Thursday, July 29, 2010

உன்னை தற்கொலை செய்யவா?! - பகுதி 8

கெய்ரோ.

எகிப்தின் தலைநகர். ஆப்ரிக்கா கண்டத்துலேயே மிகப்பெரிய நகரம். பழங்கால எகிப்தியர்கள் கட்டிய பிரமிடுகள் அவர்கள் வாழ்க்கை முறைக்கு சான்று. கணிதத்தில் சிறந்து விளங்கியவர்கள். மிகவும் பழமைவாய்ந்த நைல் நதி பாலைவனமாயிருந்த அந்தப்பகுதியையே செழிப்பாக்கியது. எப்போதும் பரபரப்பை தன்னகத்தே கொண்ட அங்கே ஏகப்பட்ட சுற்றுலா பயணிகள் வருவதால் கொஞ்சம் கொஞ்சம் ஆங்கிலம் கற்றுக் கொண்டு பேசும் கைடுகள். மிக முக்கியமாக சொல்லப்போனால் கிரேக்க மன்னன் ஜூலியஸ் சீயரை மயக்கிய பேரழகி கிளியோபாத்ரா வாழ்ந்த நகரம். ஏனோ அன்று நடக்கப்போகும் அந்த சம்பவத்தை தெரிந்து கொண்ட மாதிரி அதிசயமாய் வானம் தூறல் போட்டுக் கொண்டிருந்தது. மங்கிய நிலவொளியில் வீட்டுக்கு விரைவாக செல்லும் உத்வேகத்தில் பலரும் ரோட்டை ஆக்ரமிக்க ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல்.

எதிர்பாராமல் வந்த மழையை நொந்துக் கொண்டே தன் அந்த நூலகத்தை விட்டு வெளியே வந்தாள் நோரா. அழகான பெயர் அவளைப்போலவே. இருபத்திரண்டு முடிந்து இருபத்து மூன்றை நெருங்கும் வயது. நீண்ட கால்கள். கூர்மையான நாசி. கிளியோபாத்ராவை ஒத்த கரிய ஆனால் களையான நிறம். பார்ப்பவர் எவரையும் சுண்டி இழுக்கும் பெரிய கண்கள், மெல்லிய உதடுகள். அந்த பல்கலைக்கழக வளாகத்திலேயே அவளைத் தெரியாதவர் யாரும் இருக்க முடியாது.

அன்று ஏனோ ஆராய்ச்சியில் நீண்ட நேரம் மூழ்கி இருந்ததால் ரொம்பவே நேரமாகிவிட்டது. மிகப்பழமையான கெய்ரோ பல்கலைகழகத்தில் அகழ்வாராய்ச்சித் துறையில் முதுகலை படிக்கிறாள். சிறுவயதிலிருந்தே பிரமிடுகளைப்பார்த்து வாழ்ந்ததால் ஏனோ வரலாறு மேல் அளவு கடந்த ஆர்வம். அடம் பிடித்து இந்தப் படிப்பை தேர்ந்தெடுத்திருந்தாள். பெற்றோர் சொந்த ஊரில் இருக்க கெய்ரோவில் சின்னதாய் ஒரு வீடை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தாள். வெளியே வந்தவள் கைக்கடிகாரத்தைப் பார்க்க மணி ஒன்பதை தொட்டுக் கொண்டிருந்தது.

தூரத்தில் விளக்கொளியில் பல்கலைக்கழகத்தின் பிரதான கட்டிடத்தின் கோபுரம் விளக்கொளியில் மின்னிக் கொண்டிருந்தது. சுற்றிலும் இடமே வெறிச்சோடியிருந்தது.

கைப்பையை தலைக்குப் பிடித்துக் கொண்டு ஓரமாக ஓடினாள். சற்று தூரத்திலேயே மெட்ரோ ரயில் நிலையம். ஐந்து நிமிட ஓட்டமும் நடையுமாக ரயில் நிலையத்தை அடைந்தாள். ஆளரவமின்றி இருந்தது. ஆங்காங்கே இரண்டு மூன்று பேர் நின்றுக் கொண்டிருந்தனர். சற்று நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த போது ரயில் வந்து நிற்க ஏறினாள். பல்கலைக்கழகத்திலிருந்து அவள் தங்கி இருக்கும் இடமான எல்மௌனிப் செல்ல பதினைந்து நிமிடத்திற்கு மேலாகும்.

