அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாமல் இருந்தான் மாதவன். எல்லாம் கனவு போலிருந்தது. எட்டிப்பார்த்த மறுகணம் உலகமே சுழல்வது போலிருந்தது. சற்று நேரத்தில் போலீஸும் வந்துவிட்டது. மார்சுவரி வண்டியும் டாக்டர்களும் ஆஜராயினர். அவரவர் செவ்வனே தன் கடமையை செய்ய சரண்யா விழுந்த இடத்தைச் சுற்றி கோடு வரையப்பட்டது. சரண்யாவின் உடலைப் போர்த்தி ஸ்டெச்சரில் ஏற்றினர். கண்ணில் நீர்வராமல் மனத்தில் பாரம் அழுத்த வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் மாதவன்.
சம்பவம் நடந்து ஏறக்குறைய ஒரு மணிநேரத்திற்கும் மேலிருக்கும். வேடிக்கைப் பார்த்த மக்களுக்கு தத்தம் வேலைகள் நினைவுக்கு வந்து ஓவ்வொருத்தராய் நழுவ ஆரம்பித்திருந்தனர். அந்த அபார்ட்மெண்ட்டின் செக்ரட்டரி இன்ஸ்பெக்டர் வைபவ்வின் கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டிருந்தார்.
இன்ஸ்பெக்டர் வைபவ். எப்போதோ தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகத்திற்கு வந்து செட்டிலாயிருந்த முன்னோர். பெங்களூர் வாசத்தில் தமிழ் கொஞ்சிக் கொஞ்சி வரும். இன்ஸ்பெக்டர் ஆகவேண்டும் என்ற வைராக்யத்தில் படித்து முடித்து தேர்வில் வெற்றிப் பெற்று புதிதாய் இந்தப்பதவிக்கு வந்திருப்பவன். துக்கடா கேஸ்களையே பார்த்துக் கொண்டிருந்த அவனுக்கு இந்த மரணம் தலைவலியை தரப்போகின்றது என்பதை அப்போது அவன் அறிந்திருக்கவில்லை.
வைபவ்வும் செக்ரட்டரியும் சரளமாக கன்னடத்தில் மாத்தாடிக் கொண்டிருந்தனர்.
“இந்த பொண்ணு இந்த அபார்ட்மெண்ட்ல எத்தனை நாளா தங்கியிருக்குது?”
“ஒரு வருஷத்துக்கு மேலிருக்கும் சார். அந்தப்பொண்ணும் இன்னும் இரண்டு பொண்ணுங்களும் தங்கியிருக்காங்க. அமைதியான பொண்ணுங்க. வீட்டில இருக்கறதே தெரியாது. என்ன பிரச்சனையோ? இப்படி செத்துப் போச்சு” உண்மையிலேயே பரிதாபப்பட்டார்.
“இந்த பொண்ணு எங்க வேலை பாக்குதுன்னாவது தெரியுமா? எந்த ஊர்?”
“அதெல்லாம் தெரியாது சார். அபார்ட்மெண்ட் வாடகைக்கு விடறவங்ககிட்ட தான் அந்த விஷயமெல்லாம் இருக்கும். எத்தனையோ தடவ மீட்டிங்ல சொல்லிட்டோம். இது மாதிரி யாருக்கு வாடகைக்கு விட்டாலும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கனு. யார் சார் கேக்கறாங்க?”
“ஓ.. கூட தங்கியிருக்கற பொண்ணுங்களப் பத்தி தெரியுமா.. எங்க வேலை பாக்கறாங்க.. காண்டாக்ட் நம்பர்ஸ்…”
“இல்லே.. சார். எதுவும் தெரியாது. ஆனா வீட்டு ஓனருக்கு தெரிஞ்சிருக்கணும். அக்ரிமெண்ட்ல இருக்கும். ஒரு நிமிஷம் சார். அவர் அட்ரஸ் போன் நம்பர் எடுத்துத் தாரேன். அவர்கிட்ட கேட்டா தெரியும்..”
