Sunday, June 20, 2010

ராவணன் - என் பார்வையில்

ராவணன்…
படப்பிடிப்பு தொடக்கத்திலிருந்தே ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள். விக்ரம், ஐஸ்வர்யாராய், பிருத்விராஜ், ஏ.ஆர்.ரஹ்மான்… முக்கியமாக மணிரத்னம்.
அநேகமாக இந்நேரம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் படம் அப்பட்டமான ராமாயண தழுவல் என்று. படத்தின் ஆரம்பமே ஒகேனக்கலில் விக்ரம் குதிப்பதில் ஆரம்பிக்கிறது. துண்டு துண்டாக சில காட்சிகள், பின் வீரா பாடலின் பிண்ணனியில் பெயர்கள். ஒருவிதமான பயணத்திற்கு நம்மை தயார்படுத்துகிறார்களோ என்ற அளவிற்கு அசத்தல் ஆரம்பம்.


சீதையை கடத்தி சென்ற ராவணனை வதம் செய்யும் கதை. வேறுதுவும் கதையைப் பற்றி சொல்ல இல்லேங்கறதால மற்ற விஷயங்களைப் பார்ப்போம். படத்தின் ஆணிவேரே பச்சைப்பசேலென்ற காட்சியமைப்பும் கண்ணுக்குக் குளிர்ச்சியாக மழைக்கால காட்சிகளும். இப்படியெல்லாம் இந்தியாவில் இடங்கள் உள்ளதா என ஆச்சர்யப்படும் அளவிற்கு இருந்த ஒளிப்பதிவு. சந்தோஷ்சிவனுக்கும் மணிகண்டனுக்கும் ஹேட்ஸ் ஆஃப். ஒவ்வொரு ஃப்ரேமையும் அவர்கள் செதுக்க எடுத்துக் கொண்ட சிரத்தை படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கிறது.
அடுத்ததாக ஏ.ஆர்.ரஹ்மான். பாடல்கள் சக்கைப்போடு போட்டாலும் எல்லாமே படத்தில் இல்லை. பிண்ணனி இசையில் ஒரு போர்களமே நடத்தியிருக்கிறார். காட்சியின் தன்மைக்கேற்ப வரும் இசை. ஆயினும் நிறைய இடங்களில் ட்ரம்ஸை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தியிருக்காரோ என்று தோன்றுகிறது. படத்தின் உஷ்ணத்தை காட்டவும் இருக்கலாம். மொத்தத்தில், படத்தின் மற்றுமொரு பக்கபலம் ஏ.ஆர்.ஆர்.
கலை: சமீர் சந்தா. எது செட், எது உண்மை என தெரியாத வண்ணம் நம்மை படத்தில் ஒன்ற வைப்பதே போதும் அவரின் வெற்றிக்கு. சண்டைக்காட்சிகளில் கயிற்றின் பங்கு முக்கிய பங்கு. சில காட்சிகள் ஏகத்துக்கும் மெதுவாக செல்வதால் கயிறுகட்டியிருப்பது தெளிவாகத் தெரிகிறது. குறிப்பாக அருவியில் இருந்து கீழே குதிக்கும் காட்சி.
நடிகர்கள் விக்ரம், ஐஸ்வர்யாராய், பிருத்விராஜ், கார்த்திக், பிரபு. விக்ரம் சொல்லத் தேவையில்ல. பின்னி எடுத்திருக்கிறார் மனிதர். தொண்டையில் குண்டுப்பட்டதால் தனது குரலை அவர் மாற்றிப்பேசுவதாகட்டும், தங்கையில் சாவு போது கரகரப்பான குரலில் ஓவென்று பெருங்குரலில் அலறுவதாகட்டும் கலக்கியிருக்கிறார். ஐஸ்வர்யா முன்னைவிட இன்னும் அழகு. அந்த மழையிலும் காட்டுப்பயணத்திலும் வாடாத முகம். கண்களில் உணர்ச்சிகளைக் காட்டுவதில் அசத்தியிருக்கிறார். பிருத்விராஜ் சூப்பிரண்டண்ட் ஆஃப் போலிஸ். பல நேரங்களில் கண்ணாடி போட்டிருப்பதால் அவரது உணர்வுகள் சரியாக வெளிப்படவில்லை. ஆயினும் தனது மனைவி கடத்தப்பட்ட செய்தி கேட்கும் போது முகத்தில் எந்த மாற்றமும் காட்டாமல் பற்களை கடித்து தாடையின் அசைவுகளிலேயே கலக்குகிறார்.