சொற்ப ஆட்களே அமர்ந்திருக்க தன் ஸ்கர்ட்டை சரி செய்து கொண்டு கண்மூடி அமர்ந்தாள். கொஞ்ச நாளாகவே அவளுக்கு பைத்தியம் பிடித்ததைப் போலிருந்தது. ரயில் முன்னோக்கி செல்ல அவள் நினைவுகள் பின்னோக்கி சென்றது. அவனையும் இப்படித் தான் ஒரு வருடம் முன்பு இதே ரயில் நிலையத்தில் சந்தித்தாள். அழகானவன். பார்த்த மாத்திரத்திலேயே பிடித்திருந்தது. முதலில் பேசத் தயங்கினான். பின் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். பெயர் பொம்மானி. ஷோப்ராவில் ஏதோ சாப்ஃட்வேர் கம்பெனியில் வேலை.

சில விஷயங்கள் நம்மை மீறி நடக்கும். அது போல தான் அவர்கள் காதலும். அதுவாய் நடந்தது. அவளையும் மீறி நடந்தது. தன் படிப்பில் கவனம் செலுத்த முயன்ற அவளை அவன் கொஞ்சம் கொஞ்சமாய் ஈர்த்தான். அவனது வசீகரப் புன்னகையும் வெடுக்கென்ற பேச்சும் யாரையும் கவரும். அவள் காதல் வயப்பட்டதில் தவறொன்றும் இல்லை.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் காதல் பறவைகள் சிறகடித்துப் பறந்தனர். வேலை நேரம் போக மீதி நேரத்தில் பேசுவதே முழுமுக்கிய வேலை. மாலை நேரங்களில் மஞ்சள் வண்ண வானத்தின் பிண்ணனியில் நைல் நதியோரமாய் நடப்பது இருவருக்கும் மிகவும் பிடித்த விஷயம்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் ஒரு நாள் அவளிடம் அரேபிய மொழியில்,

“ஹே நோரா. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..?!”

புரியாமல் குழப்பமாய் அவனைப் பார்த்தாள்.

“எங்க கம்பெனியில என்னை ரெண்டு மாசம் வெளிநாடு போக சொல்றாங்க. ஐரோப்பாவுக்கு. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல”

சட்டென்று கலவரப்பட்டாள் நோரா. பிரிதல் என்ற வார்த்தையே வலி கொடுத்தது. பெற்றோரைப் பிரிந்த போது கூட இவ்வளவு விசனமில்லை. ஏனோ பொம்மானியுடன் அவ்வளவு ஐக்கியமாயிருந்தாள்.

“என்ன முடிவு பண்ணிருக்க?”

“தெரியல. இவ்ளோ நாளா இந்த மாதிரி சூழ்நிலையை நெனச்சு கூட பார்க்கல. ஆனா எனக்கு வேற வழி தெரியல…”

முடிவெடுத்த பிறகு தான் தன்னிடம் சொல்கிறான் என்பது புரிந்தது. இரண்டு மாதம் தானே. சட்டென ஓடிப்போய்விடும். சம்மதமாய் தலையாட்டினாள். அவன் பயணப்பட இன்னும் இரு வாரங்களே இருந்தன. அந்த இருவாரமும் விடுப்பு எடுத்துக் கொண்டு அவன் கூடவே தங்கி இருந்தாள்.

கிளம்பும் நேரம் வரும் போது துக்கம் தொண்டையை அடைக்க வழிஅனுப்பினாள். ஆயிற்று. அவன் போய் சேர்ந்தவுடன் தினமும் தொலைப்பேசியில் அழைப்பான். அன்று நடந்த கதை முழுதும் ஒப்பிப்பான். நாளாக ஆக பேசும் நேரம் குறைந்தது. வேலைப்பளுவாய் இருக்கும் என்று விட்டுவிட்டாள்.