“அத குடுங்க சார் முதல்ல. இந்த பொண்ணோட பேரண்ட்ஸுக்கு தெரியப்படுத்தணும். அப்புறம் தடுமாறி கீழே விழ சான்ஸ் இருக்கா?”
“இல்லே சார்.. அதுக்கெல்லாம் சான்ஸே இல்லே. தடுப்புச் சுவரே மூணடி மேலிருக்கும்.”
“ஓ… இந்த பொண்ணு கீழே விழுந்தப்போ பார்த்தவங்க யாரு..?”
“இதோ.. மூணாவது மாடியில குடியிருக்கற மாமி தான். இங்க அஞ்சு வருஷமா தங்கியிருக்காங்க..”
செக்ரட்டரி மாமியைக் கூப்பிட மாமி தயங்கி தயங்கி வந்தார்.
“மேடம் நீங்க தான் போன் பண்ணினதா?”
“ஆமா சார். காலையில் எந்திருச்சு பையனுக்கு மாட்டுப்பொண்ணும் ஆபிஸுக்கு போனதும் குளிச்சுட்டு காய்கறி வாங்கப்போலாம்னு கீழே இறங்கினேன். ஏதோ சத்தம் கேட்டு திரும்பி பாத்தா இந்த பொண்ணு கட்டை மேலேர்ந்து கீழ குதிச்சா. எனக்கு பதட்டத்துல ஒன்னுமே புரியல. அதான் போலீஸுக்கு போன் செஞ்சேன்.”
“இந்தப்பொண்ணு தானா குதிச்சுதா.. இல்லே யாராவது தள்ளிவிட்டாங்களா? யாராச்சும் ஓடிப்போறத பாத்தீங்களா?”
“இல்லீங்க. நான் காய்கறி வாங்க கீழே இறங்கறப்ப இந்தப் பொண்ணு வராண்டாவில நின்னு பேசிட்டு இருந்துச்சு. அத தாண்டி லிப்ட்ல கீழ வந்தப்புறம் போது கீழே விழுந்துடுச்சு. அப்போ அந்த ப்ளோர்ல யாருமே இல்ல.. கண்டிப்பா தெரியும்..”
இன்ஸ்பெக்டருக்கு சப்பென்று ஆனது. தற்கொலை கேஸ். ஆனா எதுக்கு தற்கொலை பண்ணிக்கணும். யோசனையில் இருக்கும் போதே ஒரு குரல்.
“எக்ஸ்க்யூஸ் மீ சார்.”
சிந்தனை கலைந்து “எஸ்”
“சார். என் பேர் தனுஜா. சரண்யாவோட ப்ரண்ட். சரண்யா கீழே விழுந்து இறந்து போய்ட்டதா சொல்றாங்க.. என்ன சார் ஆச்சு?” கண்கள் கலங்க தனுஜா நிற்க நிமிர்ந்தான் வைபவ்.
“நீங்க தான் மேடம் சொல்லணும். உங்க ப்ரண்ட் மேலேர்ந்து கீழே குதிச்சிட்டதா போன் வந்துச்சு. வந்து பார்த்தா இறந்திருந்தாங்க. அவங்க உடலை அடாப்ஸிக்கு அனுப்பிட்டு இன்வெஸ்டிகேஷன ஆரம்பிச்சிருக்கோம். நீங்க சொல்றதுல தான் என்ன ஆச்சுன்னு தெரியணும்.. பை த வே அவங்க அப்பா அம்மாக்கு தெரியப்படுத்திடுங்க. உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.”
கண்ணீருடன் தனுஜா தலையாட்ட
“அப்புறம் உங்க ப்ரண்ட் சரண்யாவுக்கு யாராச்சும் வேண்டப்பட்டவங்க இருக்காங்களா..?”
