Friday, June 25, 2010

உன்னை தற்கொலை செய்யவா??!! - பகுதி 6

அமெரிக்காவில் விர்ஜினியா மாகாணத்தில் லேங்க்லி. மிகவும் பேர் பெற்ற இடம். உலகையே ஆட்டிப் படைக்கும், படைப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் அமெரிக்க ராஜ்யத்தின் முக்கிய உளவுப் பிரிவான சி.ஐ.ஏ.வின் தலைமையகம். அடர்ந்து வளர்ந்திருந்த காட்டு மரங்களுக்கிடையே அமைதியாக அமைந்திருந்தது அந்த வளாகம். மிகப்பெரிய வளாகம். ஏறக்குறைய ஐந்தடுக்கு பாதுகாப்பு வளையம் அமையப்பெற்றது. அனுமதிக்கப்பட்டவரைத் தவிர வேறு யாரும் அவ்வளவு எளிதில் உள்ளே நுழைந்துவிட முடியாது. பாதுகாப்பிற்காக அந்த ஏரியா முழுவதும் விமானம் பறக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது. உலகில் நடக்கும் எண்ணற்ற சம்பவங்களுக்கு காரணகர்த்தாவான அந்த மையம் பற்பல ரகசியங்களைக் கொண்டிருந்தது.

பனிக்காலமாகையால் எங்கும் வெள்ளைநிற பனிக்கட்டிகள் பரவியிருக்க சில்லென்று பனிப்பொழிவும் இருந்ததது. வெள்ளை நிற பனித் துகள்கள் மேலிருக்க மின்சார வேலியின் பக்கமிருந்த காவலர் வாசலுக்கு சர்ரென்று வந்து நின்ற அந்த நிஸ்ஸான் அல்டிமா காரில் இருந்தவரை அடையாளம் கண்டு வழிவிட்டனர் செக்யூரிட்டி. காரை ஒரு ஓரமாய் பார்க் செய்த கோட் சூட்டிலிருந்த கனவான் மைக்கேல். சி.ஐ.ஏவின் அந்தப்பிரிவின் தலைமை செயலதிகாரி. அதிபரின் ஆலோசனைக்குழுத் தலைவர். இவரின் கட்டளைக்கு கீழ் பணிபுரிய உலகெங்கிலும் பல்லாயிரம் ஊழியர்கள் சாதாரண குடிமக்கள் வேடத்திலிருந்தனர். காரிலிருந்து இறங்கியவுடன் மேல் போர்த்தியிருந்த ஜெர்கினை இழுத்துக் கொண்டு கண்ணாடிகளைப் பதித்து கட்டப்பட்டிருந்த அந்த கட்டிடத்தை நோக்கி நடந்தார். வழியில் அவரை கண்டு கொண்டவர்கள் வைத்த வணக்கங்களை வாங்கிக் கொண்டு பரபரப்பாக நடந்தார். பரபரப்பு எப்பவுமே அவரிடம் தொற்றிக் கொண்ட ஒரு வியாதி.

முதல் வேலையாக உள்ளே நுழைந்ததும் அந்த பெரிய கான்ஃப்ரண்ஸ் அறைக்குள் நுழைந்தார். விஸ்தீரணமான அறை, குஷன் வைத்த நாற்காலிகள், மிகப்பெரிய ப்ரொஜக்டர், நீல நிற வெளிச்சம் அந்த அறையை பிரம்மாண்டமாய் காட்டியது. உள்ளே நுழைந்தவர் நாற்காலியில் தன் ஜெர்கினை மாட்டிவிட்டு அமர்ந்தவுடன் அங்கிருந்தவர்களைப் பார்த்தார். அவர் முகத்தைப் பார்த்ததும் அவர்களில் மூத்தவரான அந்த கண்ணாடி அணிந்த அதிகாரி ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார்.

“வணக்கம் மைக்கேல். இந்நேரம் உங்களுக்கு அந்த செய்தி கிடைச்சிருக்கும் என்று நம்புகிறோம்.”

மௌனமாக தலையாட்டினார் மைக்கேல். தொண்டையை கனைத்துக் கொண்டு மறுபடியும் பேச ஆரம்பித்தார் அந்த அதிகாரி. ப்ரொஜக்டர் திரையில் காண்பிக்கப்பட்ட அந்த படங்களை காண்பித்து,

“இது தான் நம்ம சாட்டிலைட் எடுத்து அனுப்பிய புகைப்படங்கள். இந்தியாவில் ஐதராபாத்திற்கு அருகில் இருக்கும் கிராமம்…”

“இங்க தெரிவது தான் அந்த செய்தியில் இருந்த ரைஸ்மில். கிராமத்திற்கு ஒதுக்குப்புறமாய் அமைந்திருக்கிறது.”

