ஆரம்பித்ததும் கண்மூடி தூங்க ஆரம்பித்தான். எத்தனை நேரம் தூங்கி இருப்பானோ தெரியாது. இன்னும் சற்று தூங்கி இருக்கலாம் என தோன்றியது. விமானத்தில் பணிப்பெண்கள் ஜூஸும் வைனும் பரிமாறிக்கொண்டிருந்தனர். அருகே வந்த பணிப்பெண்ணிடம் வைன் கேட்டு வாங்கி குடித்தான். சற்று தேவலாம் போலிருந்தது. சுற்றிப்பார்க்கையில் எல்லோரும் அவரவர் முன் இருந்த திரையில் படம் பார்க்க ஐக்கியமாயிருந்தனர். இவனுக்கு ஏனோ பயணிக்கும் போது படம் பார்க்க பிடிப்பதில்லை.
அரை மணிநேரம் கழிந்தது. உணவு பொட்டலங்களை எடுத்துக் கொண்டு பணிப்பெண்கள் வந்தனர். தனக்கு கொடுக்கப்பட்ட உணவுபொட்டலத்தை சாப்பிட்டு விட்டு திரும்பவும் தூங்க ஆரம்பித்தான்.

இந்திய நேரப்படி இரவு பதினொன்றேமுக்கால் மணியளவில் விமானம் சென்னையில் இறங்கியது. இறங்குவதற்கு முன் விமான கழிவறக்குள் சென்று பைஜாமா குர்தாக்கு மாறியிருந்த ப்ராங்க் குடியுரிமை சோதனை அதிகாரி முன் நின்றான்.

“வணக்கம் ப்ராங்க். வெல்கம் டூ இண்டியா. நீங்க என்ன விஷயமாக இந்தியாவிற்கு வந்துள்ளீர்கள்?”

குடியுரிமை அதிகாரி கேட்டுக் கொண்டே பாஸ்போர்டை ஸ்கேன் செய்தார். ப்ராங்க் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அவர் முன் இருந்த திரையில் வர ஆரம்பித்தது. எல்லாம் பொய்யான விவரங்கள்.

அசராத ப்ராங்க் அமெரிக்கன் ஆங்கிலத்தில்

“நான் சுவாமி ஆத்மானந்தாவின் தீவிர பக்தன். அவரின் ஆசிரமத்திற்கு வந்து அவரை தரிசிக்க வேண்டுமென்பதற்காக வந்துள்ளேன்.”

அவனின் விசாக்காரணமும் அதுவாக இருப்பதை பார்த்து திருப்தியடைந்த அதிகாரி அவன் இந்தியமண்ணில் வந்து இறங்கியதற்கு அடையாளமாக சீலை வைத்து அனுப்பினார். சிரிப்பை உதிர்த்த ப்ராங்க் வணக்கம் சொல்லிவிட்டு கஸ்டம்ஸ் அதிகாரிகளைத் தாண்டி வெளியே வந்தான். சென்னை அந்த நேரத்திலும் வெப்பமாய் இருந்தது. குப்பென்று வியர்த்தான்.

வெளியே வந்ததும் டாக்ஸியை அமர்த்தி கொண்ட அவன் சென்னைக்கு வெளியே மதுரவாயில் தாண்டி சில கிலோமீட்டர் தொலைவிலுள்ள சுவாமி ஆத்மானந்தா ஆசிரமத்திற்கு போக பணித்தான். டாக்ஸி சென்னை சாலையில் வழுக்கிக் கொண்டிருந்த அதே வேளையில்…..