தனுஜா மௌனமாய் மாதவன் இருந்த பக்கம் கைகாட்டினாள். அப்போது தான் சுவரோரமாய் சாய்ந்து சடலத்தைச் சுற்றி கிழிக்கப் பட்டிருந்த கோடுகளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த மாதவனைப் பார்த்தான் வைபவ்.
“சரி. மேடம். நீங்க அவங்க அப்பா அம்மாக்கிட்ட தகவல் சொல்லிட்டு வாங்க. நான் அவர்க்கிட்ட கொஞ்சம் விசாரிக்கறேன்..”
தனுஜா நகர மாதவனை நோக்கிப் போனான் வைபவ்.
“ஹலோ மிஸ்டர். நீங்க இறந்துபோனவங்களுக்கு என்ன வேணும்?”
அப்போது தான் நினைவுக்குத் திரும்பிய மாதவன், வற்றிப் போய் காய்ந்திருந்த கண்களுடன் வைபவ்வை பார்த்து
“நான் அவளுக்கு ப்யாண்ஸி சார். இன்னும் ஒன்னரை மாசத்துல கல்யாணம் பண்ணிக்க போறோம். பண்ணிக்க இருந்தோம்..ப்ச்.. இன்னிக்குக் கூட ரெண்டு பேரும் வெளில போறதா ப்ளான். அதுக்காக ஆச ஆசையா வந்தேன். என்னாச்சுன்னே தெரியல..?”
“ஐம் ரியலி சாரி.. உங்க பேர்?”
“மாதவன் சார்…”
“சாரி டூ டிஸ்டர்ப் யூ.. எதுக்காக இவங்க தற்கொலை பண்ணிக்கிட்டாங்கன்னு உங்களுக்குத் தெரியுமா?”
அப்போது தான் வெடித்து வரும் அழுகையுடன்..
“எதுக்கு சார் தற்கொலை பண்ணிக்கணும்.. இன்னிக்கு நாங்க பாத்துக்கிட்டு அம்பதாவது நாள். அதைக் கொண்டாடலாம்னு ப்ளான் பண்ணிருந்தோம். அவளை பிக்கப் பண்ணிட்டு போகதான் வந்தேன். வந்து பாத்தா இப்படி. ஏன் சார் தற்கொலை பண்ணனும்.. அவ ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்தா சார்…”
சொல்லிக் கொண்டிருக்கும் போதே கண்ணீர் பிரவாகம் எடுக்க மேலும் தொல்லைத் தர விரும்பாமல்.
“ஓக்கே மாதவன். உங்களை மேலும் டிஸ்டர்ப் பண்ண விரும்பல. அவங்க பேரண்ட்ஸுக்கு தகவல் சொல்ல சொல்லிட்டேன். அப்புறமா உங்களை நான் சந்திக்கறேன். உங்க கஷ்டம் புரியுது. ரிலாக்ஸ் யுவர்செல்ஃப். “
தலையாட்டிக் கொண்டிருந்த மாதவன் இன்னும் வெறித்துக் கொண்டிருக்க தொலைப்பேசிவிட்டு வரும் தனுஜாவை பார்த்து நடக்கலானார்.
“என்ன மேடம் அவங்க பேரண்ட்ஸுக்கு இன்ஃபார்ம் பண்ணிட்டீங்களா?”
“ம்ம்.. பண்ணியாச்சு சார். கேட்டதும் அவங்கம்மா ஓன்னு அழ ஆரம்பிச்சுட்டாங்க. டாக்ஸி புடிச்சு வராங்க.” கொஞ்சம் தெளிவானது போலிருந்தாள்.
“உங்ககிட்ட கொஞ்சம் பேசணும். இஃப் யு டோண்ட் மைண்ட் உங்க வீட்டுக்குள்ள போய் பேசலாமா? அப்படியே ஏதாச்சும் துப்பு கிடைக்குதான்னு பாக்கணும்”
“ம்ம்.. ஓக்கே சார்.”