இதோ இரண்டு மாதம் என்று சொன்னவன், இன்னும் இரண்டு மாதம் இருக்க வேண்டியதாய் போயிற்று. இன்று நள்ளிரவு வந்திறங்கப் போகிறான். நினைவுகளிலிருந்து மீண்டாள். நினைக்க நினைக்க சந்தோஷமாய் இருந்தது. ஸ்டேஷனில் இறங்குவதற்கும் அவள் செல்பேசி சிணுங்குவதற்கும் சரியாய் இருந்தது. அவன் எண் தான்.

“ஹே.. எப்படி இருக்க..?”

“என்னப்பா கிளம்பியாச்சா? பெட்டியெல்லாம் எடுத்து வச்சாச்சா?”

“ஓ அதெல்லாம் எப்போவோ ரெடி ஆயாச்சு. இரண்டு மாசம்னு சொல்லி நாலு மாசமாச்சு. ஒரு வழியா தப்பிச்சு வர்றேன்.”

“தப்பிச்சு வர்றியா? நீ அனுப்பின மெயில்ல எல்லாம் ஐரோப்பிய அழகிய பத்தி தான் வர்ணிப்பே. இப்போ எனக்காக பேச்ச மாத்தறியா?”

“சீச்சீ.. அவங்கல்லாம் சும்மா பாக்குறதுக்கு தான். ஒவ்வொருத்தியும் எவ்ளோ உசரமா இருக்காங்க. என்னிக்கு இருந்தாலும் நீ தான் என் தேவதை.”

அந்த நேரத்திலும் முகம் சிவந்தாள். “சரி. எத்தனை மணிக்கு ப்ளைட் வரும்?”

“பாத்தியா அத சொல்லத் தான் கூப்பிட்டேன். நான் வந்து இறங்க எப்படியும் லேட்டாயிடும். தூக்கம் கெட்டு ஏர்போர்ட்டுக்கு வர வேண்டாம். நான் சொல்வேனே என் சின்ன வயசு ஸ்நேகிதன் அவன் ஊரிலிருந்து வந்திருக்கிறான். அவன் வருவான். ஸோ.. நான் இறங்கியதும் உன்னைக் கூப்பிடுறேன். நாளைக்கு மீட் பண்ணலாம்”

“என்னப்பா இப்படி சொல்ற.. உன்னைப்பார்த்து நாளாச்சு” நோரா இழுக்க..

“அதான் நாளைக்குப் பார்க்கலாம்னு சொல்றேன்ல. சரி.. நேரமாச்சு.. வந்தவுடன் கால் பண்றேன்.உனக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் காத்திருக்கு” போனை வைத்து விட்டான்.

முகத்தில் வெட்கம் கலந்த புன்னகையுடன் பிரபலமான அந்த அரேபியப்பாடலை முணுமுணுத்துக் கொண்டே வீட்டை யடைந்தாள்.

சாப்பிட்டுவிட்டு தூக்கம் வராமல் நேரத்தை ஓட்டிக் கொண்டிருக்க பின்னிரவில் அவன் கூப்பிட்டான்.

“ஹே.. ஒரு வழியா வந்து சேர்ந்தாச்சு. நிம்மதியா தூங்கு. நாளைக்கு சந்திப்போம். நானே கூப்பிடுறேன்”

மறுநாள் காலை. வகுப்பிற்கு விடுப்பு சொல்லி இருந்தாள். காலையிலேயே அவன் வீட்டுக்குப் போகலாமா? அவன் நண்பனும் இருப்பதாய் சொன்னானே. சரி. அவனே கால் பண்ணட்டும். காதலுடன் பதைபதைப்பையும் துணைக்கு சேர்த்துக் கொண்டு காத்திருக்கலானாள். மணி பத்தாகியது. பதினொன்று ஆயிற்று. அழைப்பு வரவே இல்லை. பொறுத்துப் பார்த்த அவள் அவன் எண்ணை அழைக்க செல்பேசி அணைக்கப்பட்டிருந்தது. அழுகை அழுகையாய் வந்தது. இதற்காகவா காலையிலிருந்து சாப்பிடாமலேயே காத்திருந்தாள்.