கெத்திரெட்டிப் பள்ளி…

தத்தம் வேலையை முடித்துவிட்டு பங்கர் போன்றிருந்த படுக்கைக்கு தயாராகிக் கொண்டிருந்தனர் மிருதுளாவும் ப்ரணவும். ஆராய்ச்சி இறுதிக்கட்ட நிலையில் இருப்பதால் வேலையை தான் பார்த்துக் கொள்வதாகவும் அவர்களை ஓய்வெடுக்குமாறும் ராஜசேகரன் பணித்திருந்தார். சோம்பல் முறித்தவாறே கட்டில்கள் போடப்பட்ட அறைக்குள் நுழைந்த அவர்கள் அங்கிருந்த சோபாவில் அமர்ந்தனர்.

சட்டென நினைவுக்கு வந்தவளாய் மிருதுளா…

“ப்ரணவ்.. நீ வேணா போய் தூங்கறதுனா தூங்கு. நான் கொஞ்சம் தியானம் பண்ணிட்டு வர்றேன்..”

“ம்ம்.. போ. நான் வேணா வெயிட் பண்றேன். உன்கூட ஆராய்ச்சி தவிர வேற விஷயம் பேசியே நாளாச்சு…”

சிரித்துக் கொண்டே அடுத்திருந்த அறைக்குள் சென்ற மிருதுளா தியானத்துள் மூழ்கலானாள்.
அரை மணி நேரம் முடிந்ததும் இதுவரை இருந்த களைப்பெல்லாம் மறைய முகத்தில் புன்சிரிப்புடன் ப்ரணவ் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள். அதுவரை கண்மூடி சோபாவில் தலை சாய்த்திருந்த ப்ரணவ் கண் திறந்து அவளை முழுங்குவது போல் பார்த்தான். சோபாவில் இருந்த அவள் கைகளை எடுத்து ஓவ்வொரு விரலாய் சொடுக்கெடுக்கலானான்.

“என்னடா.. செம மூட்ல இருக்க போலிருக்கு” மிருதுளா சீண்ட…

“ஆமாமா.. எவ்ளோ நாளாச்சு உன்கூட ரசிச்சு சிரிச்சு பேசி.. பக்கத்திலேயே தான் இருக்கோம். ஆனா எங்கியோ தூரத்துல இருக்கற மாதிரி இருக்கு.”

“ஆஹா.. வேணும்னு தானே இந்த வேலைக்கே வந்தே…”

“அதே தான்... நீ வேணும்னு தான் நான் இந்த வேலைக்கே வந்தேன்…” ப்ரணவ் வழிய மிருதுளா ரசித்தாள். ‘இது இந்த குறும்புத்தனம் தான் அவனிடம் அவளுக்கு பிடித்தது. எது வேண்டுமென்றாலும் அடம் பிடிக்கும் குணம். இவள் வேண்டுமென்று இவளுக்காக ராஜசேகரனிடம் போராடி இந்த வேலைக்கு சேர்ந்திருந்தான்.

கிறக்கத்திலிருந்த மிருதுளா..

“நான் எங்க போனாலும் என் கூடவே வந்துடுவியா?”

“கண்டிப்பா.. இதிலென்ன சந்தேகம். நாம சுத்தின அந்த நாளெல்லாம் நெனச்சுப்பாத்தா..ம்ம்.. இங்க வந்து ரெண்டு வருஷத்துக்கும் மேலாச்சு… எப்போ வெளியே போவோம்னு இருக்கு..”
“கவலைப்படாத.. இன்னும் கொஞ்ச நாள் தான்.. வேலை முடிஞ்சுடும். நாட்டுக்காக இந்த வேலைய பண்றோம்னு உனக்கு பெருமையா இல்லியா..”

“நீ நாட்டுக்காக உழைக்கற.. நான் உனக்காக உழைக்கிறேன்.. ஆக மொத்தம் பாத்தா பெருமையா தான் இருக்கு…”

“அது சரி… ஸ்ஸ்..ஏ.. கையில் இப்படியா சொடக்கு எடுப்ப.. வலிக்குது”

செல்லமாய் சிணுங்கினாள் மிருதுளா…

“ஓ… செல்லமே.. வலிக்குதா.. இப்போ வலி போறதுக்கு ஒத்தடம் கொடுக்கறேன் பாரு. “

அவள் கையைப் பிடித்து மெல்லியதாய் முத்தமிட்டான்.