“அங்க தான் இந்திய அரசாங்கம் ஏதோ ரகசிய ஆராய்ச்சி நடத்திக்கிட்டு இருக்கிறது. நம்பத் தகுந்த தகவல் இது. இந்த புகைப்படங்கள் எடுத்து ஒரு மாதமாகிறது. இதற்கிடையில் தான் இந்திய அரசாங்கம் அவங்க நிலா பயணத்தை அறிவிச்சிருக்கிறது. அதற்கும் இதற்கும் சம்பந்தம் இருக்கு.”

திரையில் சாட்டிலைட்டிலிருந்து எடுக்கப்பட்ட படங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மாற ஆரம்பிக்க மேலும் அந்த அதிகாரி தொடர்ந்தார்.

“இந்த கிராமமே சந்தேகத்திற்கிடமான கிராமம். இப்படி ஒரு கிராமம் அஞ்சு வருஷத்திற்கு முன் இருந்ததா அங்க பதிவுலேயே இல்ல. திடீர்னு முளைச்சிருக்கு. இதுவும் எங்க சந்தேகத்திற்கு காரணம். இதைப்பற்றி மேலும் விவரங்கள் சேகரிக்க சொல்லி இருக்கிறோம்.”
முடித்தார் அந்த அதிகாரி.

அதுவரை மௌனமாக தலையை மட்டும் ஆட்டிக்கொண்டிருந்த மைக்கேல் பேச ஆரம்பித்தார்.

“அங்க நமக்கு எதிரா இந்தியா ஏதும் ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்காங்கன்னு சொல்றீங்களா?”

“ஒரு அனுமானம் தான். தெளிவா சொல்ல முடியாது. ஆனா விண்வெளி சம்பந்தமா ஏதோ செய்யறாங்கன்னு மட்டும் நல்லா தெரியுது. அது இந்த மூன் மிஷனுக்கா கூட இருக்கலாம். மேற்தகவல்களுக்காக காத்திருக்கிறோம்.”

“ரைட்.. நல்ல காரியம். இந்த இடத்துல என்ன நடக்குதுனு கண்டுபிடிக்க இவ்வளவு நாளா?”

“அந்த ஏரியாவுல யாரும் வெளி ஆளுங்க உள்ளே நுழைய முடியறதில்லை. அப்படி போன நம்ம ஆளுங்க இரண்டு பேரை காணவில்லை. அந்த ஏரியா முழுக்க பாதுகாப்பா வைச்சிருக்காங்க.”

“ம்ம்.. சரி. ஒரு வேளை இது வழக்கமா நமக்கு தண்ணி காட்டுற வேலையா இருந்தா? பொக்ரான் ஞாபகம் இருக்குல்ல.”

“நல்லாவே ஞாபகம் இருக்கு. ஒரிசா பக்கம் வண்டிகளை அனுப்பிட்டு பொக்ரான்ல சோதனை செஞ்சாங்க. உண்மையிலேயே அந்த சம்பவம் நமக்கு சறுக்கல் தான். அதற்கப்புறம் அங்க நம்ம பலத்தை இன்னும் கூட்டிட்டோம். இப்போ சில பெரிய தலைகளுக்கு வலையை விரிக்க ஆரம்பிச்சிருக்கோம். கூடியவிரைவிலேயே எல்லா தகவல்களோடு வர்றேன்”

தலையாட்டிக் கொண்டே தன் அறைக்கு போக கிளம்பினார் மைக்கேல். காலை எழுந்ததும் முதல் வேலையாய் அமெரிக்க அதிபருடன் பதினைந்து நிமிடங்கள் பேசுவார் அவர்களுக்கென்றே இருக்கும் ப்ரத்யேக டெலிபோன் இணைப்பில். யாரும் ஒட்டு கேட்க முடியாது. முதல் நாள் நடந்த சம்பவக்கோர்வையை தெரிவித்தபின் தற்போதைய பிரச்சனையைப் பற்றி பேசுவர். சுருக்கமாய் தான் இருக்கும் அவர்கள் பேச்சு. அதற்கப்புறம் அலுவலகத்திற்கு வந்தவுடன் அதிபருக்கு அனுப்ப வேண்டிய ரிப்போர்ட்களை ஒரு முறை சரி பார்த்து அனுப்பி வைப்பார்.

