Tuesday, August 28, 2012

ஆசை ஒரு புல்வெளி




மனினோட மூளையே ஒரு அதிசயம். எத்தனை எத்தனை விஷயங்களைத் தான் தனக்குள்ள வச்சுக்கிட்டு அமைதியா இருக்கு. என்னடா.. தலையும் புரியாம வாலும் புரியாம இந்த வயசுலேயே தத்துவம் பேச ஆரம்பிச்சிட்டான்னு பயப்படாதீங்க. இது தொத்து நோயல்ல. சொல்ல வந்த்து மனித மூளைக்குள்ள பலவகையா படிஞ்சி இருக்குற நினைவுகளை. எங்கேயோ எப்போதோ நடந்த சம்பவங்கள் அடிமனசுல ஆழத்துல புதைஞ்சி இருக்கு. சில நேரம் எத்தனை தான் யோசிச்சாலும் ஞாபகத்துக்கு வராது. ஆனா சில நேரங்கள்ல அதைப் பத்தி யோசிக்காமலேயே தண்ணீல போடப்பட்ட பந்து மாதிரி மேலெழும்பி வரும். இது கூட அந்த மாதிரி தான். என் வாழ்க்கையில் ஒரு நாள்.

கிட்டத்தட்ட நாலு வருஷம் இருக்கலாம். பெங்களூரில் வேலை பார்த்திட்டு இருந்த காலம். அப்போல்லாம் எங்க அலுவலகத்துல வாரயிறுதில மருத்துவ முகாம் நடத்துவோம். நானும் போவேன். நான் இந்த மாதிரி முகாம்ல கலந்துக்க ஆரம்பிச்சது ஒரு சுயநலத்துக்காக. என் நெருங்கிய நண்பர் செந்தில் தான் மருத்துவ முகாம்களுக்கு ஒருங்கிணைப்பாளர். வேலைக்கு சேர்ந்த காலகட்ட்த்துல ஒருதடவை இந்த முகாம்கள பத்தி சொன்னார். முகாம் ஒரு நாள் நடக்கும். பெங்களூரை சுத்தியுள்ள ஏதாச்சும் ஒரு கிராமத்துல இருக்கற பள்ளியில நடக்கும். மருத்துவர்கள் மற்றும் மருந்துகளை நாங்களே கொண்டு போயிடுவோம். என்னை ஈர்த்த ஒரு விஷயம் என்னன்னா. மதிய சாப்பாடு ஊர்காரங்களே ஏற்பாடு பண்ணிவாங்க. அது சர்க்கரை போட்ட சாம்பார சாப்பிட்டு மனசும் வாயும் வெறுத்திருந்த காலம். நல்ல சாப்பாடு கிராமத்து சாப்பாடு கிடைக்கும்ங்கற ஒரே காரணத்துக்காக போக ஆரம்பிச்சேன். இப்படியே ரெண்டு மூணு வருஷத்துல எங்க டிபார்ட்மெண்ட் ஒருங்கிணைப்பாளரா ஆனேன்.

எப்போதும் சனிக்கிழமை தான் முகாமுக்கு போவோம். அந்த முறை எங்க டிபார்ட்மெண்ட் ஆட்களை கூட்டிக்கிட்டு போகணும். சிலர் ஆர்வமா வந்து கலந்துப்பாங்க. சிலர் மேனேஜர் வர்றார்ங்கற காரணத்துனால வருவாங்க. சிலர நாம தான் பேசி சரிகட்டி கூட்டிட்டு போகணும். ஒருவழியா பேசி சமாளிச்சு கிளம்பியாச்சு. நாங்க போன ஊர் கோலார் பக்கத்துல இருக்கற ஒசூர்ங்கற ஊர். கிருஷ்ணகிரி பக்கத்துல இருக்கிற ஊருக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லே.