“டேய்.. என்னாதிது… உன் மீசை..குறுகுறுங்குது”

“மீச.. தான் ஆம்பளைக்கு அழகு…” சொல்லிக்கொண்டே மெல்ல மெல்ல அவன் உதடு அவள் கைகளின் மேலேறியது.

“சீ… என்னடா பண்ற… ரொம்பவும் மோசமாயிட்டே வர்ற…”

“ஆமா மோசம் தான். இந்த வேலை முடிஞ்சதும்.. மொதல்ல கல்யாணம்..”

“ம்ம்.. எந்த வேலை…? இப்போ பண்ணிட்டிருக்கிறதா..”

“அடி.. என்னைய சொல்லிட்டு.. நீ மோசமா பேசற…”

“அட..அட.. இவரு ரொம்ப ஒழுங்கு..” பழிப்பு காட்டினாள்.

“என்னைய பாத்தா பழுப்பு காட்டற.. உன்னை…” பற்கள் நறநறக்க.. கண்ணில் மின்னலுடன் அவன் அவளின் உதடை நோக்கி பாய்ந்தான். மறுப்பேதும் காட்டாமல் கிறங்க ஆரம்பித்திருந்தாள் மிருதுளா…

இரண்டு நாள் கழித்து..

சுவாமி ஆத்மானந்தா ஆசிரமம். மதுரவாயில் சென்னை நெடுஞ்சாலையிலிருந்து சற்று தள்ளி இருக்கிறது. வெளியே பெரிய கதவு. சுற்றிலும் அமைக்கப்பட்ட பெரிய தடுப்புச் சுவர். அவ்வளவு சீக்கிரம் யாரும் உள்ளே போய்விட முடியாது. அனுமதி உள்ளவர் மட்டும் உள்ளே வர முடியும். வெளியிலிருந்து பார்த்தால் கூரை வேய்ந்த குடிசைகள். எப்போதும் ஏதாவது பஜனை பாட்டு பாடிக்கொண்டிருக்கும்.

சுற்றியிருந்த குடிசைகளிலிருந்து சற்றே வித்தியாசப்பட்டு பெரியதாய் அமைக்கப்பட்டிருந்த அந்த குடிலில் தான் எப்போதும் பூஜைகள் நடக்கும். நடுவில் ருத்ரதாண்டவமாடும் காளி சிலை. மகா சக்தி பொருந்திய தெய்வம் என்று பேச்சு. எல்லாவற்றிலிருந்தும் சற்றே வேறுபட்டு இரண்டு மாடி கட்டிடம் அந்த வளாகத்தின் ஓரமாய் பார்ப்பதற்கு சாதாரணமாய் இருந்தது.
கட்டிடத்தின் உள்ளே விர்ரென்று ஓடிக்கொண்டிருந்த குளிர்சாதனப்பெட்டி. குளிரூட்டப்பட்டிருந்த அறையில் நடுநாயகமாய் போடப்பட்டிருந்த சோபாவில் ஒரு பக்கம் ப்ராங்க். மறு முனையில் சுவாமி ஆத்மானந்தா. எதிரில் இருந்த டீபாயில் அப்போது தான் புதிதாய் திறக்கப்பட்டிருந்த ஜானிவாக்கர் பாட்டில். யாரையோ எதிர்பார்த்து காத்திருந்தனர். நேரமாகவும் கச்சேரி ஆரம்பமாகிவிட்டது.