மீட்டிங் முடிந்ததும் தன்னறைக்கு வந்தவர் கதவை மூடிவிட்டு இருக்கைக்கு வந்தார். அன்றைக்கு அதிபருக்கு அனுப்ப வேண்டிய தகவல்களை சரிபார்த்து அனுப்பி வைத்தார். கொஞ்ச நேரம் ஆனதும் அவருக்கென இருந்த தனிப்பட்ட டெலிபோன் லைனில் அந்த நம்பரை டயல் செய்தார்.

மறுமுனையில் எடுக்கப்பட்டதும் அடையாள எண்ணைக்கூறினார். அவரது அடையாளத்தை மறுமுனை அங்கீகரித்தது. அது சாட்டிலைட் போன் ஆகையால் எந்த நாட்டினரும் ஒட்டு கேட்க இயலாது. சுருக்கமாக சொன்னால் என்க்ரிப்டட் லைன்.

அமெரிக்க ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார் மைக்கேல்.

“என்னவாயிற்று?”

“நேற்று தான் சந்திப்பு முடிந்தது. இருக்குமிடம் தெரிந்துவிட்டது. பாதுகாப்பு பலமாக இருக்கும் போல. ஏதாச்சும் வழிவகை செய்யவேண்டும்.”

“ம்ம். ஏதேனும் தேவைப்பட்டால் நம் உதவி தகுந்த நேரத்தில் வரும்.”

போனை வைத்து விட்டு ஆல்பர்ட்டுக்கு போன் செய்தார்.

ஆல்பர்ட் அவருடன் உளவு வேலைகளில் பணியாற்றிய அதிகாரி. நீண்ட காலமாக ஒருவரை ஒருவர் அறிவர். ஆறுமாதத்திற்கு முன் தான் உளவுப்பிரிவிலிருந்து ப்ரமோஷனில் வந்திருந்தார் மைக்கேல். பொதுவில் அவர் நடவடிக்கைகள் எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் ரகசிய உளவுப்பிரிவிலும் அவர் கை ஓங்கி இருந்தது.

“ஆல்பர்ட்..?”

“யெஸ்… ஸ்பீக்கிங்..”

“இன்னிக்கு மதியம் லஞ்ச் .. ஒகேவா?”

“ம்ம். ரைட்டோ”

“ஓக்கே.. டாக்கோ பெல்ஸ். வார்னர் ரோட்”

போன் துண்டிக்கப்பட்டது.

சரியாய் நண்பகல் பன்னிரண்டு மணிக்கு அவர் கார் கிளம்பியது. அருகிலிருந்த ஊருக்குள் சென்று வார்னர் ரோட்டில் இருந்த டாக்கோ பெல்ஸ் கடைக்குள் நுழைந்தார். அவருக்கு முன்னே ஆல்பர்ட் அங்கே காத்திருக்க ஆளுக்கொரு பரிட்டோ ஆர்டட் செய்து வாங்கிக் கொண்டு ஓரமாய் இருந்த இருக்கையில் அமர்ந்தனர்.

கடையில் கூட்டம் கம்மியாக இருந்தது. கண்ணாடி சுவர்கள் இருந்ததால் வெளியில் போகும் வாகனங்களைப்பார்த்துக் கொண்டே சாப்பிடலாம். சாதம் அடைக்கப்பட்ட நம்மூர் சப்பாத்தி போல் இருந்த அந்த் பரிட்டோவை கடித்துக் கொண்டே பேச ஆரம்பித்தார் மைக்கேல். அந்த கடை அவர்களுக்குப் பாதுகாப்பான கடை. ரகசிய பாதுகாப்பில் இருந்தது.

“தற்போதைய நிலவரம் என்ன?”

“நம்ம ஆள் சென்னை போய் சேர்ந்தாச்சு. தக்க பாதுகாப்பில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்.”

“தெரியும். சற்று முன் தான் பேசினேன்”

“என்னென்ன தேவைப்படும்?”