லிஃப்ட் ஏறும் போது மாதவன் இருந்த திசையினை பார்த்தார். இன்னமும் கீழே வரையப்பட்டிருந்த கோடுகளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
வீட்டுக்குள் நுழைந்ததும் அவன் பார்வை ஒவ்வொரு பொருளாய் அலச ஆரம்பித்தது. வீடு சுத்தமாய் இருந்தது. பெண்கள் இருப்பதற்கான அறிகுறிகள் எங்கேயும் தென்பட்டது. குளியலறைக்குள் நுழைந்தால் சோப்பு வாசம் கமகம என்றிருந்தது. இறப்பதற்கு முன் தான் குளித்திருப்பாள் போலும்.
“உங்களுக்கும் சரண்யாவிற்கும் எப்படி பழக்கம்?”
“நாங்க ரெண்டு பேரும் காலேஜ்லேர்ந்து ப்ரண்ட்ஸ் சார். பெங்களூர்லேயே வேலை கிடைச்சதும் ஒன்னா வீடு எடுத்து தங்கிட்டு இருந்தோம்.”
“ஓ.. காலேஜ் படிக்கும் போது காதல்..கீதல்னு.?”
“அப்படியெல்லாம் ஒன்னுமில்லை சார். வெளிய பாக்க அமைதியா இருப்பா ஆனா அறுந்த வாலு. நிறைய ப்ரண்ட்ஸ் இருக்காங்க. ஆனா காதல்னு ஒன்னும் கிடையாது. மேரேஜ் பிக்ஃஸ் ஆனப்புறம் தான் மாதவனை விழுந்து விழுந்து காதலிச்சுட்டு இருந்தா..”
“ம்ம். மாதவன் எப்படி? அவர பத்தி உங்களுக்குத் தெரியுமா?”
“ரெண்டு மூணு தடவை பேசிருக்கேன். ஆள் ஜெம் ஆஃப் த பர்சன். நல்ல மனுஷன். ரொம்ப நாளா காதலிக்கறவங்க மாதிரி ரெண்டு பேரும் அவ்ளோ உருகிட்டு இருப்பாங்க. இவ இழப்ப எப்படி தான் தாங்கிக்கப் போறாரோ?” மாதவன் மேலிருந்த சந்தேகக் கோடு மெல்லியதாய் அழிய ஆரம்பித்தது.
“வேற ஏதாச்சும் உங்க ப்ரண்ட டிஸ்டர்ப் பண்ணின விஷயங்கள்..? இப்படி தற்கொலை பண்ணிக்கற அளவுக்கு..”
“அவ தற்கொலை பண்ணிட்டு இருக்கான்னே எனக்கு நம்ப முடியல சார். அவ்ளோ தைரியமான பொண்ணு. எங்களுக்கெல்லாம் தெம்பே அவ பேச்சு தான். காலையில கூட ஆபிஸுக்கு போனதும் அவகிட்டேர்ந்து போன். மாதவன் கூட வெளிய போறதாவும் ராத்திரி வர லேட்டானாலும் ஆகும்னும் சந்தோஷமா சொன்னா.. சொல்லிட்டு இருக்கும் போதே தடால்னு சத்தம் கேட்டுச்சு. அப்புறம் அவ நம்பர் ஸ்விட்ச் ஆஃப் ஆச்சுனு வந்தது. என்ன ஆச்சு ஏதாச்சுனு புரியாம ஆபிஸுக்கு லீவ் போட்டுட்டு வந்தேன். வந்துப்பாத்தா…”
இதுவரை நிறுத்தி வைத்திருந்த கண்ணீர் மறுபடி எட்டிப்பார்க்க ஆரம்பிக்க..
“ஓக்கே.. தனுஜா. இதுக்கு மேல கஷ்டப்படுத்த விரும்பல. அப்புறமா பேசலாம். கொஞ்சம் சரண்யா திங்க்ஸ் இருக்கற இடத்தை காட்டுனீங்கன்னா.. ஏதாச்சும் கிடைக்குதான்னு பாக்குறேன். அப்புறம் சரண்யாவோட பேரண்ட்ஸ்கிட்ட அப்புறமா விசாரிக்க வரேனு சொல்லுங்க. அவங்க எந்த ஊரு?”