ப்ரியாமணி நல்ல நடிப்பு. ரஞ்சிதாவின் சீன்கள் வெட்டப்பட்டுவிட்டன போலும். இரண்டு மூன்று இடங்களில் தலை காட்டுவதோடு சரி. வசனமே இல்லை.
வசனம்: சுஹாசினி. ஆங்காங்கே நல்லா இருந்தாலும் பஞ்ச் டயலாக் என்று சொல்லும் படி எதுவுமே நினைவில் இல்லாதது குறை. சாமி சிலை முன் ராகினியும் வீராவும் பேசும் இடம் நச்.
இயக்கம்: மணிரத்னம் நடிகர் தேர்வுகளாகட்டும், இடங்கள் தேர்வாகட்டும் இயக்குநர் மணி தன் பேரை நிலைநாட்டியிருக்கிறார். நடிகர்களிடம் தனக்குத் தேவையான முகபாவங்களை வாங்குவதில் கில்லாடி. இதிலும் நிரூபித்திருக்கிறார்.
திரைக்கதை: என்ன தான் எல்லோருக்கும் தெரிஞ்ச கதையை எடுத்தாலும் திரைக்கதையை அமைக்க அசாத்திய திறமை வேண்டும். அதில் மணிரத்னம் தவறிவிட்டாரோ என்றுத் தோன்றுகிறது. “அசோகவனத்தில் சீதை” என்பதை மட்டும் நீட்டிமுழக்கி மற்றவிஷயங்களை சுருங்க சொல்ல முயன்றிருக்கிறார். ஏனோ பல விஷயங்களை தவறவிட்டிருக்கிறார். மற்றப்படங்களிலெல்லாம் சம்பவங்கள் நிறைய இருக்க உணர்ச்சிகள் அதற்கேற்றாற் போல் காண்பித்தால் போதும் என எடுத்திருப்பர். ஆனால் இதில் சம்பவங்கள் என்று எதுவும் இல்லை. கடத்துதல் மட்டும் தான் பெரிய சம்பவம். மற்றபடி காட்டில் சுற்றித் திரிவது. ஆக இந்த பதினாலு நாள் என்னெல்லாம் நடந்திருக்கலாம் என்ற இடத்தில் கோட்டை விட்டுவிட்டார். அதனால் பல இடங்களில் படம் தொய்வு ஏற்படுகிறது.
எனக்குத் தெரிந்தவரை, மனிதன் எந்நேரமும் எல்லோருரிடமும் ஒரே மாதிரி இருப்பதில்லை. தேவைக்கேற்ப நேரத்திற்கேற்ப அவன் ராவணனாகவோ, ராமனாகவோ அவதாரம் எடுக்கிறான் என்ற கருவைக் கையாள சிரமபட்டிருக்கிறார். எதை சொல்ல எதை விட என்று. மனித உணர்ச்சிகளின் வெளிப்பாடு கொண்டே படத்தை நகர்த்த முயன்றிருக்கிறார். சில இடங்களில் வெற்றியும் பெற்றிருக்கிறார். ஆயினும் விரிவாக காட்டவேண்டிய காட்சிகளை சுருக்கி இருவரி வசனங்களில் அடக்கியதும், சுருக்கமாக முடிக்கவேண்டியதை இழுத்தவும் பலவீனம். குறிப்பாக ப்ரியாமணியை போலிஸ் தூக்கி செல்லும் போது, ஏனோ பிறக்க வேண்டிய இரக்க உணர்வு ஏற்படவில்லை. முன்னிகழ்வுகளை இன்னும் சம்பவங்களோடு சொல்லியிருந்தால் ஒன்றியிருக்கலாம். அது மாதிரி தான் ஐஸ்வர்யா மேல் விக்ரம் காதலும். அருவியில் இருந்து