“இப்போதைக்கு அந்த ரைஸ்மில்லுக்குள் நுழைய வேண்டும். கிடைத்த தகவல்படி அந்த இடம் நிறைய அடுக்கு பாதுகாப்பு கொண்டது. நம் ஆள் உள்ளே நுழைய அவகாசம் வேண்டும்”

“அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது. இன்னும் இரு மாதங்கள் கூட இல்லை. அதற்குள் அந்த யந்திரத்தில் என்னென்ன இருக்கிறது என்று தெரிந்தாக வேண்டும்.”

“கண்டுபிடித்துவிடலாம்.”

“எப்படியோ. இன்று தான் அந்தப்பிரிவு ஆட்கள் அந்த கிராமத்தைப் பற்றியே கண்டுபிடித்திருக்கிறார்கள். ஒன்று அந்த ரைஸ்மில்லுக்குள் என்ன நடக்கிறது என்று தெரியவேண்டும். இல்லையேல் அந்த ரைஸ்மில்லையே அழிக்க வேண்டும். ஏதாச்சும் ஒன்று செய்தாக வேண்டும். நிலைமை ரொம்ப மோசம். புரிகிறதா?”

“புரிகிறது. “

“எனக்கு இன்னும் இரண்டு நாளில் அப்டேட் வேணும். என்ன ப்ளான் என்னவென்று”

“சரி.”

சாப்பிட்டு முடித்தக் கையோடு இருவரும் தத்தம் காரில் கிளம்பினார்கள். ஆல்பர்ட்டும் பின்னால் போய் கொண்டிருந்த மைக்கேல் ஓரமாக தன் வண்டியை நிறுத்தி விட்டு சாட்டிலைட் போனில் அந்த ந(ம்)பரை தொடர்பு கொண்டார்.

பேசி முடித்ததும் அலுவலகத்திற்கு கிளம்பினார் மைக்கேல்.

சென்னை புறநகர். நேரம் இரவு மணி பத்தை தாண்டியிருந்தது. ஆத்மானந்தா ஏற்பாடு செய்திருந்த ப்ளாட் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தது. நாராயண ரெட்டி கொடுத்திருந்த தகவல்கள் ப்ராங்கின் திட்டத்திற்கு போதுமானதாய் இருந்தது. மேஜை மேல் ஹைதராபாத்தை சுற்றியுள்ள பகுதிகளின் வரைபடமும், இதர மின்னணு சாதனங்களும் இருந்தன. நீண்ட நேரமாக அவன் வேலையில் முழுகியிருந்ததை ஆஸ்ட்ரேயில் கொட்டிக் கிடந்த கிகரெட் துண்டுகள் காட்டிக் கொடுத்தன. காலையிலேர்ந்து பழங்களும் பாலும் மட்டுமே சாப்பிட்டு வெளியிலே போகாமல் இருந்தான். இது அவனுக்கு தரப்பட்டிருந்த பயிற்சியில் ஒன்று. சந்தேகத்திடமாக எங்கேயும் பகலில் சுற்றக்கூடாதென்பது.
ஒரு வழியாக பல கோடுகளை அந்த மேப்பில் கிறுக்கியபின் நிமிர்ந்தான். அருகிருந்த மடிக்கணினியில் ப்ராக்ஸி ஐ.பி. வழியாக தனக்கு வேண்டிய தகவல்களை தேடிக் கொண்டான். அவனது திட்டத்தை ஆரம்பிப்பதற்கான விஷயங்கள் இருந்தன. இது போதும். மேலும் வேண்டிய விஷயங்களை ஆரம்பித்தவுடன் பார்த்துக் கொள்ளலாம்.

மனதில் திருப்தி ஏற்பட்டவுடன் தன் முகத்தில் அப்படி ஒரு குரூரப் புன்னகையை பரவ விட்டான் தனக்கு இதுவே கடைசியாய் இருக்கப் போகின்றதென்பதை அறியாமல்.

1 comments:

Unknown said...

உங்களுக்கு அறுபதாம் கல்யாணம் ஆகறதுக்கு முன்னாடி, இந்த கதையை முடிச்சுடுவீங்க-ன்னு எனக்கு ஒரு திடமான நம்பிக்கை இருக்கு...
ஆல் தி பெஸ்ட்.,
sir, I'm afraid, I'd forget many of your character names., yaar yaaro seththu seththu poraanga... Muthalla unga kadhaiyoda Hero heroine yaarunnu oru pakkamaa unga blog oorathula eluthi vainga..


Blogger Templates by Isnaini Dot Com. Powered by Blogger and Supported by ArchiThings.Com - Modern Architecture Design