“சேலம்..”
யோசித்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தான் வைபவ். ஏறக்குறைய ஒரு மணிநேரம் தேடியும் ஒன்றும் உருப்படியாக கிடைக்காததால் தனுஜாவிடம் சொல்லிவிட்டு கிளம்பினான். அன்று முழுக்க வேற வேலையிருந்ததால கவனம் திசை மாறிப் போச்சு. இதற்கிடையில் சரண்யாவின் அம்மாவும் அப்பாவும் வந்து சரண்யாவின் உடலை வாங்கிச் சென்றிருந்தனர். சாயந்திரம் போல கொஞ்சம் ஓய்வு கிடைக்கும் போது மனம் இந்த கேஸை அசைப்போட்டது. ‘அப்பட்டமா தற்கொலைன்னு தெரியுது ஆனா ஏன்னு மோட்டோ மட்டும் கிடைக்கல..ம்ம். மாதவன்கிட்டேயும் தனுஜாகிட்டேயும் இன்னும் பேசிப் பார்க்கணும். முடிஞ்சா ஒருதடவை சேலம் போயிட்டு வரலாம்.’
இரவு வர வீட்டிற்கு சென்று சாப்பிட்டு விட்டு படுக்கைக்கு போனான். கனவில் சரண்யாவின் உடலும் மாதவன் கண்ணீரும் மாறி மாறி வந்தது. அப்போது தனுஜாவின் குரல் எதிரொலித்தது. ‘காலையில கூட ஆபிஸுக்கு போனதும் அவகிட்டேர்ந்து போன். மாதவன் கூட வெளிய போறதாவும் ராத்திரி வர லேட்டானாலும் ஆகும்னும் சந்தோஷமா சொன்னா.. சொல்லிட்டு இருக்கும் போதே தடால்னு சத்தம் கேட்டுச்சு. அப்புறம் அவ நம்பர் ஸ்விட்ச் ஆஃப் ஆச்சுனு வந்தது.’
திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தான் வைபவ். காலையிலேர்ந்த பரபரப்பில அந்த மொபைல் போன் மேட்டர கவனிக்கவில்லையே. பாரன்ஸிக் டிபார்மெண்ட்ல அங்கிருந்த பொருட்களையெல்லாம் சேகரிச்சுட்டு போயிருந்தார்கள். ஒரு வேளை மொபைல்ல ஏதாச்சும்? வேகவேகமாக பாரன்ஸிக் லேப்பிற்கு டயலிட்டு பேசினான். காலையில் நடந்த தற்கொலைக்கான ஆதாரங்கள் இருக்கிறதா என்று விசாரித்தான். மறுமுனையில் ஒப்பிக்கப்பட்ட பொருட்களில் மொபைல் போனும் அதன் உதிர்பாகங்களும் இல்லை. அந்த லேப்பிலிருந்த அந்த பொருட்கள் பத்திரமாய் தொலைந்து போயிருந்தது.
2 comments:
தலைவா, கலக்கிடீங்க. என்ன ஒரே ஒரு வருத்தம், சரண்யா-ன்னு ஒரு அழகான பொண்ணு-ன்னு சொன்னீங்க, பட் அந்த பொண்ணோட போட்டோ காமிக்கமலேயே, அவல கொன்னுடீன்களே?
add some pictures, like Maruthi paintings, or Madhan drawings.
ஓகே.. கதை சூடு பிடிக்க ஆரம்பிச்சிடுச்சு...
போன அத்தியாயம் மாதிரி பல ஊர்களில் நடக்கும் விஷயங்களை ரயில் தண்டவாளம் மாதிரி ஒட்டிக்கிட்டே வந்து கடைசியில் சேர்த்தால் இன்னும் கலக்கலாக இருக்கும்.... :)
Post a Comment