கீழே விழுந்ததும் காதல் வருகிற மாதிரி “உசுரே போகுதே” வைத்ததும் ஏமாற்றம். பார்த்தவுடன் காதல் போன்ற உணர்வு. அதனால் விக்ரமின் காதலின் ஆழம் தெளிவாக எங்கேயும் சொல்லப்படாதது (ஆங்காங்கே கண்கள் மூலம் விக்ரம் காட்டும் காட்சிகள் தவிர) ஆச்சர்யம். எப்படிப்பட்ட சூழ்நிலையில் விக்ரம் மேல் ஐஸ்வர்யாவிற்கு பாசம் அல்லது காதல் வருகிறதென்பதும் காணோம். இறுதியாக ப்ருத்விராஜ் தன் கேள்விகளால் ஐஸ்வர்யாவை துளைக்கும் போதே முடிவு தெரிந்துவிடுகிறது, இதுவும் பலவீனம்.
கதாபாத்திரங்களின் நிலைமாறுதல் இன்னும் தெளிவாக கையாளப்பட்டிருக்கலாம். ராமன் ராவணன் ஆவதும், ராவணன் ராமன் ஆவதும்… இந்த மாற்றம் கொஞ்சம் கொஞ்சமாக பார்ப்பவர் மனதில் பதியும்படி இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். ஆச்சர்யப்பட்ட விஷயம் ப்ருத்விராஜ். படத்தில் ராமனாய் வந்தாலும் இவருக்கு கொடுக்கப்பட்ட இடம் கம்மி தான். என்னைப் பொறுத்த வரை இங்கே ராவணன் என்பது விக்ரமை குறிக்கவில்லை. குணத்தைக் குறிக்கிறது. அதன்படி ப்ருத்வி இறுதியில் ராவணாகிறான். பதினாலே நாளில் ராமன் எப்படி ராவணன் ஆனான் என்ற விஷயமும் தெளிவாக இல்லை. தன் மனைவியை தூக்கிட்டு போய் விடும் போது அவள் மேலிருந்த காதலால் படையைத் திரட்டிக் கொண்டு போகும் ராமன், அந்த பதினாலு நாளும் படும் கஷ்டங்களில் மனைவியை காப்பாற்றுவதை விட ராவணனைக் கொல்லுவதே தன் எண்ணம் என்னும் இடத்தில் ராவணனாகிறான். (என்ன குழம்பி..குழப்பிட்டேனா?) முதலில் இருந்த முகபாவங்கள் மாறி..இறுதியாக மனைவியைப்பார்த்த போதும் கண்ணில் காதலில் இல்லாமல் “த்தா… என்னையவே இவ்ளோ நாள் அலைய வச்சிட்டியா?” என்னும் வெறி வரும். இப்படிப்பட்ட நிலைமாறுதல்களைக் கையாளுவதில் ஏனோ கோட்டைவிட்டுவிட்டார் மணிரத்னம்.
ஆக மொத்தத்தில், என் நண்பன் சொன்னது: எல்லோரும் தங்களது மிகச் சிறந்த உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள் மணிரத்னத்தைத் தவிர.

3 comments:

Suresh said...

Beautiful things put together but failed to impress collectively.

Madhusudhanan T said...

Excellent review... thanks to last line.... :)

Unknown said...

ஏகப் பட்ட எதிர்பார்ப்புகள்., ஏமாற்றத்தையே கொடுக்கும்.
அதற்கு ராவணனும் விதி விளக்கல்ல....

I recommond M.R to consider Unnaith tharkolai seiyavaa for his next make ;-)


Blogger Templates by Isnaini Dot Com. Powered by Blogger and Supported by ArchiThings.Com - Modern Architecture Design