சரியாய் பதினொன்னரை மணிக்கு புதிதாய் ஒரு நம்பரிலிருந்து போன். எடுத்து,

“ஹலோ..”

“ஹே.. நான் தான். பொம்மானி. பப்ளிக் பூத்திலிருந்து பேசறேன். ஒரு முக்கியமான விஷயமா போலிஸ் ஸ்டேஷன் போய்கிட்டு இருக்கேன். இன்னும் இரண்டு மணிநேரத்தில் கூப்பிடுறேன்.”

குரலில் அவசரமும் பதைபதைப்பும் தெரிந்தது. பயந்து போனவளாய்..

“என்னாச்சு.. என்னாச்சுனு சொல்லு? நான் வரவா”

“எல்லா விவரத்தையும் சொல்றேன். நீ வர வேண்டாம். சீக்கிரமே கூப்பிடுறேன்..” வைத்துவிட்டான்.

தலைகால் புரியாமல் என்ன செய்வதென்று யோசித்த அவள் போலிஸ் ஸ்டேஷன் கிளம்பிவிட்டாள்.

உள்ளே நுழைகையில் பொம்மானியின் கலவர முகம் தெரிந்தது. அங்கிருந்தவர்கள் பரபரப்பாக பேசிக் கொண்டார்கள்.

“ரொம்ப நாள் கழிச்சு நடந்திருக்கு இது. அந்த ரயில் போட்டப்பவே சொன்னாங்க. ஆபத்துன்னு. யாரும் கேக்கல. இன்னும் எத்தனை பேரோ?”

இந்தக் கதையை இதுவரை படிக்கறவங்க மாதிரி தான் அவளுக்கு என்ன தான் நடந்தது, நடக்கிறதுன்னு சுத்தமா புரியல. காவல் அதிகாரி முன் உட்கார்ந்திருந்த பொம்மானி கைகுலுக்கி எழுந்து திரும்பும் போது இவளைப் பார்த்தான். அவன் முகம் ஏக களைப்புடன் இருந்தது.

அவளை பத்திரமாய் வெளியே கூட்டிக்கிட்டு வந்தான்.

“ஹே.. என்னாச்சு.. சொல்லுப்பா? எதுக்கு இங்க வந்தே..”

ஆயாசமாய் அவளைப் பார்த்தான். “காலையிலேர்ந்து சாப்பிடல. வா. எங்கியாவது சாப்பிட்டுக்கிட்டே பேசுவோம்”

அந்த கடைக்குள் நுழைந்து ஆளுக்கொரு ஜூஸ் ஆர்டர் செய்துவிட்டு பேச ஆரம்பித்தான்.

“நான் இறங்கினதுலேர்ந்தே நேரம் சரியில்ல. என் நண்பன் வரான்னு சொன்னேன்ல. அவன் வந்து பிக்கப் செஞ்சான். ஊரில கொஞ்சம் பழக்கம். இங்க வேலை விஷயமாய் வந்திருக்கிறான். ரொம்ப நாளா பணக்கஷ்டம். காலையில நான் தூங்கிட்டு இருக்கறப்போ எழுப்பி அவசரமா யாரையோ பார்க்க போகணும். உன் மொபைல எடுத்துட்டு போறேனு சொன்னான். சரின்னு தூங்கினேன். ஒரு மணிநேரம் கழிச்சு வீட்டுக்கு போலிஸ் வந்தாங்க.”

“என்னாச்சு…?” தவிப்பாய் அவள் கேட்க மயக்கத்திலிருந்த அவன் ஜூஸைப் பருகிக் கொண்டே,

“யாரோ தெரியாம ரயில் தண்டவாளத்துல விழுந்துட்டாங்க. அது உங்க நண்பன் தானானு அடையாளம் காட்ட முடியுமானு சொன்னாங்க. ஒன்னுமே புரியல. போனா அவன் கருகி கரியா இருந்தான்.”