காலையில் பஸ்ஸில் போகும் வழியிலே சாப்பிட்டு ஊருக்கு போய் சேரும் போது மணி பத்தை நெருங்கிக்கிட்டு இருந்த்து. அது கொஞ்சம் பெரிய பள்ளிக்கூடம். வழக்கமா எல்லா படங்கள்லேயும் வர்ற மாதிரி ஏரிக்கரை, ஆலமரம் அது இதுனு கண்ணுக்கு விருந்தா காட்சிகள் இருந்த்து. போனதும் மருந்து மாத்திரைகளை எடுத்து வைப்பதும் மருத்துவர்களுக்கு இடங்களை தயார்படுத்துவதுமா பரபரப்பா போயிட்டு இருந்த்து. ஒவ்வொருத்தரா கூப்பிட்டு அவங்க என்ன செய்யணும்னு நானும் செந்திலும் சொல்லிக்கிட்டு இருந்தோம். சில மருத்துவர்களுக்கு உதவியாக, சிலர் மருந்துகளை கொடுப்பதற்கும், வேறுசிலர் மருந்துகளை எப்போது சாப்பிடணும்னு மக்களுக்கு விளக்குவதற்கும். கூட்டம் அதிகமா இருந்த்தால எல்லோருக்கும் நிறைய வேலை. நான் அங்க இங்கன்னு ஓடிக்கிட்டு இருந்தேன்.

மணி பன்னிரண்டை நெருங்கிகிட்டு இருந்தது. மருந்து கொடுக்கும் இடத்தில் கூட்டம். உள்ளே போய் உதவலாம் என்று போனேன். அப்போது தான் அந்த பெண்ணைப் பார்த்தேன். க்ரே கலர் புடவையில் ஒரு ஐந்தரை அடி உயரம், ஒல்லியான உருவம், முகம் ‘அட்டகத்தி’ பூர்ணிமா சாயலில் இருந்தது. ஒரு நிமிஷம் அசந்து நின்னேன். திடீர்னு வேறு சில விஷயங்கள் மனத்திரையில் ஓட ஆரம்பிச்சது. ‘கிராமம், பஞ்சாயத்து, அரச மரமோ ஆலமரமோ அதுல என்னை கட்டிவச்சு அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்க சொல்றாங்க’. மனம் திக்குனு ஆக திரும்பி வேலையில கவனம் செலுத்த ஆரம்பிச்சேன். மருந்து சீட்டுகளை வாங்கி அதை மருந்து எடுத்து தருபவர்களிடம் கொடுத்து மறுபடியும் மருந்தையும் சீட்டையும் மக்களிடம் கொடுக்க வேண்டும். இந்தப் பெண் எங்களுக்கு உதவி பண்ணிட்டு இருந்தாள். அவளிடம் இரண்டு முறை சீட்டை வாங்கி மருந்து எடுத்து கொடுத்தேன். கொஞ்ச நேரம் கழித்து தான் தெரிஞ்சுது. அந்தப் பெண் சீட்டையெல்லாம் வாங்கி வேறு யாரிடமும் கொடுக்காமல் நான் வரும் வரை காத்திருந்து என்னிடம் கொடுத்துக் கொண்டிருக்கிறாள் என்று. அப்படியே வானத்துல பறக்கற மாதிரி இருந்தது. பின்னெ கொஞ்சமா ரொமாண்டிக் ஃபீலிங்கோட நடக்க ஆரம்பிச்சேன்.

மதியம் சாப்பிடறப்போ செந்திலிடம்,

“செந்தில். அந்த பொண்ணு எப்படி? என்னைய பாத்துட்டு இருக்கு”

பார்த்த செந்தில்,

“தம்பி, ஒழுங்கா இருக்கணும்னு ஆச இல்லியா. அது ஊர் பெரியவரோட பேத்தி. மைசூர்ல வேலை பாக்குது லீவுக்கு வந்திருக்கு.”