முதல் ரவுண்டில் இருக்கையில் ப்ராங்க் ஆத்மானந்தா பற்றி தெரிந்து கொண்டான். பூர்வாசிரம பெயர் வடிவேலன். படிக்காம ஊர் சுற்றிக் கொண்டு இருந்தான். காட்டுக்குள்ள சாமி இருக்கிறதென்று புரளி கிளம்ப காட்டுப் பக்கம் போனான். மனம் போன போக்கில் திரிந்த அவன் நாளான தாடியுடன் நாட்டுக்கு வர சாமியாக்கிவிட்டனர். சாமியாரானதும் சர்வதேச தொடர்புகள் கிடைக்க ஆரம்பித்தன. அதன் விளைவு தான் ப்ராங்க் வருகை.
ஆத்மானந்தா ப்ராங்க் பற்றி விசாரிக்க சின்னதாய் புன்னகையை மட்டும் உதிர்த்தான். எந்த சூழ்நிலையிலும் போதை ஏறாத வண்ணம் அவனுக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது.
இரண்டாவது ரவுண்ட் ஆரம்பிக்கும் போது தான் அந்த நபர் நுழைந்தார். ஏற்கனவே பரிச்சயமாயிருந்ததால் ஆத்மானந்தா அவரைப்பார்த்து இளித்தார். பதிலுக்கு புன்னகைத்த வாறே ப்ராங்கை ஏறிட்ட அவர் அறிமுகப்படுத்திக் கொண்டார்.

“ப்ராங்க். வெல்கம் டூ இண்டியா..”

“நன்றி.. எனக்கு உங்களை சந்திக்க சொல்லி தகவல். அதற்கு தான் இந்த ஏற்பாடே. நீங்களும் சுவாமியின் பக்தன் தானே.”

“ஆமா. என் டிபார்மெண்டுக்கே தெரியும்.”

“ம்ம்.. சரி. இப்போதைக்கு திட்டம் என்ன? என்ன பண்ணப் போறோம்?”

தனக்கான கோப்பையில் ஜானிவாக்கரை ஊற்றிக் கொண்ட அவர் தேன்நிற திரவத்தை உறிஞ்சியவாறே..

“மூன் மிஷனுக்கான வேலைகள் முடிஞ்சாச்சு. அந்த ஏரியாக்குள்ள குறிப்பிட்ட சிலர் மட்டும் தான் போக முடியும். பல கட்ட சோதனைகள். மூணு பேர் தான் இந்த ஆராய்ச்சியில முக்கியமா வேலை செய்யறாங்க. இதப்பத்தின மொத்த விஷயங்களும் அவங்களுக்குத் தெரியும். ஆனா யாரும் இதுவரை அந்த கிராமத்தை விட்டு வெளியே வந்ததில்ல. ஆக யாராச்சும் உள்ளே போய் தான் தகவல்கள எடுத்திட்டு வரணும்.”

“ம்ம்.. ஆனா உங்களுக்குத் தான் அனுமதி இருக்கே”

“இருக்கு. கொஞ்ச நாள் முன் தான் போய்விட்டு வந்தேன். ஆனா அங்கிருந்து எதையும் வெளியே கொண்டு வர முடியாது. மாட்டிக்குவோம். அந்தளவுக்கு பாதுகாப்பு அதிகம்.”

“நீங்களே இப்படி சொன்னால் எப்படி? உங்களால முடியாததா?”

“ம்ம்.. இது உண்மையிலேயே பலமான கோட்டை. உடைப்பது ரொம்ப கஷ்டம். நீ தான் எப்படி உள்ளே போறதுக்கு யோசிக்கணும்”

சொல்லிக் கொண்டே கண்ணடித்தார் அவர். தேசிய விஞ்ஞானக்குழுத் தலைவர் நாராயணரெட்டி.

1 comments:

பிரதீப் said...

த்ரில்லர் ரொமான்ஸ் பிக்ஷன் இப்படி எதிலும் அடைக்க முடியாத கதை இது... :)
கலக்கு கலக்கு ...


Blogger Templates by Isnaini Dot Com. Powered by Blogger and Supported by ArchiThings.Com - Modern Architecture Design