“உன் நண்பன் தானா அது… என்னாச்சு?” பயமும் அழுகையும் வர அவள் கைகளைப் பற்றி ஆசுவாசப்படுத்தி,

“ஆமா. நடக்கும் போது தவறி விழுந்திருக்கலாம்னு சொல்றாங்க. அவன் பக்கத்திலேயே கொண்டு போன என் செல்போனும் கருகி இருந்துச்சு. பேசிக்கிட்டே கவனிக்காம விழுந்திருக்கலாம்னு சொன்னாங்க. தண்டாவாளத்துக்கு நடுவுல கரண்ட் போறதால யாரும் விழுந்திடக்கூடாது தடுப்பு போட்டிருந்தாங்களாம். ஏதோ பராமரிப்புப் பணின்னு அந்த இடத்துல மட்டும் தடுப்பை எடுத்திருந்தாங்களாம். அதுல போய் விழுந்துட்டான்.”

“இப்போ என்ன செய்யப் போறீங்க?”

“ஏற்கனவே அவன் ரொம்ப கஷ்டத்திலிருந்தான். அவன் அப்பா அம்மாகு சொல்லிட்டாங்க. தற்கொலையா இருக்கலாம்னு யோசிக்கறாங்க. எதுவா இருந்தாலும் கொஞ்ச நாள் கழிச்சு தான் தெரியும்..ச்சே.. வந்து இறங்கினதுமே இப்படியா?” அங்கலாயித்தான் பொம்மானி.

அப்போது போலிஸ் ஸ்டேஷனில் கருகிய நிலையில் இருந்த இறந்தவனின் உடைமைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்த அதிகாரி அந்த செல்போனிலிருந்து வெளியே துருத்திக் கொண்டிருந்த ஆண்டெனா போலிருந்த சின்னக் கம்பியை அதிசயமாய் பார்த்தார்.

பெங்களூர்.

எத்தனை நாளாய் அடைப்பட்டிருக்கிறோம் என்று தெரியாமல் தவித்தான் வைபவ். அது ஒரு சவுண்ட் ப்ரூஃப் அறை. கத்துவது வெளியே கேட்காது. கடத்தி வரப்பட்ட நாளில் மயக்கமானவன் முழிக்கும் போது இங்கே இருந்தான். வசதிகளுக்கு ஏதும் குறைவில்லை. ஆனால் எதற்காக கடத்தப்பட்டோம் என்பது மட்டும் தெரியவில்லை. பகலும் இரவும் எப்போது வருகிறதென்பதே தெரியவில்லை. அங்கிருந்த ப்ரிஜ்ஜில் வேண்டிய பழங்களும் ரொட்டியும் தண்ணீரும் இருந்தது. ஒருவாரத்திற்கு தாங்கும். கதவு எந்நேரமும் பூட்டப்பட்டிருந்தது. அறையை ஓட்டியே அட்டாச்ட் பாத்ரூம். மாற்றிக் கொள்ள துணிமணி. ஆனால் வெளியுலகத் தொடர்பு மட்டும் துண்டிக்கப் பட்டிருந்தது. அவன் கையிலிருந்த வாட்சையும் செல்போனையும் எடுத்துவிட்டுருந்தனர்.

எதுவானாலும் சரி ஒருவாரத்திற்கு மேல் இருக்கப் போவதில்லை என்று புரிந்தது. யாராய் இருக்கும் என்று யோசித்ததிலேயே தலையை வலித்தது. அவன் பொழுது போக்க புத்தங்கள். அதுவும் அவனுக்கு விருப்பமான நாவலாசிரியர்கள். நேரம் கழிக்க அவன் அந்த புத்தகத்தை எடுத்த போது ஊருக்கு ஒதுக்குப்புறமாய் இருந்த அந்த வீட்டின் காம்பௌண்டுக்குள் அந்த மாருதிவேன் நுழைந்தது.

0 comments:


Blogger Templates by Isnaini Dot Com. Powered by Blogger and Supported by ArchiThings.Com - Modern Architecture Design