செந்திலுக்கு எல்லா விஷயமும் தெரிஞ்சிருந்த்து. அவர் தொடர்புகள் அப்படி. ‘கொஞ்சம் கொஞ்சமா அதே ஏரிக்கரை, அரசமரம், கட்டிவைக்கறது எல்லாம் ஞாபகம் வந்தது.’ சிந்தனையை உதறி தள்ளினேன். வேலைக்காவாது.

“எதுக்கும் ஜாக்கிரதையா இருந்துக்கோ. காவேரி பிரச்சனை, இதுல இதையும் சேர்த்துவிட்டுடாதெ”. பீதியை கிளப்பினார்.

சாப்பிட்டு முடித்ததும் கருமமே கண்ணாயினார்னு வேலைய பார்க்க ஆரம்பிச்சேன். மதியம் மூணரை வாக்கில் முகாம் முடிந்த்து. அந்த பொண்ணு இருக்கற பக்கம் வேணும் என்றே போவதை தவிர்த்தேன். அடுத்து டீ குடிச்சிட்டு கிளம்ப வேண்டியது தான். அந்த பள்ளிக்கூடத்துல ‘சயின்ஸ் லேப்’ இருக்குதுனு எல்லோரும் பார்க்கப் போனோம். நன்றாகவே வைத்திருந்தார்கள். எல்லாவற்றையும் சுத்தி பார்த்துட்டு வெளியே வந்தேன். லேப் வாசலில் வரிசையாய் எல்லோரும் உட்கார சேர் போட்டிருந்தார்கள். எங்க மக்கள் டீ குடிக்க போய்விட நான் பின்தொடரும் போது பார்த்தேன். அந்த பொண்ணும் இன்னும் இரு பெண்களும். தோழிகள் போல. இந்த பெண்ணைப் பார்த்த போது திடுக்கிடும் உணர்வு. இதுவரை அப்படி ஒரு உணர்ச்சி வந்ததில்லை. அந்த சம்பவத்துக்கு அப்புறமும் வந்ததில்லை. இந்த ரொமாண்டிக் லுக் ரொமாண்ட்டிக் லுக்னு சொல்லுறாங்களே. அதை அந்தப் பெண் கண்களில் பார்த்தேன். கண்களில் இருந்தது கிறக்கமா மயக்கமானு தெரியல. அதீத காதலோட பார்த்த மாதிரி இருந்தது. காதலான கண்களை பார்த்ததும் முதலில் வந்தது பயம். ‘முதல்ல இந்த இடத்தை காலி பண்ணனும்.’

வேகமாய் டீ குடிக்க சென்றேன். பஸ் ஏறுவதற்கு அவர்களைத் தாண்டி தான் போக வேண்டும். நடந்ததை செந்திலிடம் சொன்னால் நம்பவில்லை.
“போப்பா. நீ பாட்டுக்கு கத வுடாத.”

அவர்களை கடந்து நடந்து பத்தடி தூரம் போனதும் திரும்பி பார்த்தேன். மூவரும் என் பின்னாலேயே வந்துக்கிட்டு இருந்தார்கள். ‘வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருவம்’ பந்தாடிக்கிட்டு இருந்த்து. வேகவேகமாக நடையைக்கூட்டினேன். பஸ்ஸில் ஏறினால் உட்கார இடமில்லை. படியிலேயே உட்கார்ந்துகிட்டு போகவேண்டியது தான். வியர்த்து போன என் முகத்தையும் பின்னால வந்த பெண்களையும் செந்தில் ஆச்சர்யமா பார்க்க ஆரம்பிச்சார். ‘அப்பாடா. கொஞ்சமாச்சும் நம்பறாரே.’
பெண்கள் மூவரும் பஸ்ஸுக்கு மிக அருகில் வந்துவிட்டார்கள். திக்திக்கென்று அடிச்சது மனது. ‘ஆண்டவா. நல்லபடியா பெங்களூருக்கு போய் சேர்த்துடுப்பா.’ அப்போது தான் கவனித்தேன். அந்த பெண்ணின் தாத்தா, ஊர் பெரியவர் பஸ் முன் சீட்டில் உட்கார்ந்திருந்தார். வழியில் எங்கேயோ இறங்கணுமாம். பெண்கள், படிக்கட்டில் நான், பெரியவர் மூவரும் ஒரே நேர்கோட்டில். செந்தில் எல்லாவற்றையும் பார்த்துக்கிட்டு இருந்தார். அந்தப் பெண் கன்னடத்துல அவங்க தாத்தாக்கிட்ட ஏதோ பேசினாள். இதழின் ஓரம் அன்று முழுக்க பார்த்த அதே ஈரமான புன்னகை. மறைக்கக்கூடாதென்று சற்று நகர்ந்தேன். வண்டியும் கிளம்ப ஆயத்தமானது. ஓட்டுநர் வண்டியை கிளப்ப அப்பெண் டாட்டா காண்பித்தாள். தாத்தாவிற்கு தான் டாட்டா என திரும்பிப் பார்த்தால் அவர் வேற எங்கேயோ பார்த்திட்டு இருந்தார். ‘எனக்குத் தான் அந்த டாட்டாவா’. பயம் இருந்தாலும் தலை தன்னிச்சையா அசைந்தது. கூட இருந்த தோழிகள் அவளை கிண்டல் செய்ய ஆரம்பித்தனர். வண்டி வேகமெடுக்க ஆரம்பிக்கும் போது மனம் அன்று முழுக்க நடந்ததை அசை போட ஆரம்பித்தது.

போகும் வழியில் பெரியவர் இறங்கிக் கொள்ள செந்தில் என்னிடம்,

“நீ சொன்னது உண்மை தாம்பா. உன்னைய வச்ச கண் வாங்காம பாத்துச்சு.”
 மனதில் ஒரு சின்ன பெருமிதம். நம்மையும் ஒரு பொண்ணு பார்க்குதுங்கற கர்வம். நாட்கள் அப்படியே ஓடியது.

அடுத்த வருஷமும் அந்த ஊருக்கு போனார்கள். வேறொரு வேலை இருந்ததால போக முடியல. போயிட்டு வந்த செந்தில் சொன்னார்.

“தம்பி. அந்த பொண்ணு எல்லா மூஞ்சியையும் பாத்துச்சு. உன்னத் தான் தேடுச்சுன்னு நினைக்கிறேன். கடைசியில் சோகமா இருந்துச்சு”

“இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி தான் உடம்ப ரணகளமாக்கறீங்க.”
சொன்னாலும் கேட்கும் போது நல்லாவே இருந்தது. அவ்வளவு தான் நாலு வருஷம் இருக்கும். அந்த ஊருக்குப் போனதே சுத்தமா மறந்து போயிருந்த நிலையில் ‘அட்டகத்தி’ படமும் பூர்ணிமாவும் பழைய நினைவுகளை கிளறிவிட்டுவிட்டார்கள். சில வருஷம் கழிச்சு நானும் இவ்வளவு எழுத காரணமா இருந்துட்டாங்க.

அடுத்ததா அந்த ஊருக்கு ஒரு ட்ரிப் போடலாம்னு இருக்கேன். யார் கண்டா அந்த பெண் எனக்காக இன்னும் காத்துக்கிட்டு இருந்தா….


2 comments:

Unknown said...

ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும்... it was a nice experience.. you have missed one good girl in your total life... don't hesitate! go ahead and see her once if she's single take her with you...
ஆனா ஒரு விஷயம்.... நீங்க உண்மையிலேயே அட்டகத்தியா?

திண்டுக்கல் தனபாலன் said...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_31.html) சென்று பார்க்கவும்... நன்றி...

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்...


Blogger Templates by Isnaini Dot Com. Powered by Blogger and Supported by ArchiThings.Com - Modern Architecture Design